சுவர்களில் தேசத்தலைவர்கள் படம் Posted on 04-Jan-2018
பூவிருந்தவல்லி, ஜன. 4
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் அசுத்தமான இடங்களில் உள்ள சுவர்களில் தேச தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தினர் பள்ளி மாணவர்கள்.
சென்னையின் மையப் புள்ளியாக விளங்கும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்தப் பகுதியில் அதிக அளவில் தனியார் கல்லூரி மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் பூந்தமல்லி பேருந்து நிலையம் எப்போது மக்கள் கூட்டம் அலை மோதுவது மட்டுமல்லாமல் கூட்டம் நிறைந்த பகுதியாகவே காட்சி அளிக்கிறது. மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வாங்குவதாலும், சரியாக பராமரிக்காத காரணத்தால் பயணிகள் பஸ் நிலையத்தில் உள்ள காலி இடங்களில் திறந்த வெளியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை போக்கும் வகையில் பூந்தமல்லி அடுத்து உள்ள அகரமேல் பகுதியில் இயங்கி வரும் விவேகானந்தா கல்விக் குழுமத்தின் ஓர் அங்கமான ரவுண்ட் டேபிள் 30 விவேகானந்தா வித்யாலயா முதல்வர் பிரியசுதா அறிவுறுத்தல் படி அப்பள்ளி மாணவர்கள் தூய்மை இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அசுத்தமாக உள்ள இடங்களை சுத்தம் செய்து அங்குள்ள சுவர்களை தூய்மைப்படுத்தி நம் தேசத் தலைவர்களின் படங்களை வரைந்து வண்ணங்கள் தீட்டி அப்பகுதியை தூய்மைப்படுத்தி வருகின்றனர். இச்செயல் பயணிகள் மட்டுமின்றி
அப்பகுதி மக்களிடையே பொரும் வரவேற்பை பெற்றுள்ளது.