OUR CLIENTS
அம்மா தி.மு.க.: தினகரன் முடிவு
அம்மா தி.மு.க.: தினகரன் முடிவு Posted on 03-Jan-2018 அம்மா தி.மு.க.: தினகரன் முடிவு

சென்னை, ஜன.3-
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற, சசிகலா அக்கா மகன், தினகரன், ‘அம்மா தி.மு.க.,’ என்ற கட்சியை துவங்க முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க.,வை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிட்ட, தினகரன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வினரின் உள்ளடி  வேலைகளே, தினகரன் வெற்றிக்கு காரணம் என, கூறப்படுகிறது. இதனால், தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர், அ.தி.முக.,வில் இருந்து, அதிரடியாக நீக்கப்பட்டனர்.அவர்களுக்கு, பதவிகள் வழங்க வேண்டிய நெருக்கடி, தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நடிகர் ரஜினி, நேற்று முன்தினம், தனிக்கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால், பிரதான கட்சிகளில் இருந்து, முக்கிய பிரமுகர்கள் ஓட்டம் பிடிக்க தயாராகி உள்ளனர்.

அம்மா தி.மு.க.:
அந்த வரிசையில், தன் ஆதரவாளர்களும் இடம் பெற்று விடக் கூடாது என்ற கவலையும் , பயமும் தினகரனுக்கு உருவாகி உள்ளது. எனவே, தனிக்கட்சி துவங்கும் முடிவை, தினகரன் எடுத்துள்ளார்.இது குறித்து, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும், தினகரனுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.எனவே, அனைத்திந்திய அ.தி.மு.க.,வை போல, ‘அனைத்திந்திய அம்மா தி.மு.க.,’ என்ற பெயரில், புதுக்கட்சியை துவக்கி, அதை பதிவு செய்ய, ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி கொடியில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவத்தை பொறிப்பது என்றும், அடுத்து வரும் தேர்தல்களில், ‘குக்கர்’ சின்னத்தையே பயன்படுத்துவது என்றும் தீர்மானித்து உள்ளார்.

‘அ.தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் தான், தன் செல்வாக்கு உயரும். அ.தி.மு.க.,வில் சேர்ந்தால், ஆட்சி, அதிகாரத்திற்காக ஆசைப்பட்டதாக, பொதுமக்கள் கருதுவர். இது, தன் வளர்ச்சியை பாதிக்கும்‘ என்றும், தினகரன் நினைக்கிறார்.அத்துடன், ரஜினியின் அரசியல் பிரவேசம், மற்ற கட்சிகளைமட்டுமின்றி, தன்னையும் சேர்த்து பாதிக்கும் என்ற பயமும், அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ரஜினிக்கு முன், அம்மா தி.மு.க.,வை துவக்க, தினகரன் திட்டமிட்டு உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

பழைய கணக்கு சரிப்படுமா?
எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவக்கிய ஓராண்டில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில், மாயத்தேவர் 
போட்டியிட்டு, வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க., மூன்றாமிடமும், எதிர்க்கட்சியாக இருந்த, காங்., இரண்டாம் இடத்திற்கும் தள்ளப்பட்டன. அதன்பின், காங்., கரைந்து போனது. பின், அண்ணாதுரையை மையப்படுத்தி, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

தற்போது, ஆர்.கே.நகர் தேர்தலில், அ.தி.மு.க., இரண்டாம் இடமும், தி.மு.க., மூன்றாவது இடமும் சென்றுள்ளதால், எதிர்காலத்தில், ஜெயலலிதாவை மையப்படுத்தி தான், அ.தி.மு.க., - தினகரன் கட்சி இடையே போட்டியிருக்கும். தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது என, தினகரன் தரப்பினர்  கணக்கு போடுகின்றனர்.

Label