OUR CLIENTS
இடிப்பதற்கு உத்தரவான பஸ் நிலையத்திற்குள் பயணிகள் அமருவதால் ஆபத்து காத்திருக்கு! :திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா?
இடிப்பதற்கு உத்தரவான பஸ் நிலையத்திற்குள் பயணிகள் அமருவதால் ஆபத்து காத்திருக்கு! :திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா? Posted on 20-Dec-2017 இடிப்பதற்கு உத்தரவான பஸ் நிலையத்திற்குள் பயணிகள் அமருவதால் ஆபத்து காத்திருக்கு!  :திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா?

திண்டிவனம், டிச.20
திண்டிவனத்தில் கட்டடம் பழுதடைந்துள்ளதால், இடிப்பதற்கு உத்தரவான நகராட்சி பஸ் நிலைய கட்டடத்திற்குள், கடைகள் மற்றும் பஸ் பயணிகள் அடைக்கலம் புகுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

திண்டிவனத்தில், நகராட்சிக்கு சொந்தமான இந்திராகாந்தி பஸ் நிலையம் கட்டப்பட்டு, 45 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், கட்டடத்தின் மேல்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுந்து வந்தது. இதனால் திண்டிவனத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதே போல், வேலூரிலுள்ள நகராட்சி மண்டல செயற்பொறியாளர் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தனர்.
இதன் படி, திண்டிவனத்திலுள்ள இந்திராகாந்தி பஸ் நிலைய கட்டடம் சிதிலமடைந்து, கட்டடத்தின் உறுதித்தன்மை இழந்துள்ளதால், கட்டடத்தை முற்றிலும் இடிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா உத்தரவின் பேரில், பஸ் நிலையத்தில் வாடகைக்கு இருந்து வரும் 13 கடைக்காரர்களுக்கு கடந்த செப்., மாதத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் அக்.,7ம் தேதிக்குள் , நகராட்சி கடைகளை காலி செய்து, ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதே போல் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகம், தாய்மார்கள் பாலூட்டும் அறையை காலி செய்வது என நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கிடையில், அக்.,7ம் தேதிக்குள் கடைகளை காலி செய்து ஒப்படைக்குமாறு நகராட்சி அறிவித்தும், பலர் கடைகளை காலி செய்யாமல் தொடர்ந்து இருந்து வருகின்றனர். இந்நிலையில், பஸ் நிலையத்தின் கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், நகராட்சி அதிகாரிகள் ஏற்பாட்டின் படி, கட்டடத்திற்குள் பஸ் பயணிகள், பொதுமக்கள் யாரும் போகாமல் இருப்பதற்காக, கட்டடத்தை சுற்றி சவுக்கு கம்பத்தால் சாரம் அமைத்து தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இதற்கிடையில், எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ள நகராட்சி பஸ் நிலைய கட்டடத்தில் ஒரு பக்கம் நகராட்சி கடைகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றது. இதேபோல் பஸ் பயணிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலரும் ஆபத்தை உணராமல் தடுப்பு கட்டைகளை தாண்டி அங்குள்ள சிமெண்ட் கட்டைகளில் உட்கார்ந்து வருகின்றனர்.

இதுபற்றி நகராட்சி கடைக்காரர்கள் தரப்பில் கேட்ட போது, ‘’ நாங்கள் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வருகின்றோம். திடீரென்று கடைகளை காலி செய்துவிட்டு வெளியேறுங்கள் என்று சொன்னால் நாங்கள் எப்படி குடும்பத்தை நடத்த முடியும். கடைகளை வைத்திருப்பவர்களுக்கு இதே வளாகத்தில் மாற்று இடம் கொடுத்தால், நாங்கள் உடனடியாக காலி செய்துவிடுவோம்“” என்று தெரிவிக்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூர் பஸ் நிலையத்தின் கூரை, கடந்த செப்., 7 ம் தேதி திடீரென சரிந்து விழுந்தது. 
இந்த விபத்தில், அரசு பஸ் கண்டக்டர் உள்ளிட்ட 5 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். இதே போல் சம்பவம் நிகழாமல் இருக்கும் பொருட்டு நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த கட்டடத்தை இடிப்பதற்கும், அதே சமயத்தில், பஸ் நிலையத்தில் நீண்ட காலமாக கடைகளை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Label