OUR CLIENTS
பொலிவுறு நகரம் திட்டம் புதுவைக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு!
பொலிவுறு நகரம் திட்டம் புதுவைக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு! Posted on 19-Dec-2017 பொலிவுறு நகரம் திட்டம் புதுவைக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு!

புதுச்சேரி, டிச.19-
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், புதுவைக்கு ரூ. 98 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் 100 நகரங்களைப் பொலிவுறு நகரங்களாக மாற்ற முடிவு செய்தது. அதற்கான பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றது. இதற்காக ரூ. 1,850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மத்திய அரசு ரூ. 500 கோடி, மாநில அரசு ரூ. 500 கோடி, பிரெஞ்சு அரசு ரூ. 500 கோடி, வெளிச்சந்தையில் கடனாக ரூ. 350 கோடி நிதியில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பொலிவுறு நகரில் மொத்தம் 63 தனித் தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கிடையே பொலிவுறு நகரப் பணிகளுக்காக மத்திய அரசு முதல் கட்டமாக வழங்க வேண்டிய ரூ. 200 கோடியில் ரூ. 98 கோடியை வழங்கியுள்ளது. மாநில அரசும் தன்னுடைய பங்குத் தொகையை விரைவில் வழங்கும்.

ஏற்கெனவே, பொலிவுறு நகரத் திட்டப் பணிகளில் இடம் பெற்றுள்ள மேரி கட்டடம் கட்டுமானப் பணி உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 16 கோடியில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பொலிவுறு நகரத் திட்ட அதிகாரியும், உள்ளாட்சிச் செயலருமான ஜவகர் கூறியதாவது: பொலிவுறு நகரத் திட்டப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ. 98 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தூய்மை வீதி மற்றும் ரோமன்ட் ரோலன்ட் வீதிகளில் தனியாக மிதிவண்டிப் பாதை மற்றும் அழகான நடைபாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். இதற்கான திட்டவரையறை தயாரிக்கப்பட்டு, 3 மாத காலத்தில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம்.

இனி சொத்து வரியுடன், குப்பைக்கான வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமாக வருவாய் கிடைக்கும். பொலிவுறு நகரம் திட்டத்தைப் பொறுத்தவரை, திட்டங்கள், தொகை ஒதுக்குவது தொடர்பாக, இதற்காக அமைக்கப்பட்ட வாரியம்தான் முடிவு செய்யும் என்றார் அவர்.

கடற்கரை செயற்கை மணல் பரப்புத் திட்டம்: புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பை உருவாக்கும் திட்டம் மார்ச் மாதம் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செயற்கை மணல் பரப்பை உருவாக்க, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகமும், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ரூ. 25 கோடியில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

தலைமைச் செயலகம் எதிரே கடலில் கூம்பு வடிவிலான அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, கடலில் 200 மீட்டர் நீளத்துக்கு கருங்கற்கள் கொட்டப்பட்டு இடம் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, கான்கிரீட் கட்டைகள் தயாரிக்கப்பட்டு பதிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக கடலில் 50 மீட்டர் தொலைவில், தண்ணீரில் மூழ்கக் கூடிய இரண்டு தடுப்புச் சுவர்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக, அலையின் வேகத்தைக் குறைக்கும் வகையில், கய்சன் ரீப்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீரில் மூழ்கக் கூடிய ஒவ்வொரு ரீப்புகளும் 125 மீட்டர் நீளத்திலும், 100 மீட்டர் அகலத்திலும் அமைய உள்ளன. இந்தப் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Label