OUR CLIENTS
ஓகி புயல் பாதிப்பு உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு
ஓகி புயல் பாதிப்பு உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு Posted on 13-Dec-2017 ஓகி புயல் பாதிப்பு  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு

கன்னியாகுமரி, டிச.13&
ஓகி புயலால் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரணம் மற்றும் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கூறினார்.

குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த மீனவர்கள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னையிலிருந்து நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் சென்றார். மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவல்கிணற்றில் இருந்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நேராக தூத்தூர் மீனவ கிராமத்திற்கு சென்றார். புனித யூதா ததேயூ கல்லூரியில் 8 கிராம மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

தூத்தூர் கிராமத்தில் பேசும்பொழுது ஓகி புயல் காரணமாக உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்ட ரூ 10 லட்சத்தை 20 லட்சமாக உயர்த்தி அரசு வழங்கும் என அறிவித்தார். உயிரிழந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கும் இதே போன்ற நிவாரண உதவிகள் கிடைக்கும் வகையில் விதிகளைத் திருத்த உரிய ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார். புயலில் சிக்கிய மீனவர்களின் படகுகள் பலத்த சேதம் அடைந்திருப்பதாகவும் சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரியுள்ளனர். இக்கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்கிறது. 

படகுகள் எந்த அளவு சேதம் அடைந்துள்ளனவோ அந்த அளவுக்கு நிவாரணம் வழங்குவதுதான் பொருத்தமாக அமையும். சேதமடைந்த படகுகளை நிபுணர் குழு பார்வையிட்டு சேதத்துக்கு ஏற்ற நிவாரணம் வழங்க பரிந்துரை வழங்கும். அதனடிப்படையில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஒட்டு மொத்த இழப்பீடு குறித்து மதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரை கிடைத்ததும் அதனடிப்படையில் முழுமையான நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.  பின்னர், தூத்தூரிலிருந்து மணவாளக்குறிச்சியை அடுத்த வெள்ளிமலை, கல்படி ஏலாவில் விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாயமான மீனவர்களை மீட்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் புயல் நிவாரண பணிகள் பற்றி கேட்டறிந்தார். 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி; ஓகி புயலால் உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

முதல்வரின் கன்னியாகுமரி சுற்றுப்பயணத்தின்போது, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. விஜயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தா.கி. இராமச்சந்திரன், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜ்ஜன் சிங் ஆர். சவான், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Label