OUR CLIENTS
ரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் :ராமதாஸ் அறிக்கை
ரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் :ராமதாஸ் அறிக்கை Posted on 15-Dec-2017 ரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் :ராமதாஸ் அறிக்கை

சென்னை, டிச.15-
ரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள்,  கட்டுனர்கள் என 2976 பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டிருக்கிறது.

சுமார் 3 ஆயிரம் பேருக்கு பொதுத்துறை நிறுவன வேலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் போதிலும் அதற்கான ஆள்தேர்வு நியாயமாக நடக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.

பொது வினியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 25,532 முழு நேர நியாயவிலைக் கடைகள் 9154 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 34,686 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை, வேலூர், பெரம்பலூர், தேனி,  கரூர் ஆகிய மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் 2976 விற்பனையாளர்கள், கட்டுனர்கள்  தேர்வு செய்யப்படவுள்ளனர்.  இந்த அறிவிப்பு தான் பல வகையான ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த முறையில் தான் முறைகேடுகளை தவிர்க்க முடியும்.  ஆனால், வேலைவாய்ப்பக பதிவின் அடிப்படையில் மட்டும் பணி நியமனங்களை மேற்கொள்ள முடியாது என்றும், ஆள்தேர்வு குறித்து பொது அறிவிப்பு வெளியிட்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யா தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்று  தான் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அனைவருக்கும் பொதுவாக போட்டித் தேர்வு நடத்தப்பட்டு தான் பணியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கே போட்டித் தேர்வு மூலம் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனும் போது, 12-ம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர் பணிக்கும், பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட கட்டுனர் பணிக்கும் போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறையல்ல. அதிலும் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்துவதால் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.

ஆளுங்கட்சி ஆதரவாளர்களும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்களும் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, தகுதியும், திறமையும் உள்ளவர்கள் புறக்கணிக்கப்படும் ஆபத்துள்ளது.

எனவே, நியாய விலைக்கடை பணி யாளர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.  அதுமட்டுமின்றி முறையே 12ம் வகுப்பு, 10 ம் வகுப்புத் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு  ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அடுத்த  ஆண்டு முதல் முறையே ரூ.4,300, ரூ.3,900 அடிப்படை ஊதியம் வழங்குவதும் மிக மிகக் குறைவானதாகும்.

எனவே, விற்பனை யாளர்களுக்கு 12-ம் வகுப்புத் தகுதி கொண்ட அரசு ஊழியர்களுக்கு இணையாகவும், கட்டுனர்களுக்கு பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட அரசு ஊழியர்களுக்கு இணையாகவும் அடிப்படை  ஊதியம் மற்றும் தர ஊதியம் நிர்ணயிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Label