OUR CLIENTS
ஜெ., வீட்டை கையகப்படுத்தும் பணி: 4 மாதங்களில் முடிக்க அரசு முடிவு!
ஜெ., வீட்டை கையகப்படுத்தும் பணி: 4 மாதங்களில் முடிக்க அரசு முடிவு! Posted on 05-Jan-2018 ஜெ., வீட்டை கையகப்படுத்தும் பணி: 4 மாதங்களில் முடிக்க அரசு முடிவு!

சென்னை, ஜன.5-
சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., வசித்த வீட்டை கையகப்படுத்தும் பணியை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ‘ஜெ., வசித்த, ‘வேதா நிலையம்‘ நினைவு இல்லமாக மாற்றப்படும்‘ என, 2017 ஆக., 17ல், முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கடந்த மாதம், 30ம் தேதி காலை, சென்னை மாவட்ட கலெக்டர், அன்புச்செல்வன் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆகியோர், ஜெ., வீட்டில் தணிக்கை மேற்கொண்டனர்.

போயஸ் கார்டனில் உள்ள, இரண்டு அறைகளை, வருமான வரித்துறை அதிகாரிகள், ‘சீல்’ வைத்துள்ளதால், அங்கு மட்டும் ஆய்வு மேற் கொள்ளப் படவில்லை. புல தணிக்கை 
முடிந்த நிலையில், அடுத்த கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இது குறித்து, சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது: ஜெ., வீட்டை கையகப்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, அனைத்து  துறை அதிகாரிகளும் இணைந்து, கூட்டு புல தணிக்கை மேற்கொண்டோம். 

தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 2013ன் கீழ், நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, நான்கு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மதிப்பீடு முடிவு செய்யப்பட்ட பின், நிலம் கையகப்படுத்தப்படுவது குறித்து, அறிவிப்பு வெளியிடப்படும். தற்போதைய நிலையில், ஜெ.,க்கு நேரடி வாரிசுகள் யாரும் கிடையாது. இரண்டாம் நிலை வாரிசுகள், நீதிமன்றம் சென்று, உரிய உத்தரவு பெற வேண்டும். 

அவ்வாறு உத்தரவு பெற்றால், நிலத்திற்குரிய இழப்பீடு தொகை, அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.  இல்லையெனில், இழப்பீடு தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, நிலத்தை கையகப் படுத்துவோம். நிலம் கையகப்படுத்தப்பட்ட பின், அடுத்த கட்ட நடவடிக்கைகளை, அரசு முடிவு செய்யும். போயஸ் கார்டன் இல்லத்தில், வருமான வரித்துறை வசம் உள்ள, 
இரண்டு அறைகளை இன்னமும் மதிப்பீடு செய்யவில்லை. அதை மதிப்பீடு செய்ய வேண்டும் என, அவர்களிடம் கோரியுள்ளோம். அவர்கள், அவகாசம் கேட்டுள்ளனர். அந்த அறைகளின் நீளம், அகலம், தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் போன்ற விபரங்கள் தேவை. அனுமதி கிடைத்ததும், அந்தப் பணியை நிறைவேற்றிவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Label