OUR CLIENTS
மொபைல் கடைகள் ஆக்கிரமிப்பு தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசல்! குறட்டை விடும் போக்குவரத்து பிரிவு போலீசார்!
மொபைல் கடைகள் ஆக்கிரமிப்பு தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசல்! குறட்டை விடும் போக்குவரத்து பிரிவு போலீசார்! Posted on 15-Dec-2017 மொபைல் கடைகள் ஆக்கிரமிப்பு  தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசல்! குறட்டை விடும் போக்குவரத்து பிரிவு போலீசார்!

வேலூர், டிச.15-
வேலூர் சிஎம்சி அவுட் கேட் அருகே தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசலால் தங்குதடையின்றி செல்லும் போக்குவரத்து இயங்க முடியாத அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக போக்குவரத்து பிரிவு போலீசார் குறட்டை விடும் நிலையில் இருந்து வருவதே இதற்கு காரணமாகும்.


வேலூர் என்றதும் நினைவுக்கு வருவது சிஎம்சி மருத்துவமனை. இந்த மருத்துவமனை தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய மருத்துவமனையாக திகழ்கிறது. இந்த மருத்துவமனைக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி அயல்நாட்டில் இருந்தும் நோயளிகள் வந்து செல்கின்றனர். 

பொதுவாக அங்கு டாக்டர்கள், மருத்துவமாணவர்கள், நோயாளிகள்  என அங்கு நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளன.  இந்நிலையில் வேலூர் சிஎம்சி அவுட் கேட் அருகில், அதாவது காட்பாடியில் இருந்து வேலூர் வரும் வழியில் ஒரு தனியார் மொபைல் போன் கடை உள்ளது. இவர்கள் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லை.  இதே போன்று ராஜா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு தனியார் மொபைல் போன் கடைகள் உள்ளது. அங்கும் தனியார் மொபைல் ஷாப்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகின்றனர். இதனால் பஸ்நிறுத்தம் இடத்தில் அதிக நெரிசல் ஏற்படுகினறன. ராஜா தியேட்டர் சிக்னல் உள்ளதால் மேலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. 

அதுமட்டுமின்றி, இவர்கள் ஒட்டி கடை வைத்துக் கொண்டு செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் விற்பனை செய்ய விளம்பர குடையை சாலையில் வைத்து போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்துகின்றனர். இதை கண்டும் காணாமல் போக்குவரத்து பிரிவு போலீசார் செயல்படுகின்றனர். இந்த குடை வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் முளைக்க ஆரம்பித்து விடுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கார்கள் அந்த குடை உள்ள இடத்துக்கு அருகில் சாலையோரம் நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர். இந்த கார்களை பின்தொடர்ந்து ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. 

இப்படி தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வேலூர் மாநகர வாகன ஓட்டிகள் சின்னாபின்னமாகின்றனர்.  பலர் இந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் மூச்சு முட்டி திணறியபடியே வாகனங்களை இயக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதாக புலம்பியவாறு செல்வதையும் தினமும் கண்களால் காண முடிகிறது. குறிப்பாக தர்மராஜர் கோயிலில் இருந்து காமராஜர் சிலையை கடந்து செல்ல மட்டுமே 10 நிமிடங்களுக்கு மேல் நேரம் செலவாகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றும் செக்யூரிட்டிகள் தடையில்லாமல் செல்லும் போக்குவரத்தை தடை செய்து அவர்கள் மருத்துவமனைக்கு உள்ளிருந்து வரும் வாகனங்களை வெளியே அனுப்புவதில் குறியாக உள்ளனர். இதனால் மேலும் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. 

இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து பிரிவு போலீசார் ஒருவர் கூட இந்த பகுதியில் காணமுடியாது. இதற்கு பின்னணியில் இருப்பது என்ன என்று பார்த்தால் மாமூல்தான். இந்த குடை வைத்து செல்போன் விற்பனை செய்யும் கடைக்காரர் மாதாமாதம் கவனித்து விடுகிறாராம். வேலூரில் சத்தம் இல்லாமல் நடக்கும் இதுபோன்ற கையூட்டு விவகாரம், மாமூல் வாங்கும் விஷயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வேலூர் மாநகர வாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தினமும் இதுபோன்ற அநியாயம் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் எந்த காவல் துறை உயரதிகாரியும் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் என்ன? என்பதே விடைதெரியாத கேள்வியாக உள்ளது. 

இதுதொடர்பாக சுட்டிக் காட்டி விரிவான செய்தி வெளியிட்டும் நடவடிக்கை என்னவோ எடுக்காமல் அடம் பிடிக்கின்றனர் செல்போன் கடையில் மாமூல் வாங்கும் நன்றி மறவா போலீசார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த குடையை அகற்ற முடியாதா? செய்ய முடியாதா? மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்ட போக்குவரத்து பிரிவு போலீசார் ஏன் தனியார் கடை முதலாளிகளுக்கு வால் பிடிக்கின்றனர். இதன் பின்னால் ஒளிந்திருப்பது என்ன என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கவனிப்பவர்களை கண்டுகொள்வதே இல்லை போக்குவரத்து பிரிவு போலீசார். வேலூர் என்றால் புரட்சி மண் என்று அழைக்கப்படுகிறது. இதை மெல்ல மாற்றி இன்றுள்ள போலீசார் மாமூல் மண் என்று மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவு போலீசாராக பணியாற்றுவதில் ஒரு சிலர் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் பணியாற்றுகின்றனர், மக்களுக்கு சேவையாற்றுகின்றனர். ஆனால் பலர் வசூல் வேட்டை நடத்தவே பயன்படுத்தி கொள்கின்றனர். டயர் வண்டியில் மணல் எடுத்து வருவோரை குறி வைத்து வண்டி ஒன்றுக்கு ரூ.200 வசூல் செய்வது, செங்கல் லோடு லாரிகள் சென்றால் ஒரு வாகனத்துக்கு ரூ.100, மணல் லோடு ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு தலா ரூ.1000, அதே லாரி மீது வழக்குப்பதிவு செய்வதாக கூறி மிரட்டி தலா ரூ.30 ஆயிரம் பறிப்பது, ஜல்லி லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு தலா ரூ.100, நெல் அறுக்கும் இயந்திரங்களுக்கு தலா ரூ.200 என்றும், காற்றாலைகளை பாரம் ஏற்றிச் செல்லும் டிரெய்லர் லாரிகளுக்கு தலா ரூ.500 என்று பட்டியலிட்டு மெகா வசூல் வேட்டை நடந்த வண்ணம் உள்ளது. இது ஒருபுறம் கண்ணுக்கு தெரியாமல் வசூலாகும் சைடு மாமூல் ஆகும். 

லாரி டிரைவர்கள் உண்டியலில் காசு போடுவது போல் போலிஸ் நிழற்குடையில் காசு போட்டுவிட்டு செல்கின்றனர்.  கடமையை செய்வதை விட்டு விட்டு வசூல், வசூல் என்று அலையாய் அலைந்து திரிகின்றனர் போக்குவரத்து பிரிவு போலீசார் என்று சொன்னால் அது மிகையாகாது. லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்தை கேட்கும் போதே புதுஉத்வேகம் ஏற்படுகிறது. 

இப்படிப்பட்ட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற ரீதியில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இப்படி நடந்து கொள்வது முறையா? இது சரியா? என்பதே பொதுமக்களின் மனதில் ஒட்டுமொத்தமாக எழுந்துள்ள கேள்வியாகும். அத்துடன் எந்த பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசார் பணியாற்றுகின்றார்களோ அங்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் சென்று இலவசமாக வீட்டில் உள்ளவர்களுக்கும் சேர்த்து உணவு பார்சல் செய்து எடுத்து கொண்டு தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கின்றனர் வேலூர் மாவட்ட போலீசார். பர்மிட் இல்லாத ஆட்டோக்கள், ஒரே பதிவு எண் கொண்ட ஆட்டோக்கள் என வேலூரில் முறைகேடாக பல வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதையெல்லாம் பிடிக்காமல் சிலை போல நின்று கொண்டு செல்போனில் மணிக்கணக்கில் பேசியபடி நேரத்தை கடத்திவிட்டு கூலாக அந்த இடத்தை விட்டு அகல்கின்றனர் வேலூரில் பணியாற்றும் கடமைவீரர்கள். ஒரு சிலர் காவல் துறையில் உள்ள உயரதிகாரிகளையே ஐயா என்று அழைக்க கூச்சப்படுகின்றனர். இந்த நிலை தற்போது பணியில் உள்ள பல போலீசாரிடம் காணப்படுகிறது. 

வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் செல்லியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோக்கள் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லை. பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், லாங்கு பஜாரில் தடையை மீறி லாரிகள் செல்லக்கூடாத நேரத்தில் லோடு இறக்க உள்ளே புகுவதற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழிவகுத்து தருகின்றனர். இதுபோன்ற குறைகளை களைய போக்குவரத்து பிரிவு போலீசார் முன்வருவதே இல்லை? ஏன்? இதற்கு பதிலளிக்க போக்குவரத்து பிரிவு போலீசார் தயாராக உள்ளார்களா?. காவல் துறை உயரதிகாரிகள் பெயரை கெடுத்து குட்டிச்சுவராக்கவே இதுபோன்ற செயல்கள் மாநகரில் தொடர்கின்றன. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், காவல் துறை துணைத்தலைவர் வனிதா ஆகியோர் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். எந்த ஒரு காவல் துறை உயரதிகாரியும் பதவியேற்கும் போதும் செய்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் தரும் தகவல்களை பார்த்தால் நமது மாவட்டத்துக்கு சிறந்த அதிகாரி கிடைத்து விட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை பார்த்தால் என்னவோ அப்படியே தொடருவது போன்றே உள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும். துளி கூட மாற்றம் இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலை மாறுவது எப்போது? மக்களுக்கு காவல் துறை சேவை கிடைப்பது எப்போது? மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் பயணிப்பது எப்போது? போக்குவரத்து பிரிவு போலீசார் கடமையை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label