OUR CLIENTS
கிறிஸ்துமஸ் சிறப்பு மனிதர்களுடன் வாழ்ந்த தேவகுமாரன்
கிறிஸ்துமஸ் சிறப்பு மனிதர்களுடன் வாழ்ந்த தேவகுமாரன் Posted on 19-Dec-2017 கிறிஸ்துமஸ் சிறப்பு  மனிதர்களுடன் வாழ்ந்த தேவகுமாரன்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மனித சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே அமைந்த நிகழ்வாகும். இவ்வுலகும், மனித சமுதாயமும் ஒவ்வொரு நாளும் பாவத்தில் திளைத்துக் கொண்டு இருப்பதாலும், மனிதம் தொலைந்து போனதாலும் மனிதன் சகமனிதனை நேசிக்க மறந்து போனதாலும், சுயநலம் தலை விரித்தாடுவதாலும் மனிதனின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகப் போய்விட்டது. பல இன்னல்களையும் உபத்திரவங்களையும் சந்தித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்திற்குள் மனித குலம் தள்ளப்பட்டது. இவைகளுக்கு மாற்று தான் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு. இந்த இன்னல்களையும் உபத்திரவங்களையும் மேற்கொண்டு வெற்றி பெறவே ஆண்டவர் இவ்வுலகில் வந்துதித்தார்.


எனினும் துணிவுடன் இருங்கள்
“என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன் (யோவான் 16:33)”. மனித வாழ்வின் ஈடேற்றத்திற்காகப் பல பரிமாணங்களை அவர் நமக்குக் காண்பித்தார். பெத்லகேமில் குழந்தையாகப் பிறந்த இயேசு பெத்லகேமிலேயே குழந்தையாக இருந்து விடவில்லை.

இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்துவந்தார். “பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.” என்று இயேசுவின் ஆவிக்குரிய வல்லமையை விவிலியம் பேசுகிறது.

அவர் நகரங்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.” என இயேசு அநேகருடைய குறை வாழ்வை நிறை வாழ்வாக்கியதை விவிலியம் பேசுகிறது.

அதன் உச்சக்கட்டமாக, இயேசு சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் இயேசு கல்லறையிலேயே இருந்து விடவில்லை. அவர் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த உலக ரட்சகர் உலகிலேயே இருந்துவிடவில்லை. நமக்கு உதவி செய்யும்படி தேற்றரவாளனாகவும், போதிக்கிறவராகவும், நம்முடைய இறை மன்றாட்டுகளில் நமக்கு உதவி செய்பவராகவும் இருக்க, பரிசுத்த ஆவியானவரை உலகில் அனுப்புவதற்காகப் பரத்திற்கு ஏறிப் போனார். பரத்திற்கு ஏறிச் சென்றவர் பரலோகத்திலேயே இருந்துவிடப் போவதில்லை.

அவர் மறுபடியும் வந்து நம்மைத் தம்மோடு இருக்கும்படி நம்மைப் பரம வீட்டுக்கு அழைத்துச் செல்வார். “தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்த பின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன் (யோவான் 14:3) என அதை விவிலியம் ஊர்ஜிதப்படுத்துகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை
இப்படி ஆண்டவர் இயேசுவின் பிறப்பு முதல் அவரது இரண்டாம் வருகை வரை மனித வாழ்வின் மாற்றத்தை மையப்படுத்தியே அமைகிறது. மனிதன் பூமியிலிருந்து சந்திரனுக்குச் சென்று கால் பதித்தது அறிவியல் மற்றும் இயந்திரவியல் வளர்ச்சியைக் காட்டுவதாக அமையலாம். ஆனால் கடவுள் விண்ணிலிருந்து பூமியில் வந்து கால் பதித்தது மனித வாழ்வின் துவக்கத்தையும் முடிவையும் அறிந்துகொள்வதற்காகவே. கடவுளை மனிதனிடம் கொண்டு வந்த கிறிஸ்துமஸ் கற்றுக் கொடுக்கும் பாடம் கடவுளின் பேரன்பின் வெளிப்பாடு. உலகைப் படைக்கும்போது வெளிப்பட்ட கடவுளின் அன்பு என்றும் மாறாதது. அந்த அன்பு அளவிட முடியாதது. அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

Label