பேனர்களில் புகைப்படங்களை பயன்படுத்த தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Posted on 20-Dec-2017
சென்னை, டிச.20
பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் படங்களை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்சனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தனது வீட்டின் முன்பு தேவையற்ற பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அவற்றை அகற்றும்படி காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் வழக்கு விசாரணை முடிவில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், 'மனுதாரர் வீட்டின் முன்பு இருக்கும் தேவையற்ற பேனர்கள் அனைத்தையும் அகற்ற காவல்துறை மற்றும் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னர் உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் போன்றவை வைக்கக்கூடாது. கட்டிடங்கள், குடியிருப்புகள் பகுதிகளில் தேவையற்ற கட் அவுட் பேனர்கள் உள்ளதா? என மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து அவற்றை அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டார்.
இந்த வழக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணைக்கு பிறகு, நீதிபதி கூறுகையில், "பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் படங்களை பயன்படுத்த தடையில்லை. நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் இருந்து 'உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் போன்றவை வைக்கக்கூடாது' என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. பேனர் விளம்பரங்களில் உயிருடன் இருப்பவர்கள் படங்கள் முக்கியம் என்பதன் அடிப்படையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.