OUR CLIENTS
நாடாளுமன்ற தாக்குதலின் 16ம் ஆண்டு நினைவு நாள்
நாடாளுமன்ற தாக்குதலின் 16ம் ஆண்டு நினைவு நாள் Posted on 14-Dec-2017 நாடாளுமன்ற தாக்குதலின் 16ம் ஆண்டு நினைவு நாள்

புதுடெல்லி, டிச. 14
நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றோடு 16வது ஆண்டுகள் ஆகிவிட்டன.
இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன என்பதை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்

16 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான், ஜனநாயகத்தின் மையப்புள்ளியான இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வாகனத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருந்ததால், சோதனை ஏதுமின்றி நாடாளு மன்ற வளாகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுடத் தொடங்கினர். அமைதி தவழும் நாடாளுமன்ற வளாகம், துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தால் அதிர்ந்து போனது.

என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், பாதுகாப்புப் படை வீரர்கள் குண்டுபாய்ந்து சரிந்து விழுந்தனர். ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டபோதும், 6 வீரர்கள் உள்பட 7 பேர் தங்கள் இன்னுயிரை இழக்க நேரிட்டது.
மூன்றரை ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், 2005 ஆகஸ்ட் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட ஜீலானி, சவுகத் மற்றும் அப்சல் குரு ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டில் கிலானி விடுவிக்கப்பட்டு, சவுகத் மற்றும் அப்சல் குரு மீதான மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் குழப்பங்கள் அரங்கேற, சவுகத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைக்கப் பட்டது. சர்ச்சைக்குரிய வாத, விவாதங்களுக்கு நடுவே 2013ம் ஆண்டில் அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார்.

அப்சல் குருவின் மரணதண்டனையில் சர்ச்சைகள் இருந்தாலும், ஒரு தேசத்தின் உச்ச அதிகாரம் நிரம்பிய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியதை எப்படி ஜீரணிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள். ஜனநாயகக் கோட்டையாகத் திகழும் இந்தியாவின் ஒரு கல்லைக்கூட தங்களால் அசைக்க முடியாது என்பதை சதித்திட்டம் தீட்டிய கயவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பது நிச்சயம்!

Label