வேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த வில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு Posted on 04-Jan-2018
வேலூர், ஜன. 4-
காட்பாடியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.16 லட்சம் செலவில் புதியதாக கால்வாய் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டுகள் சீரமைக்கும் பணியில் சில குறைபாடுகள் தான் உள்ளது. 3 நாட்கள் கால அவகாசம் நீட்டித்துள்ளது போதுமானது. மருத்துவ கமிஷனை மத்திய அரசு அமைத்தால் அது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தான் சாதகமாக அமையும். எனவே அது தேவையற்றது.
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை தமிழகத்தில் பயன்படுத்தவில்லை என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு நிதி பயன்படுத்தவில்லை என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். இது குறித்து கலெக்டரை சந்தித்து பேச உள்ளேன். அரசு போக்குவரத்து கழகங்கள் முழுவதும் நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாக திறமையின்மையே காரணம்.
இப்படியே சென்றால் அரசு போக்குவரத்து கழகமே இல்லாத நிலை உருவாகும். இனி அரசு போக்குவரத்து கழகம் இருக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியினர் அந்த 18 எம்.எல்.ஏக்களை சபையில் அனுமதித்தால் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும் அனுமதிக்க தயாரா? இவ்வாறு அவர் கூறினார். கதிர்ஆனந்த் உள்பட தி.மு.க. பிரமுகர்கள் ஏராளமானோர் பங் கேற்றனர்.