OUR CLIENTS
மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அரசு: ஆளுநர் பாராட்டு!
மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அரசு: ஆளுநர் பாராட்டு! Posted on 09-Jan-2018 மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அரசு: ஆளுநர் பாராட்டு!

சென்னை, ஜன.9-
வருவாய் பற்றாக்குறை உள்ளபோதிலும், மக்கள் நலத்திட்டங்களை பழனி சாமி அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

தமிழக சட்டசபையின் 2018ம் ஆண்டுக்கான  முதல் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல் முறையாக உரையாற்றினார். தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கிய ஆளுநர் புரோஹித்,  தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு  திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

அப்போது ஆளுநர் பேசியதாவது: ஒகி புயலில் சிக்கிய மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசுடன் இணைந்து, தமிழக அரசு செயல்பட்டது. கன்னியாகுமரிக்கு வந்து மீனவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒகி  புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு விரைவாக விடுவிக்க வேண்டும்.

தமிழக அரசின் வருவாய் குறைந்துள்ளபோதிலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. ஜிஎஸ்டி வரியை செயல்படுத்திய தமிழக அரசுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வறுமை அறவே இல்லாத தமிழகத்தை உருவாக்கும் இலக்குடன் இந்த அரசு செயல்படுகிறது.

சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடை முறைப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.  பட்டா மாறுதல்  உட்பட இணையதளம் வழியாக அரசு மேற்கொண்டு வரும் பணிகளால் மக்கள் பயனைடைந்து வருகின்றனர்.

வரும் 2030-ம் ஆண்டிற்குள் தமிழகம் நிலைக்கத்தக்க வளர்ச்சியை எட்டும். உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 96,341 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் தற்போது செயல்படுத்தப் பட்டு வரும் மெட்ரோ ரயிலின் மற்ற இரண்டு வழித்தடங்களும் அடுத்த இரண்டு ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும். மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். 

பெண்களுக்கான இருசக்கர வாகன மானியம் 20,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும். புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் ஆகிய விருதுகள் வழங்குவது அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை ஊக்குவிக்கும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசித்த  போது, ஆளுநரின் உரையை எதிர்த்து சட்டமன்ற எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

Label