OUR CLIENTS
ஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை!
ஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை! Posted on 14-Dec-2017 ஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை!

வேலூர், டிச.14
வேலூர் அடுத்த ஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனை செய்யப்படும் கொடுமை நடந்து வருகிறது. அரசுக்கு வரியும் செலுத்துவது இல்லை. கனிமவளத்துறையினர் மற்றும் விற்பனை வரித்துறையினர் ஊசூரில் வலம் வந்தால் பல பெருச்சாளிகள் சிக்குவார்கள்.

வேலூர் அடுத்த ஊசூரில் செங்கல் சூளை அறுக்கும் தொழில் ஜரூராக நடந்து வருகிறது. இவர்கள் எந்த வரைமுறையும் இல்லாமல் தொழில் செய்து வருகின்றனர். இவர்களே செங்கல் விலையை நிர்ணயம் செய்து கொண்டு கொள்ளை லாபம் பார்த்து கொழிக்கின்றனர். பல வகைகளில் சீல் போட்டு செங்கற்களை தயாரிக்கின்றனர். இப்போது ஒர செங்கல்லின் விலை ரூ.5.70க்கு சூளை அடியில் விற்பனை செய்கின்றனர். இதை அங்கிருந்து தங்களது வீட்டுமனை அருகே கொண்டு செல்ல வேன், லோடு ஆட்டோ, லாரி, டிராக்டர், டிப்பர் லாரி என வாடகையாக ஒரு கல்லுக்கு ரூ.1 கறாராக வசூலித்து விடுகின்றனர்.  ஆனால் அரசுக்கு எந்தவித விற்பனை வரியும் செலுத்துவதே இல்லை. இவர்கள் செங்கல் தயாரிக்க இதுநாள் வரை எந்தவித உரிமமும் எடுக்காமல் மௌனமாக நாள் கடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஊசூரில் செங்கல் அறுக்க மண்ணை முறைகேடாக தங்களுக்கு தேவைப்பட்ட இடத்தில் இருந்து அள்ளிக் கொள்கின்றனர். இதனால் ஏரி, புறம்போக்கு நிலங்களில் அதளபாதாலத்துக்கு பள்ளம் உருவாக்கப்படுகிறது. இப்படி அனுமதியின்றி மண்ணை அள்ளிச் சென்று லாரிகளில் தங்கள் செங்கல் சூளையோரம் மலைபோல் குவித்து வைத்துள்ளனர் செங்கல் சூளை உரிமையாளர்கள். சில சூளைகளில் ஒரு குடும்பமே பிழைக்கிறது. சில செங்கல் சூளைகளில் கூலிக்கு ஆட்களை வைத்து செங்கல் அறுப்பது, சூளை போடுவது என்று தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ரூ.3.50 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்ட செங்கல் கார்த்திகை மாதம் ஆரம்பித்ததும், மழை பெய்கிறது கற்களை தயாரிக்க முடியவில்லை என்று பாட்டு பாடி ஒரு செங்கல்லின் விலையை திடீரென ரூ.6.70க்கு மனசாட்சியே இல்லாமல் உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வீடு கட்டுவோர் பலர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒருபுறம் மணல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் செங்கல்லும் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதால் வீடு கட்டுவோர் கூடுதலாக பல லட்சங்களை இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

செங்கல் விற்பனை செய்யும் தொழில் இந்த ஊசூரில் அமோகமாக நடந்து வருகிறது. பில் கிடையாது, அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை என்று அடாவடியாக விற்பனை செய்து வருகின்றனர். செங்கல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே பேசி வைத்தாற்போல செயல்படுகின்றனர். பொதுமக்கள் நேரடியாக சூளைக்கு சென்று செங்கல் வேண்டும் என்றால், வாகன வாடகையை இருமடங்காக கூட்டி ஏற்றி, இறக்க கூலியாக ஒரு கல் ஒன்றுக்கு தலா ரூ.2 தர வேண்டும் என்று கல்நெஞ்சத்துடன் கூறுகின்றனர். இவர்கள் மக்களுக்கு உதவவே இல்லை. மண்ணை திருடி செங்கல் அறுத்து சூளை போட்டு தொழில் நடத்துகின்றனர். இவர்கள் சூளை நடத்த பதிவும் செய்யவில்லை, விற்பனை செய்து வரும்  பணத்துக்கு விற்பனை வரியும் செலுத்துவது இல்லை.குறிப்பாக உலகநாதன் சூளையில் கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. அதற்கு அடுத்தாற்போல பொற்கொடி அம்மன் லாரி வைத்து கொண்டு செங்கல் சூளை நடத்துகின்றனர். இந்த லாரியின் பதிவு எண்: எம்டிஎச் 2877 ஆகும். இந்த சூளையின் உரிமையாளர் வேகாத கற்களையும், அதிகம் வெந்த கற்களையும், கரி படிந்த கற்களையும் விற்பனை செய்து வருகின்றார். 

அதோடு மட்டுமன்றி 4 ஆயிரம் செங்கல் கேட்டு ஆர்டர் புக் செய்தால், புக் செய்தவர் வீட்டுக்கு செங்கல் கொண்டு வந்து இறக்கும் போது அதில் 3,500 கற்கள் மட்டுமே இருக்கிறது. மீதமுள்ள 500 கற்களை லாரி ஓட்டுநர் மற்றும் அந்த லாரியில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோர் பகிர்ந்து எடுத்து கொள்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி வீடு கட்டுவோரை ஏமாற்றி பகல் கொள்ளை அடிப்பதோடு அவர்களை மொட்டையடிப்பதில் குறியாக உள்ளனர் செங்கல் சூளை அதிபர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் செங்கல் சிவப்பாக நிறம் மாற உப்பு போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஊசூரில் உள்ள செங்கல் உற்பத்தி செய்யும் சூளை அதிபர்கள் தில்லாலங்கடி வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வீடுகட்டுவோர் இனி விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஊசூரில் நடக்கும் பகல் கொள்ளைக்கு அளவே இல்லை என்று கூறலாம். கனிம வள துறை அலுவலர்கள் ஊசூரில் உள்ள சூளைகளை தணிக்க செய்ய தயாரா?. இயற்கை வளங்களை கொண்டு செங்கல் தயாரிக்கும் இதுபோன்ற நபர்கள் பொதுமக்களையே சுரண்டி பிழைக்கின்றனர். ஊசூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட சூளைகளில் கனிம வளத்துறையினர், வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும். இப்போது சென்றால் கூட அவர்கள் குவித்து வைத்துள்ள மண் மலைகளை கைப்பற்றலாம். திருட்டுத்தனமாக குவித்து வைத்துள்ள மண்ணை கொண்டு செங்கல் தயாரித்து விட்டு, அதை  விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர் இந்த பெருச்சாளிகள். இவர்கள் மீது ஈவு இரக்கமின்றி கனிம வளத்துறையும், வருவாய்த்துறையும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசிடம் அனுமதி பெறாமல் நடைபெறும் சூளைகளுக்கு சீல் வைக்கப்படுமா?. பல வழிகளில் ஜிஎஸ்டி போட்டு முறைப்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியின் வித்தை ஊசூரில் செயல்படும் செங்கல் சூளை அதிபர்களிடம் மட்டும் பலிக்காமல் போனது எப்படி? இதற்கு கனிம வளத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய விளக்கம் தர தயாராக உள்ளனரா?. ஊசூரில் செயல்படும் செங்கல் சூளைகளில் அதிரடி ரெய்டு நடக்கிறதா? இல்லை வழக்கம்போல கையூட்டு பெற்றுக் கொண்டு நாங்கள் இருக்கிறோம், எதற்கும் அஞ்சாதீர்கள் என்று இந்த அரசுத்துறையினர் தைரியம் ஊட்டப்போகிறார்களா?. இதற்கு அரசும், அரசு அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் என்னதான் தீர்வு ஏற்படுத்துகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label