OUR CLIENTS
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் Posted on 19-Dec-2017 ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம்

சென்னை, டிச.19-
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம்  இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, கடந்த மாதம் 27-ம் தேதி முதல் கடந்த 4-ம் தேதி வரை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 145 வேட்பு மனுக்கள் வந்தன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. 145 மனுக்களில் 72 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியில் இருந்து விலக விரும்புபவர்கள் கடந்த 7ம் தேதியன்று வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.  வேட்பு மனு பரிசீலனை முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 பேரின் மனுவில், 13 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 59 பேர் களத்தில் போட்டியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான அன்று இரவே வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சின்னம் கிடைத்த மறு நாளில் இருந்தே அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களும், பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறறும் கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.  தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவு கேட்டு தி.மு.க. செயல் தலைவர்  மு.க. ஸ்டாலின், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வாக்கு சேகரிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வாக்கு சேகரிக்கின்றனர்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து சீமான் மற்றும் கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.  சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.  ஏனைய சுயேச்சை வேட்பாளர்களும் ஆர்.கே.நகர் மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகின்றனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.  பிரசாரம் முடிந்ததும் தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூரை சேர்ந்த கட்சிக்காரர்கள் வெளியேற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.  இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிந்ததும் தொகுதிக்கு சம்பந்த மில்லாத  வெளியூரை சேர்ந்த, கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பிரசாரம் முடிந்ததும் கண்காணிப்பார்கள்.

Label