OUR CLIENTS
காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் :பி.ஆர்.பாண்டியன் பேட்டி
காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் :பி.ஆர்.பாண்டியன் பேட்டி Posted on 27-Dec-2017 காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் :பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மன்னார்குடி, டிச. 27-
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், சேலம், திருச்சி உட்பட 9 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 25 மாவட்டங்களில் வாழக்கூடிய சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீரையும் பாதுகாப்பதோடு, சுமார் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் காவிரி நீரைதான் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் கங்கை நதியின் கழிவை விட 600 மடங்கு கூடுதலான ரசாயன கழிவு காவிரியில் கலந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனை கர்நாடக அரசு திட்டமிட்டு தமிழகத்தை அழிக்கும் நோக்கோடு செயல்படுத்துவது கண்டனத்திற்குரியது. இதனை மத்திய அரசு கண்டும் காணாதது போல் துணை போகிறது. இந்நிலை தொடருமே யானால் தமிழக மக்கள் கொடிய நோய்களுக்கு ஆளாகி உயிரழக்கக் கூடிய பேராபத்து ஏற்படும். மண் வளம் கெடுவதோடு, நிலத்தடி நீர் பாழ்பட்டும், காற்று மாசடைந்து மனிதர்கள் வாழமுடியாத பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து மத்திய அரசு மூலம் ரசாயன கழிவு நீரை தடுப்பதற்கான நடவடிக்கையை போர் கால அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் வரு வாயை 2022-ம் ஆண்டில் இரட்டிப்பாக்குவோம் என மத்திய அரசு அறிவித்துவிட்டு தற்போது டிராக்டருக்கு சாலை வரி விதிப்பதற்காக திட்டமிடுவதும், வருமான வரி விதிப்பதற்கு முயற்சிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் கூட்டுறவு கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றம் செய்துள்ளதாகவும் விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளை அணுகவும் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் வங்கிகள் விவசாயிகளை அநாவரி சான்று பெற்று வர சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். வருவாய் துறையிடம் கேட்டால் அரசாணை வரவில்லை என சான்று தர மறுக்கிறார்கள். எனவே தமிழக அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார் உடனிருந்தனர்.

Label