OUR CLIENTS
திருப்பதியில் 26-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணிநேரம் தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து
திருப்பதியில் 26-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணிநேரம் தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து Posted on 22-Dec-2017 திருப்பதியில் 26-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணிநேரம் தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து

திருமலை, டிச. 22-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழாவும், 30-ந்தேதி துவாதசி விழாவும் நடக்கிறது. இதனை முன்னிட்டு 26-ந்தேதி காலை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு நான்கு முறை நடக்கிறது. அதாவது; யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் நடைபெறும் நாளின் முந்தைய வார செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும்.

எனவே 26-ந்தேதி அதிகாலை 2 மணியில் இருந்து 2.30 மணிவரை மூலவருக்கு மார்கழி மாத கைங்கர்யம் முடிந்ததும், 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை அபிஷேகம், தோமால சேவை, அர்ச்சனை ஆகியவை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 6 மணியளவில் பிரதான நுழைவுவாயில் கதவு மூடப்படுகிறது. மூலவர் வெங்கடாஜலபதியை அர்ச்சகர்கள் விலை உயர்ந்த பட்டு வஸ்திரத்தால் போர்த்தி, கருவறையில் இருந்து பிரதான நுழைவுவாயில் வரை அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் தண்ணீரால் சுத்தம் செய்கிறார்கள். பகல் 11 மணிவரை சுத்தம் செய்யும் பணி முடிந்ததும் கோவிலில் உள்ள சுவர்கள், மாடங்கள், தூண்கள் ஆகியவற்றின் மீது சுகந்த திரவியம் பூசப்படுகிறது.

இதையடுத்து மூலவர் வெங்கடாஜலபதி மீது போர்த்தப்பட்ட விலை உயர்ந்த பட்டு வஸ்திரத்தை அகற்றி, மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நைவேத்தியம் ஆகியவை செய்யப்படுகிறது. பின்னர் நண்பகல் 12 மணிக்கு பிரதான நுழைவு வாயில் கதவு திறக்கப்பட்டு இலவச தரிசனம், திவ்ய தரிசனம், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனம் ஆகியவற்றில் சென்று ஏழுமலையானை வழிபட பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே 26-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 12 மணிவரை 6 மணிநேரம் தரிசனம், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Label