OUR CLIENTS
ஆளுநர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
ஆளுநர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! Posted on 14-Dec-2017 ஆளுநர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

சென்னை, டிச.14
புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து வலியுறுத்தினார். 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலாலை நேற்று சந்தித்து ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார். அவருடன் கனிமொழி எம்.பி., முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராஜன், மனோ.தங்கராஜ், ஆஸ்டின் மற்றும் திமுக மீனவரணிச் செயலாளர் கே.பி.பி.சாமி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.


மு.க.ஸ்டாலின் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:- சோகத்தில் ஆழ்ந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் மீனவ சமுதாயத்தினரின் கதறல் குரல் கேட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரில் சென்று, துயரத்தில் வாடும் மக்களை சந்தித்துப் பேசினேன். மேலும், பொறுப்பற்ற முறையில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்ணுற்று மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், இந்த மோசமான புயலில் இருந்து மக்களையும், அவர்களது உடமைகளையும் பாதுகாக்க மாநில நிர்வாகம் முற்றிலும் தவறியிருக்கிறது. மாநிலத்தின் முதல்வரோ, இந்த துயரமான பேரிடர் குறித்தும், இன்னல்களுக்கு உள்ளான மக்கள் பற்றியும் துளியும் கவலைப்படாமல், நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களிலும், இடைத்தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். பேரிடர் நேரத்திலும் விழாக்களுக்குத்தான் அவர் முன்னுரிமை அளிக்கிறார்.

மாநிலத்தில் 97 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாக அரசின் தலைமைச் செயலாளர் இந்திய அரசாங்கத்துக்கு முதலில் தகவல் தெரிவித்தார். மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளரின் கூற்றை உறுதிப்படுத்தி விட்டு, 2,124 மீனவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளில், சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்டார். துணை முதல்வர் அவருடைய பங்கிற்கு இந்த எண்ணிக்கையை 2,384 மீனவர்கள் என அதிகரித்துக் கூறியதன் மூலம், ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்கள் மனதிலும் பீதியை ஏற்படுத்தினார்.

முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 2,570 மீனவர்கள் என்று ஒரு கணக்கை வெளியிட்டார்.  ஆனால், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள டி.கே.ராமச்சந்திரன், கடற்கரையோரங்களில் தவிக்கும் மீனவர்கள் எண்ணிக்கை 3,117 என்று அறிவித்தார். காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கை 554 என்று கூறிய முதல்வர், 260 மீனவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டார். தற்போது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரோ, “623 மீனவர்கள் காணவில்லை”, என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக, காணாமல் போன மீனவர்கள் பற்றியோ அல்லது பல்வேறு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் பற்றியோ உண்மையான, சரியான விவரங்கள் ஏதும் தமிழக அரசிடம் இல்லை என்பது தெளிவாகிறது. கடந்த டிசம்பர் 7 ஆம் தேதியன்று பிரதமருக்கு, தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இறந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் பற்றிய எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான ஆயிரக்கணக்கான மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலை நீடிப்பது மீனவ மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் கண்டு பிடித்து மீட்பதற்கு, மத்திய அரசின் தலையீடு உடனடியாக தேவைப்படுகிறது. மாநில அரசோடு இணைந்து மீனவர்களை தேடும் பணியில் மத்திய அரசு ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.  இந்திய மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல் மற்றும் கடலோரப் படையினர், கடல் எல்லைகளை கருத்தில் கொள்ளாமல் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மனிதாபிமான அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள நிலைமையைப் பார்க்கும் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மனித நேயமே வெளிப்படவில்லை என்பதால், தேடுதல் பணிகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பதோடு, பணிகள் திருப்திகரமாகவும் இல்லை என்பதே உண்மை. ஓகி புயல் தாக்கி 15 நாள்கள் ஆன பிறகும்கூட, காணாமல் போன மீனவர்கள் மற்றும் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் பற்றிய சரியான புள்ளி விவரங்களை மத்திய-மாநில அரசுகள் தெளிவாக அறிவிக்காதது, குமரி மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள பெரும் திரளான மீனவ மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி அறவழிப் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்திய கப்பற்படையுடன் உரியமுறையில் ஒருங்கிணைந்து செயல்படாமல் போனதன் மூலம், உரிய நேரத்தில் உடனடியாக செயல்படுவதை தவறவிட்ட தமிழ்நாடு அரசின் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்து நிற்கிறது.  அரசு நிர்வாகத்தின் வழக்கமான செயல்பாடுகள் கூட முழுமையாக செயலிழந்து நிற்பதால், மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மீட்புப் பணிகளில் உரிய கவனம் செலுத்தப்படாமல், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில்லாத ஒரு மெத்தனப்போக்கு இந்த ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, ஆளுநர் உடனடியாக அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை கையாண்டு, மத்திய அரசினை வலியுறுத்தி, ஆழ்கடலில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களை மீட்கும் வகையில், கப்பற்படையின் சார்பில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களை பயன்படுத்தி, மிகப்பெரிய தேடுதல் வேட்டையை முழு வீச்சில் தொடங்கிட உதவிட வேண்டும்.  ‘ஓகி புயல்” பாதிப்புக்குள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தை ‘தேசிய பேரிடர்’ மாவட்டமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது கோரிக்கையில் கூறியுள்ளார்.

Label