OUR CLIENTS
சித்தலிங்கமடத்துக்கு மயானபாதை வசதி கேட்டு குமுறும் மக்கள்!
சித்தலிங்கமடத்துக்கு மயானபாதை வசதி கேட்டு குமுறும் மக்கள்! Posted on 27-Dec-2017 சித்தலிங்கமடத்துக்கு மயானபாதை வசதி கேட்டு குமுறும் மக்கள்!

விழுப்புரம், டிச.27-
விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் இறந்த உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள். காலங்காலமாக இந்த கிராமத்தில் பொதுமக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தனித்தனியாக மயானத்தை பயன்படுத்தி வந்த வண்ணம் உள்ளனர். 


அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடுகாட்டுக்கு செல்வதற்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ராகவன் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டும். ஆனால் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் ராகவன் வாய்க்கால் பாலம் சேதமடைந்து பாலம் துண்டானதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். அவ்வழி செல்லும் பாதையிலும் அதிக பள்ளம் ஏற்பட்டு 3 அடி ஆழத்துக்கு தண்ணீர் செல்கிறது. அதனால் யாராவது திடீரென்று இறந்து விட்டால் எங்கு கொண்டு போய் அடக்கம் செய்வது என்ற சர்ச்சை ஏற்பட ஆரம்பித்துள்ளது. 

ஒரு மனிதனுடைய இறப்பு என்பது மிகவும் உணர்ச்சிமயமான விஷயம். அதனால்தான் இறப்புக்கு அதில் முக்கியத்துவம் கொடுத்து, சடங்கு, சம்பிரதாயம் செய்து கடைசியில் நிகழ்வை நல்லபடியாக முடித்து அடக்கம் செய்வது வழக்கம், ஆனால் அந்த கடைசி நிகழ்வைக்கூட அவர்களால் நல்லபடியாக செய்ய முடியவில்லை. தொடர்புடைய அதிகாரிகளிடம் இதுகுறித்து பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆட்சியர் இல.சுப்பிரமணியனும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளருக்கு அந்த கோப்புகளை அனுப்பியுள்ளார். உடனடியாக பாலத்தை கட்டினால் மட்டுமே இந்த பிரச்னை சரியாகும் என்கின்றனர் அப்பாவி பொதுமக்கள். 

அதேபோல திருவெண்ணை நல்லூர் ஒன்றியம் பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பையூர்மேடு கிராமத்திலும் மயானத்துக்கு செல்ல வழியில்லாமல் அக்கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த பையூர்மேடு கிராமத்தில் இறந்தவர்களை கோரையாற்றில் புதைப்பதுதான் வழக்கம். ஆனால் பையூர்மேடு கிராமத்துக்கும், கோரையாற்றுக்கும் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். இது தொடர்பான அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களது பிரச்னை சீக்கிரம் தீர வேண்டும். அப்போதுதான் இந்த கிராமத்தின் மக்கள் நிம்மதியுடன் இருப்பார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்போதுதான் ஆயிரம் பிரச்னைகள் எழுகிறது. இறந்த பிறகும் உடலை அடக்கம் செய்வதிலும் இவ்வளவு பிரச்னைகளா?. சமூக ஆர்வலர்கள் இந்த கிராமத்துக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சொல்லியும் இழுத்தடித்து வரும் அதிகாரிகளின் செயலை என்னவென்று சொல்வது?. ஆட்சியர் உத்தரவு காற்றிலே பறக்குது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label