OUR CLIENTS
தேனி, திருவண்ணாமலையில் சித்தா&யோகா மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தேனி, திருவண்ணாமலையில் சித்தா&யோகா மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் Posted on 05-Jan-2018 தேனி, திருவண்ணாமலையில் சித்தா&யோகா மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, ஜன.5-

முதலாவது சித்த மருத்துவ தினம் சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.   இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய முறை மருத்துவம் என்பது நம் நாட்டின் தனித்தன்மையான பாரம்பரியமாகும். நினைவிற்கு எட்டாத காலம் தொட்டே இந்திய முறை மருத்துவங்கள் நம்பிக்கைக்குரிய சுகாதார கவனிப்பை லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு நல்கி வருகின்றன.

இச்சுகாதார சேவை முறைகள் நாடு முழுவதும் பொதுவாக வளரும் மூலிகைகளையே மருந்துகளுக்கு தலை யூற்றாகக் கொண்டுள்ளன. இப்பாரம்பரிய மருந்துகளின் பலாபலன் காலம் கடந்து நிற்கின்றது. “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற அடித்தளத்தின் மீது இந்திய மருத்துவ முறைகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருத்துவ முறைகளான, சித்தா, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளுடன் பிரபலமாக உள்ள யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ‘ஆயுஷ்’ என்பதற்கு இணையானதாகும்.

அன்னிய மண்ணிலிருந்து இந்தியாவிற்கு வந்தவையாக யுனானி மற்றும் ஓமியோபதி முறைகள் இருந்தாலும், நவீன மருத்துவம் வரும் முன்னரே நம் நாட்டில் வேரூன்றிவிட்ட அம்மருத்துவ முறைகள் மக்களால் நன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை நாட்டின் மருத்துவ நெறிமுறைகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக உள்ளன.

விரைவில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் 148 சித்த மருத்துவர்கள் மற்றும் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் நலவாழ்வு மையங்களில் 14 உதவி மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தேனி மற்றும் திருவண்ணாமலையில் 7 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துடன் இணைந்த ஆயுஷ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

சித்த மருத்துவர்கள் தொக்கணம், வர்மம் போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கும் பொருட்டு, 1,250 சித்த மருத்துவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.
சென்னை கன்டோன் மன்ட் மருத்துவ மனையின் சித்தா மற்றும் ஆயுர்வேதா பிரிவுகள், 46 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். டெங்கு மற்றும் சிக்கன் குன்யா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மத்திய இணை செயலாளர் பிரமோத் குமார் பதாக், சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்,  இந்திய மருத்துவ கூடுதல் தலைமை செயலாளர் மோகன் பியாரே, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Label