OUR CLIENTS
தமிழக அரசியலில் மாற்றம் வருமா? வராதா?
தமிழக அரசியலில் மாற்றம் வருமா? வராதா? Posted on 05-Jan-2018 தமிழக அரசியலில் மாற்றம் வருமா? வராதா?

சென்னை, ஜன.5-
தமிழக அரசியலில் தை பிறப்பதற்கு முன்னால் அதிமுக அமைச்சர் சபையில் மாற்றம் வருகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒருபக்கம் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மறுபக்கம் இபிஎஸ் ஆதரவாளர்களும் மூன்றாவது பக்கத்தில் தினகரன் ஆதரவாளர்களும் தனித்தனியாக தேர்தல் பணியாற்றியதை அரசியல் ஆய்வாளர்கள் நேரடியாகவே கண்டார்கள். அதேநேரம் பதவி இல்லாத அதிமுக எம்எல்ஏக்கள் யாரை அணுகினால் நல்ல பதவிகளை வாங்கலாம் என்ற தனக்கு வேண்டியவர்களை அணுகியதை உளவு அதிகாரிகள் கவனித்த வண்ணம் உள்ளனர்.  இபிஎஸ் ஆட்சி நீடிக்குமா? இல்லை கவிழுமா? என்ற கேள்விக்கு ஆட்சி நீடிக்கும் என்று ஒற்றை வரியில் பதில் வந்தாலும் இன்று இபிஎஸ் அணியில் இருக்கும் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஒரு சரியான நிலையில் இல்லை.

அதேநேரம் தமிழக ஆளுநர் ஏதோ ஒரு திட்டத்தோடு தமிழகத்தை பற்றி முழுமையாக தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகளையும் மக்களையும் சந்தித்து வருகிறார். இதுவரையும் தமிழகத்தில் இருந்த ஆளுநர்கள் இதுபோன்று பொது தொண்டுகளை வீதியில் இறங்கி செய்வதே இல்லை. இவர் மக்களோடு மக்களாக மக்களுக்கு வேண்டியதை செய்ய வருகிறேன் என்று களம் இறங்கி இருப்பதால் அவரை யாருமே தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்தால் இவர்தான் முதல்வர் போல் செயல்பட்டு மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்பது இருப்பதால் தமிழக நிலவரத்தை தமிழக மக்களுக்கு வேண்டியதை சரியாக செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் இவர் மாவட்டத்துக்கு மாவட்டம் செல்வதும் அங்குள்ள ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஆய்வு செய்வதும் மக்களின் குறைபாடுகளை வரும் வழியில் பெற்றுக் கொண்டு உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறேன் என்று சொல்லும் ஒரு வித்தியாசமான செயலாக தெரிகிறது. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி பலமுறை நடந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் ஆளுநருடன் மத்தியில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின் கட்சிக்காரர்கள் உடன் இருப்பார்கள். முன்பு மத்திய அரசு காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கும்போது ஆளுநர் ஆட்சி வரும் போது ஜி.கே.மூப்பனார் ஆளுநருடன் இருந்து முதல்வர்போல் செயல்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

இப்போது தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜ கட்சியை சேர்ந்தவர்கள் தமிழக ஆளுநருடன் இருந்து ஆறு மாதம் அதிகாரத்தில் இருக்க வேண்டியது வரும். அந்தநேரம் தமிழகத்தில் பாஜ வளர வாய்ப்புகள் உண்டு. இன்று நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி மூன்று பிரிவாக பிரிந்து செயல்பட்டாலும் ஓபிஎஸ்&இபிஎஸ் ஒரே அணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் தினகரன் தனக்கு இருக்கும் சக்தியை இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காட்டிவிட்டார். பணத்தால் எதையும் செய்யலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்துள்ளது. ஒரு குறிப்பைச் சொல்ல வேண்டும் என்றால் தேனி மாவட்டத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் ஜெயலலிதாவுக்காக தன் பதவியை விட்டு கொடுத்தவர்.அதே தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற உதவியாக இருந்தவர். அதே தேனி மாவட்டத்தில் தினகரன் எம்பியாக இருந்த காலகட்டத்தில் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. தமிழக அமைச்சராக கூட ஆகமுடியாத நிலையில் இன்று ஓபிஎஸ்ஸூக்கு எதிராகவும், இபிஎஸ்ஸூக்கு எதிராகவும் களம் இறங்கி வேலை செய்து வருகிறார். இவர் நடந்ததை சற்று திரும்பி பார்க்க வேண்டும். 

தினகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற திட்டமே இல்லாது செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் மீடியாவில் பலதரப்பட்ட கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். நாங்கள் திமுகவுடன் சேர்ந்து கூட எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சியை அகற்றுவோம் என்று சொல்லி வருவதால் மத்திய அரசு தமிழக அரசை கூர்மையாக கவனித்து வருகிறது. ஆகவே, தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு முன்பே ஆளுநர் ஆட்சி வந்தாலும் சரியான காரணத்தை மத்திய அரசு காட்ட தவறாது என்பதுதான் இன்றைய சூழலில் உருவான கருத்தாக உலா வருகிறது. அதேநேரம் எனக்கு பின்னாலும் தமிழகத்தில் 100 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று ஜெயலலிதா சொன்னதை மறந்து விட்டார்களே என்று தொண்டர்கள் ஆதங்கத்தில் இருப்பதை தலைவர்கள் அறிந்து கொள்ளாமல் தனக்கு பதவி தருபவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். 

அம்மாவை மறந்துவிட்டார்கள். ஆர்.கே.நகரில் இரட்டை இலையை மறந்து மற்றவர்களுக்கு வாக்களித்து ஜெயலலிதா மரணத்துக்கு பின்னால் இரட்டை இலையே தோற்றுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஜெயலலிதா சொன்ன சொல்லை மறந்தது யார் தொண்டர்கள் மறந்துவிட்டார்கள். ஆர்.கே.நகர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவாரா? இல்லை ஓபிஎஸ்&இபிஎஸ் என்ற இரட்டையர்கள் கையில் தொடருமா? என்பதே ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இல்லை டிடிவி தொடங்க உள்ள பேரவை அதிமுகவில் உள்ள ரத்தத்தின் ரத்தங்களை அரவணைக்குமா? இனி அடுத்தது என்ன?நாமும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எம்ஜிஆர் எதற்காக 
அதிமுகவை ஆரம்பித்தாரோ அந்த நோக்கம் கொள்கை கோட்பாடு இன்று கடைப்பிடிக்கப்படாமல் அவரவர் விருப்பம்போல கட்சியை வழிநடத்தி வருவது பழைய அதிமுகவினரை எரிச்சலடையச் செய்துள்ளது. இதை பலர் வெளியில்  சொல்ல முடியாமல் மனதுக்குள் வைத்து புழுங்குகிறார்கள். விரைவில் அதிமுக யார் வசம் முழுமையாக ஒரே கட்சியாக இயங்கப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.  ஒரு கோடி தொண்டர்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கட்சியை கட்டி காப்பாற்றப் போகிறவர் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label