OUR CLIENTS
கவிஞர் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிப்பு
கவிஞர் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிப்பு Posted on 22-Dec-2017 கவிஞர் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிப்பு

சென்னை, டிச. 22-
கவிஞர்கள் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்குலாப்பின் மகள் ஆமினா சாகித்ய அகாதமி விருதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

“சாகித்ய அகாடமி” எனும் மத்திய அரசின் இலக்கிய அமைப்பு வருடந்தோறும் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2017ம் ஆண்டுக்கான தமிழ்ப் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் இன்குலாப். இவரது இயற்பெயர் சாகுல்ஹமீது. மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்த இன்குலாப், படிப்பு முடித்து சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், நா. காமராசன் போன்ற தன்னுடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து போராடியவர். தி.மு.க ஆதரவாளராக இருந்தவர், பிறகு மார்க்சிய சித்தாந்தத்தில் தனது பயணத்தை துவக்கினார். .

கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் எரிக்கப்பட்டபோது வெகுண்டெழுந்து அவர் இயற்றிய கவிதைகள், ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களுக்கு இன்று வரை புரட்சிகீதமாக முழங்குகிறது. எப்போதும் தான்கொண்ட கொள்கையில் சமரசமின்றி வாழ்ந்தவர்.

பல காலமாக நீதி, நெறி என நம்மிடையே சாஸ்திரங்கள் வழியாகவும், கல்வியின் வழியாகவும் புகுத்தப்பட்ட `துருப்பிடித்த குப்பைகளை நாம் களைய முற்பட வேண்டும்' என முற்போக்குக் கருத்துகளை மேடைகளில் அழுத்தத்துடன் எடுத்துரைத்தவர். அவர் எழுதிய “காந்தள் நாட்கள்” கவிதை தொகுப்புக்காக மறைந்த கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆமினா மறுப்பு தன் வாழ்நாள் முழுக்க பொதுமக்கள் சார்பாக அரசுடன் போராடுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தவர் என் தந்தை இன்குலாப்.

இப்பொழுது, அரசின் அங்கமாக விளங்கும் சாகித்ய அகாதெமி தரும் விருதை அவர் விரும்பமாட்டார் என்று நம்புகிறோம். அதனால், எங்கள் நிலையை விளக்கி சாகித்ய அகாதெமிக்கு கடிதம் எழுத இருக்கிறோம். விருதை ஏற்பதற்கு நாங்கள் விரும்பவில்லை என்பதை அக்கடிதத்தில் தெரிவிப்போம் என ஆமினா கூறினார்.

யூமா வாசுகிக்கு விருது
இந்த ஆண்டு தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 'கசாக்கின் இதிகாசம்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
யூமா வாசுகி தனது 'ரத்த உறவு' நாவல் மூலம் தமிழ் இலக்கியத்தில் நன்கு அறிமுகமானவர். யூமா வாசுகி கவிஞராகவும் அறியப்படுகிறவர். இவர் சிறந்த ஓவியரும்கூட. குதிரைவீரன் பயணம் இவர் நடத்திவரும் இலக்கிய இதழ். யூமா வாசுகி பல ஆண்டுகளாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு பல்வேறு படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ.வி. விஜயன் எழுதிய இந்நூல் யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.

Label