OUR CLIENTS
ஓகி புயலில் பலியான விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்த கோரி குமரியில் இன்று முழு அடைப்பு: பா.ஜனதா, விவசாயிகள் அமைப்பு ஆதரவு
ஓகி புயலில் பலியான விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்த கோரி குமரியில் இன்று முழு அடைப்பு: பா.ஜனதா, விவசாயிகள் அமைப்பு ஆதரவு Posted on 15-Dec-2017 ஓகி புயலில் பலியான விவசாயிகளுக்கு  நிவாரணம் உயர்த்த கோரி  குமரியில் இன்று முழு அடைப்பு: பா.ஜனதா, விவசாயிகள் அமைப்பு ஆதரவு

நாகர்கோவில், டிச.15-
ஓகி புயலில் பலியான விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கேட்டு குமரியில் இன்று முழு அடைப்பு. போராட்டத்துக்கு பா.ஜனதா மற்றும் விவசாயிகள் அமைப்பு ஆதரவு அளித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தை ஓகி புயல் தாக்கியதில் ஏராளமான விவசாய பயிர்கள் சேதத்தை சந்தித்தது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களும் மாயமானார்கள். பலர் பலியானார்கள். இறந்து போன மீனவர்களுக்கு நிவாரணம் கேட்டும், மாயமானவர்களை கண்டுபிடிக்க கோரியும் மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இதனை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதனால் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதேபோன்று, குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான வாழை, தென்னை, ரப்பர் மரங்களும், பயிர் நிலங்களும் சேதமடைந்தது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று புயலில் பலியான விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.  

இந்நிலையில், இந்த நிவாரண நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், பலியான விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர்.  தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று முன்தினம்  பகல் 11 மணி அளவில் விவசாயிகள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து பா.ஜனதாவினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து  பாதிக்கப்பட்டது. இதில் திரளான பெண்களும், கைக்குழந்தையுடன் பங்கேற்றனர்.

போராட்டம் நடத்தி யவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினார்கள். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் திடீரென பலத்த மழை பெய்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் கொட்டும் மழையிலும் சாலை மறியலை தொடர்ந்தனர். நடுரோட்டில் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப் பட்டது. விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்க்ரா அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கலெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அவர்கள் கூறியதால் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோர் அங்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். விவசாயிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு மாலை 4 மணி அளவில் தங்கள் மறியலை கைவிட்டனர். இதனால் 5 மணி நேரத்துக்கு பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது.

இதுபற்றி பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இந்த புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே அவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், 13 நாளாக நாங்கள் போராட்டம் நடத்தியும் எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.   

இப்போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட விவசாயிகளுக்கும் ஒக்கி புயலால் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது. புயல், மழையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜனதா முழு ஆதரவு அளிக்கிறது. பொது மக்களும், வியாபாரிகளும் இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர்  தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இது போல குமரி மாவட்ட நீர் பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, பூமி பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் பத்மதாஸ், பாசன சபை கூட்டமைப்பு தலைவர் புலவர் செல்லப்பா, வேளாண் உற்பத்தி குழு தலைவர் செண்பகசேகரபிள்ளை மற்றும் குமரி மாவட்ட அனைத்து விவசாய அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக ஒட்டு மொத்த விவசாயமும் அழிந்து விட்டது. விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே கேரள மாநிலத்தை போல உயிர் இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறும் முழு அடைப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

Label