OUR CLIENTS
சங்கர் ஆணவ கொலை வழக்கு கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சங்கர் ஆணவ கொலை வழக்கு கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Posted on 13-Dec-2017 சங்கர் ஆணவ கொலை வழக்கு கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பூர், டிச.13
உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 குற்றவாளிகளுக்கு  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22) என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா (19) என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு 2016, மார்ச் மாதம் 13-ம் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ்நிலையத்திற்கு சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சங்கர் - கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார்.

இந்த கொலை குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படை மூலம் கொலை செய்ததாக கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி(45), தாய் அன்னலட்சுமி(40), தாய்மாமா பாண்டித்துரை(49), மற்றும் மணிகண்டன்(25), மைக்கேல் (எ) மதன்(25), செல்வக்குமார்(25), ஜெகதீசன்(31), தன்ராஜ்(23), தமிழ் கலைவாணன்(24), கல்லூரி மாணவர் பிரசன்னா(19), மற்றொரு மணிகண்டன்(39) ஆகிய 11 பேரை கைது செய்தனர். 

மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் 67 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பில், சிறப்பு அரசு வக்கீல் கமிட்டி அமைக்கப்பட்டு 5 அரசு வக்கீல்கள் வாதாடினர். இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், டிசம்பர் 12-ம் தேதி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அலமேலு நடராஜன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று கோர்ட் வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நீதிபதி அலமேலு நடராஜன் காலை 9.30 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் பாண்டித்துரை தவிர மற்றவர்கள் கோவை சிறையில் இருந்து காலை 10.20க்கு ஆஜர்படுத்தப்பட்டனர். பாண்டித்துரை திருச்சி சிறையில் இருந்து 11.35 மணிக்கு அழைத்து வரப்பட்டார். 

இதையடுத்து, மதியம் 12.10 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்க துவங்கினார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகியோரின் மீதான குற்றம் நிரூபிக்கப்படாதால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார். கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 8 பேர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள்  குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் தரப்பு நீதிபதியிடம் முறையிட்டனர். அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டனை விபரங்களை அறிவித்தார். கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

‌சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கபட்ட தண்டனை குறித்து கவுசல்யா கூறியதாவது:-

எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்கு ஒன்றரை வருடங்களாக காத்துகிடந்தேன். இந்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது வழக்கு முடியும் வரை நீதிமன்ற காவலில் வைத்திருந்தது அரிதிலும் அரிது. ஜாதிய கவுரவ கொலை வழக்கில் இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும். தூக்கு தண்டனை பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையில் எனது கருத்து வேறாக இருப்பினும் தீர்ப்பு ஜாதி வெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்வேன். தண்டனை கிடைத்தவர்கள் மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்த்தும் வழக்காடுவேன். 

3 பேரின் விடுதலையை எதிர்த்து இறுதி வரை சட்ட ரீதியாக போராடுவேன்.  சங்கருக்கு உரிய நீதி இந்த வழக்கோடு முடிந்து விடவில்லை. தனிச்சட்டம் படைப்பதுதான் இந்த வழக்கிற்கு தீர்வாக அமையும். எனக்கும் சங்கரது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. அதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கவுசல்யா கூறினார்.

Label