OUR CLIENTS
விண்ணைத் தொடும் கட்டுமானப் பொருட்களின் விலை!
விண்ணைத் தொடும் கட்டுமானப் பொருட்களின் விலை! Posted on 18-Dec-2017 விண்ணைத் தொடும் கட்டுமானப் பொருட்களின் விலை!

வேலூர், டிச. 18-
வேலூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் தொழிலுக்கு பெயர் போனது கணியம்பாடி. இங்கு 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இப்போது வீடு கட்டுவோர் ஒரு செங்கல்லை தலா ரூ.6.30க்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது கணியம்பாடி செங்கல் சூளையில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி அவசர கோலத்தில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் பல வீடு கட்டுவோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வேகாத செங்கற்களை கொண்டு வந்து வீடு கட்டும் நுகர்வோர் தலையில் கட்டி விட்டு பணமாக்கிச் சென்று விடுகின்றனர் சூளை அதிபர்கள். அதாவது அனுபவமில்லாதவர்களிடம் இதுபோன்ற நூதன கொள்ளையடிப்பதை செங்கல் சூளை அதிபர்கள் வாடிக்கையாக (தொழிலாக) கொண்டுள்ளனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் மழை பெய்வதாகவும், இதனால் சூளை போட முடியாது என்று சொல்லி செங்கல் விலையை ரூ.6.30க்கு உயர்த்தி விற்பனை செய்து லாபம் ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு கொழிக்கின்றனர் செங்கல் சூளை அதிபர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. வரும் ஜனவரி மாதம் 1ம் தேதிக்கு பிறகுதான் இவர்கள் செங்கல் சூளை நடத்த உரிமம் பெற முனைப்போடு காணப்படுவார்கள் என்று தெரிகிறது.

அதற்குள்ளாக கிடைப்பதை வாரி சுருட்டிவிட வேண்டும் என்று கணியம்பாடியில் இருந்து பக்கத்து மாநிலமான ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்துக்கு பல செங்கல் சூளைகளில் இருந்து பர்மிட் இல்லாத லாரிகள் செங்கல் லோடுகளை ஏற்றிச் சென்று லோடு இறக்கி விட்டு கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். இதுபோன்ற லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் கண்காணித்து அந்த லாரிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர்கள் தரும் ரூ.200க்கு ஆசைப்பட்டு சோதனையே செய்யாமல் பர்மிட் இல்லாத லாரிகள் சுதந்திரமாக இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. இது சட்டத்தை ஏமாற்றும் வேலையாகும். இன்று கட்டடம் கட்டுவோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ரூ.4க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு செங்கல்லின் விலை இப்போது மெல்ல மெல்ல உயர்த்தப்பட்டு ஒரு செங்கல் ரூ.6.30க்கு விருப்பம்போல உயர்த்தி கொண்டுள்ளனர். இப்போது மழையா பெய்கிறது?. கேட்டால் மழை பெய்கிறது, சூளை போட முடியவில்லை என்று தவறான பதிலை சொல்லி வீடு கட்டுவோரை ஏமாற்றி வருகின்றனர் செங்கல் சூளை அதிபர்கள். 

செங்கல் தயாரிக்க எங்கிருந்து மண் எடுக்கப்படுகிறது? இந்த மண்ணுக்கு முன் அனுமதி பெறப்பட்டதா? எத்தனை சூளைகள் முறையாக பதிவு செய்துள்ளனர் என்ற கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. கனிமவளத்துறை அலுவலர்கள் கடமையை மறந்து இருக்கையில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்து விட்டு, செங்கல் சூளைகள் செயல்படும் இடமான கணியம்பாடி. ஊசூர், லத்தேரி, வள்ளிமலை போன்ற பகுதிகளுக்குச் சென்றால் பல சூளைகளுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டிய சூழல் நிலவுவது வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும். ஏன் இதில் சுணக்கம் காட்டி வருகின்றது கனிம வளத்துறை என்பது புரியாத புதிராக உள்ளது. இதற்கு அடுத்தாற்போல வருமான வரித்துறையினர் செங்கல் விற்பனை செய்வதற்கு சரியாக வரி செலுத்துவது இல்லை. வரி ஏய்ப்பு நடந்து வருகிறது. முதலில் இந்த செங்கல் சூளை தயாரிக்கும் தொழிலில் மண் திருட்டை தடுத்தாலே போதும் பலர் தொழில் செய்ய முடியாமல் அவர்களே நிறுத்தி கொள்வார்கள். இதுபோன்ற முறைகேடான தொழிலை தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது.

மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளை அதிபர்களை கண்காணித்து இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். வரி ஏய்ப்பு ஒருபுறம், மற்றொருபுறம் தரமில்லாத கற்கள் விற்பனை செய்யப்படுவது தடுத்து நிறுத்த ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label