OUR CLIENTS
மண்டல பூஜை நிறைவு சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மண்டல பூஜை நிறைவு சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் Posted on 28-Dec-2017 மண்டல பூஜை நிறைவு சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம், டிச. 28-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

இதையொட்டி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு ஒரு மண்டலம் (41 நாட்கள்) நிறைவு அடைந்ததையொட்டி, முக்கிய நிகழ்வான மண்டல பூஜை நேற்று முன்தினம் பகல் 11.04 முதல் 11.40 வரை நடைபெற்றது. முன்னதாக களபாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடந்தன.

மண்டல பூஜையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் சபரிமலையில் திரண்டனர். மேளதாளங்கள் முழங்க மணி ஓசை மலையெங்கும் எதிரொலிக்க பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா‘ என்று சரண கோஷம் எழுப்பி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மண்டல பூஜையையொட்டி தங்க அங்கி சாத்தி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிற்பகல் 1.30 மணி வரை தங்க அங்கியுடன் காட்சி தந்த சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர்.

தொடர்ந்து, மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடந்தன. இரவு அத்தாள பூஜையும், பின்னர் அரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

மண்டல பூஜை நிறைவு அடைந்ததை தொடர்ந்து, மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறுகிறது.

Label