OUR CLIENTS
திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு நிதி மட்டும் போதாது: ‘ஸ்மார்ட் சிட்டி’ நிறுவனத்துக்கு தேவை அதிகாரம் மட்டும்தான்!
திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு நிதி மட்டும் போதாது: ‘ஸ்மார்ட் சிட்டி’ நிறுவனத்துக்கு தேவை அதிகாரம் மட்டும்தான்! Posted on 20-Dec-2017 திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு நிதி மட்டும் போதாது: ‘ஸ்மார்ட் சிட்டி’ நிறுவனத்துக்கு தேவை அதிகாரம் மட்டும்தான்!

கோயம்புத்தூர், டிச.20-
கோவையை, ‘ஸ்மார்ட் சிட்டி’யாக்க, 18 வகையான திட்டங்கள் பரிசீலனையில் இருந்தாலும், அரசு ஒப்புதல் பெற, கோப்புகளை தூக்கிக்கொண்டு, சென்னைக்கு அலைய வேண்டிஇருக்கிறது. அதனால், தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, ‘ஸ்மார்ட் சிட்டி’ நிறுவனத்துக்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய - மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சி பங்களிப்புடன், கோவையை பொலிவான நகரமாக்க (ஸ்மார்ட் சிட்டி) பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வழங்கி வருகிறது.

கோவை மாநகராட்சிக்கு இதுவரை, ரூ.396 கோடி கிடைத்துள்ளது. அத்தொகை வங்கியில், ‘டிபாசிட்’ செய்யப்பட்டு உள்ளது. குளங்கள் மேம்பாடு, உரக்கிடங்கு அமைக்க புதிய ஆலை, ‘ஸ்மார்ட்’ பள்ளி அமைத்தல், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், ‘ஸ்மார்ட் பெஞ்ச்‘ என, 18 வகையான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.

இவற்றை விரைந்து செயல்படுத்தவே, தனியார் நிறுவனம் போல், ‘ஸ்மார்ட் சிட்டி’ நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. கம்பெனி சட்ட திட்டங்களின் கீழ் பதிவு செய்து, சேர்மன், நிர்வாக இயக்குனர், இயக்குனர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன.ஆனால், திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, கோப்புகளை அரசின் பார்வைக்கு அனுப்ப வேண்டியுள்ளது. அதனால், ஒவ்வொரு கோப்பும் ஆறு மாதங்கள் வரை தாமதமாவதால், திட்டங்களை செயல்படுத்துவது இழுபறியாகி வருகிறது.

திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசனை நிறுவனம் நியமிப்பது; விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது; நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி பெறுவது; ‘டெண்டர்’ கோருவது; தகுதியான நிறுவனங்கள் முன்வரா விட்டால், அவகாசம் வழங்கி மீண்டும் கோருவது; டெண்டரை இறுதி செய்து, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வது, அந்நிறுவனத்துக்கு ‘ஒர்க் ஆர்டர்’ வழங்குவது என, ஏகப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.இதற்காக கோப்புகளை எடுத்துக் கொண்டு, சென்னைக்கு அலைய வேண்டியிருக்கிறது. சிறிய அளவில் தவறு இருந்தாலும் கூட, திருத்தம் செய்து வருமாறு, திருப்பி அனுப்பப்படுகிறது. இது, தேவையற்ற காலதாமதத்தை உருவாக்குகிறது; திட்டங்களை செயல் படுத்துவதும் தாமதமாகி வருகிறது.

‘ஸ்மார்ட் சிட்டி’யாக அறிவித்து, இரண்டு ஆண்கள் உருண்டோடி விட்டன. மூன்றாவது ஆண்டில் கோவை பயணித்து வருகிறது. இதுவரை ஒரு திட்டத்தை கூட செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை.இதற்கு காரணம், ‘ஸ்மார்ட் சிட்டி’ நிறுவனத்துக்கு உரிய அதிகாரம் வழங்காமல் இருப்பதே. ஒப்புதல் பெற, அரசின் பார்வைக்கு அனுப்ப வேண்டி இருப்பதால், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.

இச்சூழலில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக செயலாளர், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தும் நகரங்களில் பணியாற்றும் அதிகாரிகளுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் ஆலோசித்தார்.
ஆந்திரா மாநிலம், காக்கிநாடா நகரத்தைச் சேர்ந்த முதன்மை செயல் அலுவலர் பேசும்போது, ‘அரசின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது’ என, தெரிவித்துள்ளார்.’ஸ்மார்ட் சிட்டிக்கென, பிரத்யேகமாக நிறுவனம் உருவாக்கிதானே, திட்டங்கள் இறுதி செய்யப்படுகின்றன. மாநில அரசு ஒப்புதலுக்கு ஏன் அனுப்ப வேண்டும்‘ என, மத்திய அரசின் செயலர் கேள்வி எழுப்பினர்.அதற்கு, மாநில அரசு பின்பற்றும் நடைமுறைகளை, அதிகாரிகள் விளக்கினர். இது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த செயலர், ‘ஸ்மார்ட் சிட்டி நிறுவனங்களுக்கு உரிய அதிகாரம் 
வழங்க வேண்டும்.  திட்டங்களை விரைந்து செயல்படுத்த உதவ வேண்டும் என, அனைத்து மாநிலங்களின் அரசு தலைமை செயலர்களுக்கு மத்திய அரசில் இருந்து சுற்றறிக்கை அனுப்புகிறோம்‘ என, உறுதி அளித்தார்.அதன்படி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப் பட்டால், கோவையில் பரிசீலனையில் உள்ள, 18 திட்டங்களை விரைந்து செயல்படுத்த வாய்ப்பு கிட்டும்; 
2018ல், கோவை புதுப்பொலிவு பெறும்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மற்ற நகரங்களை காட்டிலும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை செயல்படுத்துவதில், 
கோவை முன்னோடியாக இருக்கிறது. பரிசீலனையில் உள்ள திட்டங்கள் அனைத்தும், ‘டெண்டர்’ கோரப்படும் நிலையில் இருக்கின்றன. அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டால், திட்டங்கள் இன்னும் வேகமெடுக்கும்‘ என்றனர்.

Label