OUR CLIENTS
அதிகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், மத்திய மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் இடையே போட்டி!
அதிகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், மத்திய மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் இடையே போட்டி! Posted on 03-Jan-2018 அதிகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், மத்திய மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் இடையே போட்டி!

வேலூர், ஜன.3-
வேலூர் மாவட்டம் என்றாலே அதிமுகவில் உள்குத்து நிறைந்த மாவட்டமாகும். குறிப்பாக கிழக்கு மாவட்டத்தில் மட்டும் ஒரு டஜன் மாவட்ட செயலாளர்கள் வந்தார்கள் சென்றார்கள். ஆனால் மேற்கு மாவட்டத்துக்கு மட்டும் அமைச்சர் வீரமணி இறுக ஆணி அடித்து கொண்டு யாரையும் வரவிடாமலும், வளரவிடாமலும் கவனமாக பார்த்து கொண்டு வருகிறார். இவரே மாவட்ட செயலாளர், இவரே அமைச்சர். இதனால் மேற்கு மாவட்டம் களையிழந்து காணப்படுகிறது. புதுமுகங்கள் வர முடியாத நிலையே மேற்கு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவுகிறது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலை வந்தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் பலர் தங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் அதிமுக தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த சோளிங்கர் தொகுதி எம்எல்ஏ என்.ஜி.பார்த்திபனின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வகித்துவந்த வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியையும் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டத்தில் பறித்துள்ளதாக அறிவித்துள்ளனர். டிடிவி.தினகரனின் ஆதரவாளரான என்.ஜி.பார்த்திபன் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் இருந்து துளி கூட மாறவில்லை. இதனால் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ சு.ரவி, சுமைதாங்கி ஏழுமலை, எஸ்.ஆர்.கே.அப்பு, பெல்.கார்த்திகேயன், ராமு உள்ளிட்டோர் குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றனர். இதேபோன்று காட்பாடி ஒன்றிய செயலாளராக இருந்த கோரந்தாங்கல் குமார் தினகரனின் ஆதரவாளராக மாறிவிட்டதால் அந்த பதவியும் காலியாக நிரப்பப்படாமல் இருக்கிறது. குறிப்பாக இவர் சர்க்கரை ஆலை தலைவராகவும் பதவி வகித்தார். அந்த பதவியும் அண்மையில் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுஒருபுறம் இருக்க வேலூர் மேற்கு மாவட்டம் வன்னியருக்கும், கிழக்கு மாவட்டம் முதலியாருக்கும் என்று எழுதப்படாத சட்டமாக அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக உருவாகும் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு முதலியார் சமுதாயத்துக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் குடியாத்தம் நகர செயலாளராக உள்ள ஜே.கே.என்.பழனிக்கு மாவட்ட செயலாளர் பதவியை ஒதுக்கி தர திட்டமிட்டு அமைச்சர் வீரமணி காய் நகர்த்துவதாக ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு காவேரிப்பாக்கம் ராஜா, கணியம்பாடி ராகவன் ஆகியோரும் ஒருபுறம் காய்நகர்த்தி வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒன்றிய செயலாளர் பதவியே நிரந்தரமாக தங்களுக்கு கிடைத்தால் போதும் என்று அமைதியாக இருந்து வருகின்றனர். 

இதற்கிடையே ஒரு முக்கியமான நபரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்தான் வேலூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மருத்துவர் வி.எஸ்.விஜய். இவர் டிடிவி தினகரன் அணிக்கு தாவினார். பின்னர் மீண்டும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை (ஐ.டி.ரெய்டு பயம் எதிரொலி) இபிஎஸ்&ஓபிஎஸ் அணிக்கு திரும்பி விட்டார். ஆனால் இவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ சீட் கிடைக்காமல் செய்ததற்கு அமைச்சர் வீரமணியின் பங்கு அளப்பரியது. இப்போது மத்திய மாவட்ட செயலாளர் பதவியாவது தனக்கு கிடைக்குமா? என்று தனது நல விரும்பிகளோடு காய் நகர்த்த தொடங்கியுள்ளார். இதில் வி.எஸ்.விஜய் பெயர்தான் ஹிட் லிஸ்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வளர்ச்சி தடைபட முக்கிய காரணமாக இருப்பவர் அமைச்சர் வீரமணி என்று ரத்தத்தின் ரத்தங்கள் தரப்பில் முனுமுனுக்கப்படுகிறது. மருத்துவர் வி.எஸ்.விஜய்யின் அபார வளர்ச்சிக்கு தடையாக, தடைக்கல்லாக, இடையூறாக இருப்பதே அவருடன் உள்ள வழக்குரைஞர் என்று சொல்லிக் கொண்டு திரியும் தாஸ்தான் என்று அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் தரப்பில் கூறப்படுகிறது. அரசியல் நோக்கர்களும் இதையே வலியுறுத்துகின்றனர். 


வேலூர் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை யாரும் வளர்ந்துவிடக் கூடாது. இப்படி பார்த்தால் பொறாமை அடையும் அதிமுகவினர் அவர்களது காலை நேரம் பார்த்து வாரிவிடுகின்றனர். காட்பாடியில் நடக்கும் அரசியல் நேருக்கு மாறானது. அதிமுக என்ற கரை வேட்டி கட்டிக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சரும், இந்நாள் காட்பாடி தொகுதி எம்எல்ஏவுமான துரைமுருகன் வீட்டுக்குச் சென்று பணம் வாங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுநாள் வரை இது தலைமைக்கு தெரியாமலா இருக்கும். ஆனால் எந்தவித நடவடிக்கையும் அதிமுக தலைமை அவர்கள் மீது எடுத்ததாக எந்த தகவலும் இல்லை. இப்படி சிறப்பாக பணியாற்றி வரும் அதிமுகவினர் இருக்கும் போது காட்பாடியில் எப்படி அதிமுக வளரும், தொகுதியை கைப்பற்றும். 

வேலூர் மாவட்ட அதிமுகவில் கிழக்கு மாவட்டத்தை கைப்பற்ற வழக்கம்போல கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் யார் மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்றுவார் என்ற ஆவல் அதிமுகவில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் இடையே இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவரை தேர்வு செய்து வாரியத்தலைவர் பதவி கொடுக்க இருப்பதாகவும், அதிமுக தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு) அமைச்சர் வீரமணியையே நியமித்து விடலாம் என்று அதிமுக தலைமை எண்ணுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


நிலைமை இப்படி இருக்க ஓபிஎஸ்&இபிஎஸ் இருவரும் டிடிவி ஆதரவாளர்களின் பதவியை பறித்து விட்டார்கள். ஆனால், யாருக்கு பதவி கொடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்காவது பதவி கொடுத்தால் எதிர்தரப்பினர் டிடிவி பக்கம் தாவ இருப்பதாக தகவல் வருவதால் பதவி வழங்குவதில் குழம்பிபோய் இருக்கிறார்கள். இதேநிலைதான் ரத்தத்தின் ரத்தங்கள் இடையே காணப்படுகிறது. இனி அதிமுகவில் உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் டிடிவி பக்கம் செல்வார்களா? ஓபிஎஸ்&இபிஎஸ் பக்கம் செல்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label