OUR CLIENTS
ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை நீட்டிக்கப்படுமா!
ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை நீட்டிக்கப்படுமா! Posted on 20-Dec-2017 ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை நீட்டிக்கப்படுமா!

கடலூர், டிச.20- 
 கடலூர் ஜவான்ஸ் பவன் புற வழிச்சாலையை மோகினிப் பாலம் வரை நீட்டிப்பு செய்தால் இம்பீரியல் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

கடலூரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலைக்கு மாற்று வழியாக ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இம்பீரியல் சாலையில் ‘யு’ டர்ன் முழுவதும் ரத்து செய்யப்பட்டு நீண்ட தூரம் வரை சென்று திரும்பும் நிலை உள்ளது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

புதுச்சேரியில் இருந்து காரைக்கால், திருச்சி, கும்பகோணம், விருத்தாசலம் செல்லும் பயணிகள் மஞ்சக்குப்பத்தில் இருந்து முதுநகரை கடப்பதற்கே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.

முகூர்த்த காலங்களில் திருவந்திபுரம் சாலையில் அடிக்கடி ‘டிராபிக் ஜாம்‘ ஆகிவிடுகிறது. இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லை.

இந்நிலையில் கடலூர் கெடிலம் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ஜவான்ஸ் பவன் புற வழிச்சாலையை மோகினிப்பாலம் வரை நீட்டித்தால் முதுநகர் செல்லும் பயணிகள் நேரத்தை ஓரளவு குறைக்கலாம்.  தற்போது கெடிலம் ஆற்றில் ஆக்கிரமிப்பு இடங்கள் சர்வே செய்து அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணியை முழுமையாக செய்து முடித்த பின் கிடைக்க கூடிய அரசுக்கு சொந்தமான இடத்தில் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலையின் தொடர்ச்சியாக மோகினிப்பாலம் வரை சாலை அமைக்கலாம்.

அதாவது ஜவான்ஸ்பவன் சாலையில் செல்லும் வாகனங்கள் எளிதில் சாலையை குறுக்காக கடக்க முடியவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதற்கு பதிலாக அண்ணா மேம்பாலத்தின் அடியில் சாலை அமைத்து தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ள இடங்கள் வழியாக மோகினி பாலம் வரை நீட்டிக்க வேண்டும்.

இதன்காரணமாக இம்பீரியல் சாலை வாகன நெரிசலில் சிக்காமல் சென்று விட வாய்ப்பாக அமையும். மேலும் இந்த இடத்தில் சாலை அமைப்பதால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது தடுக்கப்படும். இதேப்போன்று மதுரை மாநகரில் பாலத்தின் அடிப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு சிறப்பாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொலை நோக்கு பார்வையோடு முயற்சி மேற்கொண்டு கெடிலம் ஆற்றுப்படுகையில் சாலை அமைக்க திட்டமிடல் வேண்டும். அப்போதுதான் கடலூர் நகரை போக்குவரத்து நெரிசலில் இருந்து காப்பாற்ற முடியும்.

Label