OUR CLIENTS
திமுகவுடனான கூட்டணி தொடரும் தமிழக அரசியலில் முதன்மை இடத்தை மதிமுக பிடிக்க முடியாதது ஏன்?
திமுகவுடனான கூட்டணி தொடரும் தமிழக அரசியலில் முதன்மை இடத்தை மதிமுக பிடிக்க முடியாதது ஏன்? Posted on 03-Jan-2018 திமுகவுடனான கூட்டணி தொடரும் தமிழக அரசியலில் முதன்மை இடத்தை மதிமுக பிடிக்க முடியாதது ஏன்?

சென்னை, ஜன.3-
திமுக, அதிமுகவின் வாக்கு வங்கி நிலை பெற்றிருப்பதால் தமிழக அரசியலில் முதன்மை இடத்தை பிடிக்க முடியவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திராவிட இயக்கத்தின் லட்சியங்களை பாதுகாப்பதற்காக 1994ல் மதிமுகவை தொடங்கினோம். கடந்த 24 ஆண்டுகளாக தமிழகத்தின் நலன், தமிழகத்தின் எதிர்காலம் மற்றும் தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் இடைவிடாது போராடி வருகிறோம்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியார்மயமாவதை தடுத்து நிறுத்தியது, தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு நீதிமன்றத்தில் தடை பெற்றது, முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் மதிமுக நடத்திய போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட நன்மைகளையும் அனைவரும் அறிவர்.

நான் அரசியலுக்கு வந்து 53 ஆண்டுகள் கடந்துவிட்டன. மதிமுகவை தொடங்கி 24 ஆண்டுகள் ஆகிறது. சில நேரங்களில் உத்திகளை மாற்றினாலும் அடிப்படை கொள்கையில் என்றுமே சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனாலும் எங்களால் தமிழக அரசியலில் முதன்மை இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுகவின் வாக்கு வங்கி நிலைபெற்று இருப்பதே இதற்கு காரணம். திமுகவுடன் மதிமுக கூட்டணி தொடரும்.

1996ல் மதிமுக சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், திடீரென புதிய அணி உருவானதால் அந்த வாய்ப்பு கை நழுவியது. அதன்பிறகு தனித்தும், கூட்டணியிலும் போட்டியிட்டோம். ஒரு தேர்தலை புறக்கணித்தோம். எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்துள்ளோம். பதவிகளைப் பெற்றவர்கள் கட்சியை விட்டு வெளியேறினாலும் உணர்வுள்ள தொண்டர்கள் எங்களுடனேயே இருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அந்த அடிப்படையில் ரஜினியும் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் சாதிக்க திரைப்பட நடிகர் என்ற தகுதி மட்டும் போதாது. இதற்குமேல் ரஜினி குறித்து எதுவும் கூற விரும்பவில்லை.

1998, 1999, 2004ல் மதிமுக இடம்பெற்ற கூட்டணி வெற்றி பெற்றது. 2004 தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல வைகோவின் பிரச்சாரம் முக்கிய காரணம் என பத்திரிகைகள் எழுதின.  1989ல் நான் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்தபோது திமுக ஆட்சியைப் பிடித்தது. என் மீது வன்மம் கொண்ட சிலர் வைகோ ஆதரித்ததால்தான் ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்தது என பேசி வருகின்றனர்.

இது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை.   இந்த கருப்புத் துண்டுக்காரனின் வலிமை மக்களுக்குத் தெரியும். இவ்வாறு கூறினார்.

Label