OUR CLIENTS
மது அருந்தும் கூடமா? கால்நடை மருந்தகமா?
மது அருந்தும் கூடமா? கால்நடை மருந்தகமா? Posted on 27-Dec-2017 மது அருந்தும் கூடமா? கால்நடை மருந்தகமா?

காஞ்சிபுரம், டிச.27-
ஸ்ரீபெரும்புதூரில் புதர்மண்டி கிடக்கும் கால்நடை மருந்தகத்தை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் அருகே கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆடு, மாடுகள், வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

தற்போது இந்த கால்நடை மருந்தகத்தை சுற்றி புதர்கள் மண்டியும், சுற்றுச்சுவர் இல்லாமலும் உள்ளது. கடந்த 1952-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய மருந்தகக் கட்டடம் இடிக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இங்கு வரும் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவதோடு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கால்நடை மருந்தக வளாகத்தில் காலி மதுபுட்டிகளும், தண்ணீர் பாக்கெட்டுகளும் சிதறி கிடக்கின்றன. எனவே இந்த கால்நடை மருந்தகத்தை சுற்றியுள்ள இடத்தை தூய்மைப்படுத்தி சீரமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: இரவு பத்து மணிக்கு மேல் சமூக விரோதிகள் சிலர் தினமும் இங்கு மது அருந்துவதுடன் பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் மின்விளக்குகள் இங்கு எரிவதில்லை.

இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்தி வருகின்றனர். புதர்கள் அதிக அளவில் மண்டி கிடப்பாதல் இங்கு உற்பத்தியாகும் கொசுக்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் வருகின்றன.

எனவே கால்நடை மருந்தகத்தை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி சீரமைப்பதோடு சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வரும் பழைய கட்டடங்களை இடித்து அகற்ற கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Label