OUR CLIENTS
தி.மு.க.வின் செயல்பாடு புதிய உத்வேகத்துடன் தொடரும்: மு.க.ஸ்டாலின்
தி.மு.க.வின் செயல்பாடு புதிய உத்வேகத்துடன் தொடரும்: மு.க.ஸ்டாலின் Posted on 28-Dec-2017 தி.மு.க.வின் செயல்பாடு புதிய உத்வேகத்துடன் தொடரும்: மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச. 28-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் களத்தில் வெற்றி பெற்றால் மக்கள் தந்த விருதாகவும், தோல்வி அடைந்தால் ஜனநாயகப் போர்க்களத்தில் பெற்ற விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவத்தை தி.மு.க.வுக்கு கருணாநிதி வழங்கியி ருக்கிறார். ஜனநாயகம் புதைக்கப்பட்டு, பணநாயகம் கோலோச்சிய ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் களத்தில், ஜனநாயக உரிமை விலைமதிப்பற்றது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து, தனித்தன்மையை வென்றுள்ளது.

ஆனால், அரசியல் களத்திலும் ஊடக விவாதங்களிலும், தி.மு.க.வை ஒவ்வாமையாகக் கருதும் சில ஆதிக்க சக்திகளின் தூண்டுதலினால், டி.டி.வி. தினகரனின் வெற்றிக்கு தி.மு.க. உதவியது போன்ற கற்பனையான அவதூறான சித்திரம் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தீட்டப்பட்டு வருவதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆர்.கே.நகர் தொகுதியின் 960 தெருக்களிலும் எங்கள் வேட்பாளர் மருது கணேஷ் நடந்தே சென்று, ஒவ்வொரு வீட்டுப்படியிலும் ஏறி வாக்குகளை சேகரித்தார். சில தெருக்களில் ஒருமுறைக்கு இருமுறை அவர் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு பிரசாரம் செய்ததும் உண்டு. தி.மு.க. வேட்பாளரின் இடைவிடாத மக்கள் வரவேற்புக்குரிய பிரசாரத்தின் பலனைத் தடுக்கும் வகையிலும், கெடுக்கும் வகையிலுமே அ.தி.மு.க.வின் இருதரப்பு வேட்பாளர்களும் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி, ஜனநாயகத்தை விலை பேசினர். அதனால் பணநாயகத்திற்குப் பலி ஆனது ஆர்.கே.நகர் தொகுதி. 

இந்த உண்மையை அப்பட்டமாக மூடி மறைத்துவிட்டு, தி.மு.க. மீது புழுதிவாரித் தூற்றுவதற்கு இதனையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, யார் யாருக்கோ தி.மு.க. உதவியதாகக் கூறுவது திட்டமிட்ட பொய்ப்பிரசாரம். பணம் கொடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர் மீது, வாக்குப்பதிவு அன்றே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது தி.மு.க. என்பது கூட அறியாமல், பலர் இப்படி பிதற்றுகிறார்கள். ஆனால், எந்தநிலையிலும் இரு வண்ணக் கொடியை உயர்த்திப் பிடித்து, நான் தி.மு.க.காரன் என முழங்குவதையே பெருமையாகக் கொண்ட வர்கள் நிறைந்துள்ள இயக்கத்திற்கு, யாரையும் மறைமுகமாக ரகசியமாக ஆதரிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அந்த நிலைப்பாட்டில் வெளிப் படையாகவும், உறுதியாகவும் இருப்பவர் கருணாநிதி என்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தி.மு.க.வுக்கு அளித்த பாராட்டுகளை, இன்றைக்கு விஷம பிரசாரம் செய்து எப்போதும் போல நாட்டு மக்களைத் திசைதிருப்ப எத்தனிப்போர்க்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் நடை பெறும் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஊழல் ஆட்சியை அகற்றி, மக்களின் நலன் பேணும் நல்லாட்சியை வெகுமக்களின் பேராதரவோடு அமைத்திடும் ஆற்றல் தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு என்பதை அனைவரும் அறிவர். தோழமைக் கட்சிகளின் துணையுடன், மக்கள் ஆதரவை ஒருங்கிணைத்து, ஜனநாயக வழியில் அந்த மாற்றத்தை விரைந்து கொண்டு வரப்போவது தி.மு.க. தான். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தலைமையைப் பின்பற்றி நடக்கும் ஊழல்வாதிகளால், பெரா வழக்கில் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி கொண்டிருப்பவர்களால், ஊழல் கடலில் மூழ்கி கிடப்பவர்களால் ஆட்சிமாற்றம் வரும் என நினைப்பதோ, நல்லாட்சி அமையும் எனக் கருதுவதோ பகல் கனவு மட்டுமல்ல, நயவஞ்சகர்களின் திட்டமிட்ட விஷம பிரசாரம்.

இந்த வெற்று விமர்சகர்களின் கற்பனைக்கு தி.மு.க. ஒருபோதும் கவரி வீசாது. தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில், கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட அரசியல் நாகரிகத்தை கடைப் பிடிப்பதற்கும், கொள்கை ரீதியான லட்சியப் பயணத்திற்கும் வேறுபாடு உள்ளது. அந்தப் பயணத்தில் தி.மு.க. மிகவும் உறுதியாகவே இருக்கிறது. இடைத்தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவை ஆராய்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொண்டு, புதிய உத்வேகத்துடன் தி.மு.க.வின் செயல்பாடு தொடரும். அவதூறு பரப்புவோர் அப்போது ஏமாறுவது நிச்சயம்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமையுள்ள ஒரே இயக்கமான தி.மு.க. நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள், யாரையோ மறைமுகமாக தி.மு.க. ஆதரிக்கிறது என, யார் பின்னாலோ திரைமறைவில் ஒளிந்து கொண்டு, அவதூறு கிளப்பும் விஷம பிரசாரத்திற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க.வின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும், லட்சிய உணர்வுடனும் உரசிப் பார்க்க ஒருபோதும் எண்ணிப் பார்க்க வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Label