OUR CLIENTS
வட மாநில கொள்ளையரை பிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் பரிசளிப்பு
வட மாநில கொள்ளையரை பிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் பரிசளிப்பு Posted on 20-Dec-2017 வட மாநில கொள்ளையரை பிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் பரிசளிப்பு

சென்னை, டிச.20-
ஏ.டி.எம்., மையங்களில் கைவரிசை காட்டி வந்த, வட மாநில கொள்ளையரை பிடித்த, கோவை கமிஷனர், பெரியய்யா, நாமக்கல் எஸ்.பி., அருளரசு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் பாராட்டி பரிசளித்தார். உ.பி.,யைச் சேர்ந்த, பவாரியா கும்பல், தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என, அட்டூழியம் செய்து வந்தது. அந்த கும்பலை, டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரி, ஜாங்கிட் தலைமையிலான போலீசார் ஒழித்துக் கட்டினர். பின், சென்னையில், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட, வட மாநில கொள்ளையர் ஐந்து பேரை, ஏ.டி.ஜி.பி., திரிபாதி தலைமையிலான போலீசார், ‘என்கவுன்டர்’ செய்தனர்.

இந்நிலையில், டிச., 9 மற்றும், 10ல், கோவை, பீளமேடு பகுதியில் உள்ள, மூன்று ஏ.டி.எம்., மையங்களில், 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில கொள்ளையர், எட்டு பேரை, கோவை கமிஷனர், பெரியய்யா தலைமையில், கோவை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொள்ளையரிடம் இருந்து, இரு கார்கள், ஒரு லாரி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

 இந்த கொள்ளையர்கள், மஹாராஷ்டிராவில், 11 இடங்கள்; ஆந்திர மாநிலம், கர்நூல்; கேரள மாநிலம், திருச்சூர் மற்றும் வேலூர், மதுரை, திருப்பூர் மாவட்ட ஏ.டி.எம்., மையங்களில் கொள்ளையடித்து வந்தது தெரிய வந்தது. பல ஆண்டுகளாக, வெவ்வேறு மாநில போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநில கொள்ளையரை, முதன் முதலாக, கோவை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட தனிப்படை போலீசார் தான் கைது செய்துள்ளனர்.

வட மாநில கொள்ளையரை, மிகவும் சாதுரியமாக துப்பு துலக்கி கைது செய்த, கோவை கமிஷனர், பெரியய்யா, நாமக்கல் எஸ்.பி., அருளரசு, கோவை குற்றப்பிரிவு துணை கமிஷனர், பெருமாள்...நாமக்கல் ஏ.டி.எஸ்.பி., செந்தில், கோவையைச் சேர்ந்த, மூன்று உதவி கமிஷனர்கள், இரு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினரை, டி.ஜி.பி., -- டி.கே.ராஜேந்திரன்,  நேரில் அழைத்து, பாராட்டி பரிசு வழங்கினார். வட மாநில கொள்ளையரை பிடிக்க, நாமக்கல் மாவட்ட போலீசில் உள்ள மோப்ப நாய், பொய்கை பெரிதும் உதவி உள்ளது. நாமக்கல் மாவட்டம், குட்டை மேடு கிராமத்தில் உள்ள, சோளக்காட்டில் பதுங்கிய கொள்ளையர் விட்டுச்சென்ற பையை கவ்வியது. அதற்காக, பொய்கைக்கு சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர், ரமேஷூக்கு, டி.ஜி.பி., பரிசு அளித்தார்.

கொள்ளையரை பிடித்ததில், நாமக்கல் மாவட்டம், கீரம்பூர், சோதனை சாவடியில் பணியாற்றி வரும், ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர், அக்பர் அலி தான், தனிப்படை போலீசாருக்கு பெரிதும் உதவியுள்ளார். அவரையும், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் பாராட்டியதுடன், நன்றியும் தெரிவித்தார்.

Label