OUR CLIENTS
டி.டி.வி.தினகரன் வெற்றியால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை:குஷ்பு பேட்டி
டி.டி.வி.தினகரன் வெற்றியால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை:குஷ்பு பேட்டி Posted on 28-Dec-2017 டி.டி.வி.தினகரன் வெற்றியால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை:குஷ்பு பேட்டி

புதுடெல்லி, டிச.28-
டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதால் எந்த அரசியல் மாற்றமும் வரப்போவது இல்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் தற்போது பெண்கள் வெளியே வர பயப்படும் சூழல் உள்ளது. தினமும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமியை கும்பலாக கற்பழித்து இருக்கிறார்கள்.  இதுபோன்ற சம்பவங்களுக்கு மோடி என்ன பதில் தெரிவிக்கப்போகிறார்? பெண்களை பாதுகாக்க ஒரு திட்டம் தொடங்கியிருப்பதாக சொன்னார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. புள்ளி விவரப்படி இந்தியாவில் குற்றச்செயல்கள் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு பெண்ணாக பிரதமருக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பெண்களை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை தயவு செய்து எடுங்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கான காரணத்தை அ.தி.மு.க.வினரால் கூற முடியவில்லை. அதனால் தான் தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டதாக கூறுகிறார்கள். டி.டி.வி. தினகரன் வெற்றியில் பணம் எந்த அளவுக்கு பேசியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஜெயலலிதாவை விட அதிக ஓட்டு வாங்கியதால் அவர் ஜெயலலிதாவை விட பெரிய அரசியல்வாதி கிடையாது. அவரது வெற்றியால் அரசியல் மாற்றம் வரப்போவது இல்லை. அவர் முதல்-அமைச்சராக வர யாரும் ஆசைப்படவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் நல்லெண்ண அடிப்படையில் பிரதமர் மோடி அவரை சந்தித்தார். காங்கிரசை பொறுத்தவரை தி.மு.க.வுடனான கூட்டணி உறுதியாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகம் ஸ்தம்பித்து நிற்கிறது. மாற்றம் வந்தால் தான் முன்னேற்றத்தை பார்க்க முடியும்.

தமிழ்நாட்டை பொறுத் தவரை, பா.ஜனதா எந்த பக்கம் புரண்டு பார்த்தாலும் கண்டிப்பாக தமிழகத்துக்குள் நுழையவே முடியாது. அதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டதாக சொன்னார் என்றால் அவருக்கு அது சாதகமா, பாதகமா என்பதை அப்போது தெரிவிப்பேன். அவர் அரசியலுக்கு வந்தால் ஆதரவு கொடுப்பேன் என்று நான் நடிகையாக பணியாற்றிய காலத்தில் சொன்னேன். அதற்கான விளைவு எப்படி இருந்தது? என்பது எனக்கு தெரியும். மாநில அளவிலான ஒரு விருதே எனக்கு பறி போய்விட்டது. நடிகர்கள் என்றில்லை, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வெளியில் இருந்துகொண்டு விரல் நீட்டி பேசுவதில் அர்த்தம் இல்லை.

திருநாவுக்கரசர் ஒரு முறை, ‘நான் அ.தி.மு.க. வில் இருந்தால் இந்த நேரம் முதல்- அமைச்சர் ஆகியிருப்பேன்’ என்று சொல்லி இருந்தார். தற்போது எதற்காக இப்படி ஒரு கருத்து சொல்லியிருக்கிறார் என்று தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் பேசினால் தான் உங்களுக்கு பதில் தெரிவிக்க முடியும். இவ்வாறு குஷ்பு கூறினார்.

Label