OUR CLIENTS
இருசக்கர வாகன விற்பனையகங்களில் இலவச சர்வீஸ் என நுகர்வோரை அழைத்து நூதன முறையில் பகல் கொள்ளை!
இருசக்கர வாகன விற்பனையகங்களில் இலவச சர்வீஸ் என நுகர்வோரை அழைத்து நூதன முறையில் பகல் கொள்ளை! Posted on 13-Dec-2017 இருசக்கர வாகன விற்பனையகங்களில்  இலவச சர்வீஸ் என நுகர்வோரை அழைத்து நூதன முறையில் பகல் கொள்ளை!

வேலூர், டிச.13
வேலூர் மாநகரில் மக்கள் வசிக்கும் வீடுகளில் டிவி உள்ளதோ இல்லையோ, ஒவ்வொரு வீட்டிலும் இருசக்கர வாகனம் கட்டாயம் வைத்துள்ளதை காண முடிகிறது.  அந்த அளவுக்கு இருசக்கர வாகனங்களின் விற்பனை வேகமாக நடைபெறுகிறது. இதற்கு பல கம்பெனிகளின் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம்கள் உள்ளன.

இந்த ஷோரூம்களில் தேங்கி கிடக்கும் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்காக வேலூரில் பல இடங்களில் நெடுஞ்சாலை ஓரமாக ஒரு குடைபோட்டு கொண்டும், அங்கே 10 வாகனங்களை நிறுத்திக்கொண்டும் விற்பனை மேளா நடத்துகிறார்கள். ஒரு டிஜிட்டல் பேனர் வைக்க வேண்டும் என்றாலே மாநகராட்சியில் அனுமதி பெறவேண்டும். ஆனால் இவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் விற்பனை  மேளா நடத்துகிறார்கள். பொதுமக்கள் இருசக்கர வாகன மேளாவுக்குச் சென்றால், ஒரு வாகனத்தின் விலை, இன்சூரன்ஸ் மற்றும் சுலப மாத தவணை என பல தகவல்களை அவர்களுக்கு விளக்கி கூறுகின்றனர். அதற்கு உட்பட்டு பொதுமக்கள் முன்பணம் கொடுத்து வாகனத்தை வாங்கிச் செல்கின்றனர். அவ்வாறு வாங்கியவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதற்கு ஷோரூம் நடத்துபவர்களே காரணமாகும். மேலும் வாகனங்களை இன்ஸ்சூரன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்யாமலும், இதற்கு 15 நாட்களாகும் என்கின்றனர். இதற்கிடையே இருசக்கர வாகனம் தொலைந்து விட்டால் வாங்கியவர்கள் கதி அதோகதிதான். 

இந்த நிலைக்கு ஆளாக்-குவதே வாகன ஷோரூம் உரிமையாளர்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பின்னர் வாகனம் வாங்கியவர்களிடம், எங்கள் விற்பனை ஷோரூமுக்கு உங்கள் இருசக்கர வாகனங்களை கொண்டு வாருங்கள், அதற்கு நாங்கள் இலவசமாக சர்வீஸ் செய்து தருகிறோம் என்று நைசாக தேனொழுக பேசி கூவி கூவி அழைக்கின்றனர். அதன்படி இருசக்கர வாகனத்தை  விற்பனை ஷோரூமிற்கு எடுத்துச் சென்றால், நல்ல நிலையில் இயங்கும் உதிரி பாகங்களை கழற்றி எடுத்துக் கொள்கின்றனர் இந்த பஞ்சமா பாதகர்கள்.  இதையடுத்து ஒரு சில பொருட்கள் இயங்கும் நிலையில் இல்லை என்று தவறான தகவலை தெரிவிப்பதோடு, புதிய உதிரி பாகங்களை வாங்க வேண்டும் என்று அந்த நுகர்வோரை ஏமாற்றி நூதன முறையில் பகல் கொள்ளை அடிக்கின்றனர்.
 
இதனால் இருசக்கர வாகன உரிமையாளருக்கும் ஷோருமில் உள்ளவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்படுகிறது. இதற்கிடையே பழுதான பொருட்களை மாற்றி விட்டோம் என ஒரு நீளமான பில் போட்டு பணத்தை அந்த நுகர்வோரிடம் கறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் ஷோரூம் நடத்துபவர்கள் கொழிக்கின்றனர். வாகனம் வாங்கியவர் திண்டாடுகிறார். இப்படி வாடிக்கையாளர் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி பணத்தை கறப்பதை இந்த சர்வீஸ் சென்டர் நடத்துபவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். உண்மையாக உதிரி பாகங்களை மாற்றி மாற்றி வேறு வாகனங்களுக்கு பொறுத்தி விட்டு சர்வீஸ் சென்டரில் பணம் பார்த்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இது டீலர் கொடுத்த கம்பெனிகள் அடிக்கடி அந்த சர்வீஸ் சென்டரை சோதனையிட வேண்டும். மதிப்பெண் போடுவதாக சொல்லி நுகர்வோரை ஏமாற்றி வருகின்றனர். பல ஷோரூம்களில் உதிரி பாகங்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இருப்பு இல்லை என்ற பதிலையே நுகர்வோருக்கு கூறி வருகின்றனர். புதிய வாகனங்களை நுகர்வோர் தலையில் கட்டி விடுவதோடு அவர்களது கடமை முடிந்து விடுவதாக ஷோரூம் நடத்தும் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் நினைத்து கொண்டு செயல் படுகின்றனர். 

நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினால் சேவை குறைபாடு ஏற்படுத்தியதாக வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக சட்டம் சொல்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இலவச சர்வீஸ் என்று வாகனங்களை வரவழைத்து நிற்க வைத்து இலவசமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீஸ் போடுவது கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலீஷ் போட தனியாக ரூ.75 கறாராக வசூலிக்கப்படுகிறது.   

பெரிய கம்பெனி இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் என்பதாலும், அங்கே நல்ல முறையில் பழுது பார்ப்பார்கள் என நம்பித்தான் வாகன ஷோரூமில் வாகனங்களை நுகர்வோர் விட்டுச் செல்கின்றனர். ஆனால் இங்கு நடப்பதோ வேறு விதமாகத்தான் உள்ளது. ஆனால் அங்கே ஏமாற்று வேலை நடக்கிறது. வெளியே உள்ள மெக்கானிக் கடையில் வாகனத்தை சர்வீசுக்கு விட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தெரியாமல் விற்பனை ஷோரூமில் விட்டுவிட்டேனே, இதுபோன்ற தில்லு முல்லு நடக்கும் விற்பனை ஷோரூம்களை யார் தட்டிக் கேட்பது என இரு சக்கர வாகன உரிமையாளர்கள் மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

இனியாவது இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதோடு தனது கடமை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் அந்த வாகனங்களுக்கு சர்வீஸ் என்று குறிப்பிடுவது போல சேவை செய்வார்களா வேலூரில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலைய ஷோரூம்கள். பொதுநலம் கருதாமல் சுயநலத்துடன் செயல்படும் ஷோரூம்கள் மனம் திருந்துவார்களா? இல்லை அந்த வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நுகர்வோர் புகார் மனு அனுப்பி அவர்களது ஏஜென்சியை கேன்சல் செய்ய நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருவதை ஷோரூம் வைத்துள்ளோர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். மைலேஜ் குறைவாக வருகிறது என்று கேட்டால் சரியாக பதில் சொல்வது இல்லை. இப்படி பல சேவை குறைபாடுகளை களைய  ஷோரூம் நடத்துவோர் முன்வர வேண்டும் என்பதே நுகர்வோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. உதிரி பாகங்களை மாற்றி விட்டு  புதிய உதிரி பாகங்களை பொறுத்துவதற்கு பெயர் பழுது நீக்குவது என்று அர்த்தம் ஆகாது. பழுதான உதிரி பாகங்களை பழுது நீக்கி தருவதற்கு பெயர்தான் ரிப்பேர் சரி செய்வது என்று பொருள்படும். உதிரிபாகங்களை உண்மையில் மாற்றினார்களா இல்லையா என்பது மட்டும் புலப்படுவதில்லை. மெக்கானிக்குகள் சொல்வதே வேதம் என்பதுபோல நாமூம் பில் தொகை கட்டவேண்டியதாகிறது. அவர்களாகவே உண்மையுடன் நடந்துகொண்டால் மட்டுமே இதற்கு தீர்வு என்பது நிதர்சனம்.  

ஆதலால் நுகர்வோருக்கு அதிகம் செலவு வைக்காமல் வாகனங்களை சரியான முறையில் பழுது நீக்கி இயங்கும் நிலையில் நுகர்வோரிடம் ஒப்படைப்பதுதான். இந்த நிலை என்று மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஷோரூம் நடத்துவோர் மனம் திருந்துவார்களா? மக்களுக்கு சேவை செய்வார்களா? பணத்தில் குறியாக இருப்பார்களா? காலம்தான் பதில் சொல்லும். 

Label