OUR CLIENTS
வேலூர்&லப்பைகிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவிப்பு! மணல் லாரிகள் அட்டகாசம் தொடருவதாக தகவல்!
வேலூர்&லப்பைகிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவிப்பு! மணல் லாரிகள் அட்டகாசம் தொடருவதாக தகவல்! Posted on 05-Jan-2018 வேலூர்&லப்பைகிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவிப்பு! மணல் லாரிகள் அட்டகாசம் தொடருவதாக தகவல்!

வேலூர், ஜன.5-
வேலூரில் இருந்து லப்பைகிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க முடியாமல் தினமும் ஒட்டுநர்கள் தவிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் மணல் மாஃபியாக்கள் அட்டகாசம் தொடருவதாக புகார்கள் கூறப்படுகின்றன.

வேலூரில் மணல் லாரிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. இப்போது கட்டட பணியில் ஈடுபட்டுள்ள வீட்டின் உரிமையாளர்கள் ஒரு லோடு அதாவது 3 லோடு மணல் தேவைக்கு டிப்பர் லாரிகளை அணுகினால் அவர்கள் கேட்கும் தொகை தலைசுற்றி மயக்கம் வந்து விடுகிறது. ரூ.6,500க்கு விற்பனையான மணல் 3யூனிட், இப்போது படிப்படியாக உயர்ந்து ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அரசு மணல் குவாரியில் ரசீதுடன் கிடைக்கும் மணல் விலையை காட்டிலும் இப்போது மணல் விலை கிடுகிடுவென உயர்ந்து 3 யூனிட் மணல் தற்போது ரூ.24ஆயிரத்துக்கு அநியாயமாக மனசாட்சியே இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதை தட்டிக் கேட்பார் யாரும் இல்லை. குறிப்பாக இதை சோதனை செய்து மணல் லாரிகளை பறிமுதல் செய்வோரும் இல்லை. தினமும் சேனூர் பகுதியில் பாலாற்றில் இருந்து ஆயிரக்கணக்கில் மணல் லாரிகள் சென்று வந்த வண்ணமாக உள்ளன. யாராவது அரசு அலுவலர்கள் சோதனை செய்ய வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் தங்களது டிப்பர் லாரிகளை மின்னல் வேகத்தில் முட்புதருக்குள் கொண்டு சென்று மறைத்து நிறுத்தி விடுகின்றனர். 

மற்றபடி தினமும் இவர்களால் இந்த வழித்தடத்தில் விபத்துகள்தான் நடந்து வருகிறது. அண்மையில் பிளஸ் 1 பள்ளி மாணவி மணல் லாரியில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூரில் இருந்து லப்பைகிருஷ்ணாபுரம், லத்தேரி கேட் செல்லும் அரசு நகர பேருந்துகள், திருமணி செல்லும் தனியார் பேருந்து போன்றவை மணல் லாரிகள் பின்னாலேயே ஊர்ந்து செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் சரியான நேரத்துக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மணல் மாஃபியாக்கள் இந்த தொழில் நடத்தி கோடீஸ்வரர்களாகி வருகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கனிமவளத்துறையும் கண்டும் காணாமல் கமிஷன் மட்டும் பெற்றுக் கொள்கிறது. கிராம நிர்வாக அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை.  இந்த இழிநிலையை கவனத்தில் கொண்டுதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொ.சங்கர் (தற்போது செய்தி துறை இயக்குநர்) இந்த பகுதியில் பணியாற்றிய ஒட்டுமொத்த கிராம நிர்வாக அலுவலர்களையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் எந்த கிராம நிர்வாக அலுவலரும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட இடத்துக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மணல் லாரிகளுடன் கைகோர்த்து கொண்டு டயர் வண்டிகளும் மணல் திருட்டில் ஈடுபடுகின்றன.

 டயர் வண்டி மணல் இப்போது ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. காவல் துறையும் ÔபÕ வைட்டமினை பெற்றுக் கொண்டு விட்டுவிடுகிறது. காட்பாடி வட்டாட்சியர் பாஸ்கர் கல்லா கட்டுவதில் மட்டுமே குறியாக செயல்படுகிறார் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இப்படி பல பிரச்னைகள் மணல் விஷயத்தில் உலா வருகிறது.  இதற்கு முன்னர் மணல் வண்டிகளை பறிமுதல் செய்த முன்னாள் காட்பாடி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு அதிரடியாக ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி குவாரி இல்லாத இடத்தில் மணல் திருட மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதியளிக்கிறது என்பதே விடைதெரியாத கேள்வியாக உள்ளது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ராமன் மணல் மாஃபியாக்களுக்கு சரியான பாடம் புகட்டுவாரா? இல்லை வழக்கம் போல சிரித்து கொண்டே புன்னகை மன்னனாக வலம் வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label