OUR CLIENTS
2 ஜி வழக்கில் மத்திய அரசும், சிபிஐ-யும் மேல் முறையீடு செய்ய வேண்டும் :பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
2 ஜி வழக்கில் மத்திய அரசும், சிபிஐ-யும் மேல் முறையீடு செய்ய வேண்டும் :பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் Posted on 22-Dec-2017 2 ஜி வழக்கில் மத்திய அரசும், சிபிஐ-யும் மேல் முறையீடு செய்ய வேண்டும் :பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை, டிச. 22-
2 ஜி வழக்கில் மத்திய அரசும், சி.பி.ஐ.யும் மேல் முறையீடு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி யுள்ளார். இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடை யவர்கள் தண்டனையின்றி விடுதலையாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகையே அதிரவைத்த 2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, கனிமொழி உள்ளிட்ட 17 எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் தண்டனையின்றி விடுதலை செய்யப்படுவதும், தங்களைத் தாங்களே உத்தமர்களாக சித்தரித்துக் கொள்வதும் அதிர்ச்சியளிக்கிறது.

2ஜி ஊழல் வழக்கை 6 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.சைனி ஒரு வரி தீர்ப்பை மட்டுமே அளித்துள்ளார். முழுமையான தீர்ப்பாணை இன்னும் வெளியாகவில்லை. 2ஜி ஊழல் வழக்கில் 17 எதிரிகள் மீதான குற்றச்சாற்றுகளை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் சி.பி.ஐ. மிக மோசமாகத் தோல்வியடைந்து விட்டதாகவும், ஐயத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு வழங்கி விடுதலை செய்வதாகவும் நீதிபதி ஓ.பி. சைனி அவரது ஒரு வரித் தீர்ப்பில் கூறியிருக்கிறார். அதாவது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது உண்மை, ஆனால், அந்த ஊழல் குறித்த குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்படவில்லை என்பது தான் தீர்ப்பில் பொருள் ஆகும்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக 1.10.2007 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிமம் பெறத் தகுதி உடையவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ஒரு நாளில் 25.09.2007 அன்று மாலை 3.30 மணியிலிருந்து 4.30 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே உரிமம் பெற தகுதியுள்ளவை என்று அறிவிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் மட்டுமின்றி, உலக வரலாற்றில் கூட உரிமம் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, பின் தேதியிட்டு தகுதி காணும் நேரம் நிர்ணயிக்கப் பட்டதில்லை.

2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் வெளிப்படையான அணுகுமுறையை கடைபிடிக்கும்படியும், 2001-ஆம் ஆண்டில் விலையில் அலைக்கற்றை உரிமத் தொகையை நிர்ணயம் செய்யாமல் 2007-ஆம் ஆண்டு விலையில் உரிமத் தொகையை நிர்ணயிக்கும் படியும் ஆ.இராசாவுக்கு அப்போதை யை பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதினார். அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக இராசா கடைபிடிக்கும் அணுகுமுறை தவறானது என்று கூறி மத்திய நிதியமைச்சகமும் கடிதம் எழுதியது.

ஆனால், இதையெல்லாம் நிராகரித்து விட்டு, குறிப்பிட்ட நேரத்தில் உரிமம் கேட்டு விண்ணப்பித்த தமது ஊழல் கூட்டாளிகளுக்கு 122 உரிமங்களை மலிவு விலையில் வாரி வழங்கினார். பிரதமரின் அறிவுரையை மதிக்காமல் விதிகளை மீறி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமம் வழங்கியது ஊழல் இல்லையா?

ஆ.இராசாவுடன் கூட்டணி அமைத்து மலிவு விலையில் அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்கள் அதைவிட பல மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்திருக்கின்றனர். உதாரணமாக ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.1537 கோடிக்கு வாங்கிய அலைக்கற்றையில் 45 விழுக்காட்டை சுமார் ரூ.4080 கோடிக்கு விற்பனை செய்தது. இது அரசு நிர்ணயித்த விலையை விட 590 விழுக்காடு அதிகமாகும். அதேபோல், தொலைத் தொடர்புத்துறையில் அனுபவமே இல்லாத யுனிடெக் நிறுவனம் 23 மண்டலங்களுக்கான உரிமங்களை ரூ.1651 கோடிக்கு வாங்கியது. அவற்றில் 60 விழுக்காட்டை ரூ.11,620 கோடிக்கு விற்பனை செய்தது. 

இது அரசு நிர்ணயித்த விலையை விட 703% அதிகமாகும். இந்த கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.44,100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால், இந்த ஊழல் குறித்த சில ஆவணங்கள் விசாரணை அமைப்புக்கு கிடைக்காமல் தடுக்கப் பட்டதாலும், குற்றஞ்சாற்றுகளை சி.பி.ஐ அமைப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாலும் தான் ஆ.இராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர். இத்தீர்ப்பைப் பார்க்கும் போது திமுக மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து விசாரித்த நீதிபதி சர்க்காரியா கூறிய கருத்துக்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

திமுக தலைவர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்தது உண்மை.... ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு மிகவும் தந்திரமாக செய்துள்ளனர் என்று சர்க்காரியா ஆணையம் கூறியிருந்தார். இப்போதும் அது தான் நடந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது... ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அடிப்படையில் செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது. ஆனால், எல்லா நாளும் வெல்ல முடியாது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தில்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Label