OUR CLIENTS
குஜராத், ஹிமாச்சலை பாஜக கைப்பற்றியது
குஜராத், ஹிமாச்சலை பாஜக கைப்பற்றியது Posted on 19-Dec-2017 குஜராத், ஹிமாச்சலை  பாஜக கைப்பற்றியது

புதுடெல்லி, டிச.19-
குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம்  சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. நேற்று வெளியான முடிவுகளின்படி 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. வெற்றியைத் தேடிதந்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக் கூறுவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம்
குஜராத் மாநில சட்டமன்றத்தில் 183 இடங்கள் உள்ளன. ஒரு இடம் நியமன உறுப்பினருக்கானது. மீதமுள்ள 182 இடங்களுக்கு நேற்று முடிவுகள் வெளியாகின. இவற்றில் 99 இடங்களில் பாஜகவும், இந்திய தேசிய காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய வாத காங்கிரஸ் 1 இடத்திலும், பாரதீய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேசிய வாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சென்ற முறை உறுப்பினராக இருந்தது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வாக்களித்ததால் இந்த முறை கூட்டணியில் இடம்பெறவில்லை.

பாரதீய பழங்குடியினர் கட்சியும், சுயேட்சைகளும் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தாலும் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 82ஐ தாண்டாது. எனவே, பாஜக மட்டுமே குஜராத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

பாஜகவுக்கும் 2வது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பெற்ற வாக்குகள் அளவை பொறுத்தமட்டில் 7.7 சதவீத வித்தியாசம் உள்ளது.

பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 49.1. அதற்கான வாக்குகள் 147,15,897; காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 41.4. அதற்கான வாக்குகள் 124,30,964; 7.7 சதவீத வாக்கு வித்தியாசம் காரணமாக 22 தொகுதிகளை காங்கிரஸ் இழந்துள்ளது. சுயேட்சைகள் ஒட்டு மொத்தமாக 4.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் 1 சதவீத வாக்குகளைக்கூட பெறவில்லை. இம்முறை அறிமுகம் செய்யப்பட்ட நோட்டா பிரிவு 1.8 சதவீத வாக்குகளை பெற்று மற்ற அரசியல் கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 68 ஆகும். வாக்குப் பதிவு நடந்த 40 நாட்களுக்குப் பிறகு நேற்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 தொகுதிகளை கையகப் படுத்தியுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சென்ற முறை 36 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தது. இந்திய மார்க்சிஸ்ட் கட்சி ஒரே ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. இரு தொகுதியில் சுயேட்சையும் வெற்றிபெற்றுள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 48.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 41.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இரண்டு கட்சிகளுக்கு இடையேயுள்ள வாக்கு வித்தியாசம் 6.9 சதவீதம். இந்த வித்தியாசம் காரணமாக 23 தொகுதிகளை காங்கிரஸ் இழந்துள்ளது.

இங்கு பதிவான வாக்கு எண்ணிக்கை 75.28 சதவீதமாகும். நோட்டா பிரிவில் கிட்டத்தட்ட 1 சதவீத வாக்குகள் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி நோட்டா வாக்குகளைவிட 0.5 சதவீதம் கூடுதலாகப் பெற்று 1 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் காங்கிரஸின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது.  ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட துமால் தோல்வியை தழுவியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் பெறாவிட்டாலும், அங்கு முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கும், அவரது மகன் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

குஜராத்தில் போட்டியிட்ட முதல்வர், துணை முதல்வர்கள், அமைச்சர்கள் எல்லோருமே வெற்றி பெற்றுள்ளனர்.

மோடி நன்றி ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் வெற்றி குறித்து டுவிட்டரில் முன்னரே மக்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

நேற்று மாலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மக்கள் பாஜகமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், பாஜகவை மீண்டும் ஆட்சிஅமைக்க தேர்வு செய்துள்ளனர். இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை உறுதியாக்க பாடுபட்ட பாஜக தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ரூபாய் நோட்டுக்களை செல்லாது என மோடி அறிவித்துவிட்டார். அத்தோடு சிக்கலான ஜிஎஸ்டி வரியையும் கொண்டுவந்தார். இந்த இரண்டுமே மோடிக்கு தோல்வியை கொண்டுவரும் என்று பலரும் தெரிவித்தனர். ஆனால், மக்கள் ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ததையும், ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்ததையும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றே கூற வேண்டும். மீண்டும் பாஜகவுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

Label