OUR CLIENTS
அமைச்சர், ஆட்சியர் ஆசியோடு மணல் கொள்ளை!
அமைச்சர், ஆட்சியர் ஆசியோடு மணல் கொள்ளை! Posted on 09-Jan-2018 அமைச்சர், ஆட்சியர் ஆசியோடு மணல் கொள்ளை!

நாமக்கல், ஜன.9-
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் இறையமங்கலம் கிராமத்தில் எட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலில் ஊர் முக்கியஸ்தர்கள் 3 பேர் ஒன்று கூடி கிராமத்திற்கு அருகில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அந்த மூன்று பேரில் ஒருவரான தேவராஜ் என்பவருக்கு ரூ.8.50 லட்சத்துக்கு ஏலம் விட்டிருக்கிறார்கள்.  

மணல் அள்ளுவதை யாரும் வெளியில் சொல்லக் கூடாது என்று ஊர் கட்டுப்பாடும் விதித்துள்ளனர். கடந்த இருபது நாட்களாக பொக்லைன் மூலம் மணல் அள்ளிக் கொண்டுள்ளனர்.  சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் இப்படி சட்டவிரோதமாக கொள்ளை போகும் அபாயம் இங்கு நிலவி வருகிறது. இதை தடுத்து நிறுத்த யாரும் முன்வரவில்லை என்று சமூக ஆர்வலர்களும் கிராமவாசிகள் சிலரும் புகார் எழுப்பியுள்ளனர். கடந்த 2017 டிசம்பர் முதல் வாரத்தில்தான் அதிமுக பிரமுகர்களான துரைசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பள்ளிக்காடு ராஜூ என்கிற ராமசாமி, தேவராஜ் ஆகிய மூன்று பேரும் கூடி இந்த ஏலத்தை விட்டார்கள். அதன் பின்னர் டிசம்பர் 6 தேதி முதல் தினந்தோறும் இரவு நேரத்தில் காவிரி ஆற்றில் ஒரு பொக்லைன் மூலம் மணல் அள்ளி ஐந்தாறு டிராக்டர்களில் ஏற்றி வந்து ஆற்றை ஒட்டியுள்ள துரைசாமி தோட்டத்துக்குள் மலை போல குவித்து வைத்துள்ளனர். இதுபற்றி எப்படியோ புகார் தெரிந்து வருவாய்த்துறையினர் கடந்த டிசம்பர் 13ம் தேதி துரைசாமி தோட்டத்துக்குள்ள மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தனர். 

ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் சென்றதை பார்த்த பொதுமக்களுக்கு சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. அதன் பிறகு 5 நாட்கள் மணல் அள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு நாமக்கல் மாவட்டத்தில், செல்வாக்கான ஒரு அமைச்சரிடம் பேசி விட்டு அவர் ஆசியோடு மணல் அள்ள ஆரம்பித்து விட்டார்களாம் மணல் மாஃபியாக்கள். ஓர் இரவில் மட்டும் 100 முதல் 120 டிராக்டர் லோடு மணல் அள்ளுகிறார்கள். மேல் மட்டம் வரை கமிஷன் போவதால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அநீதியை எங்கு போய் கூறுவது என்று புலம்புகின்றனர் கிராமவாசிகள்.

மணல் அள்ளும் இடமான இறையமங்கலம் காவிரி ஆற்றில் மன்னாதம்பாளையம் ஈஸ்வரன் « காயில் பரிசல் துறையில் மணல் கடத்தப்படுகிறது. அந்த பாதை தனியாருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மிரட்டுகிறார்களாம் பாதைக்கு சொந்தக்காரரை. பொக்லைன், 6 டிராக்டர்கள், டிப்பர் லாரிகள் என்று அணிவகுத்து இரவு 8 மணிக்கு துரைசாமி தோட்டத்தில் இருந்து ஆற்றங்கரைக்கு வந்து விடுகின்றனவாம். பின்னர் இரவு முழுவதும் மணல் அள்ளும் பணியில் ஈடுபடுகிறது 50க்கும் மேற்பட்ட கும்பல். துரைசாமி தோட்டத்தில் மணலை கொட்டி விட்டு வாகனங்கள் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்து விடுகின்றனவாம், இந்த மணல் திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடமும் புகார் கொடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் ஆட்சியரோ மழுப்பலாக பதில் கூறியதோடு மணல் மாஃபியாக்களை கைது செய்வதில் எந்தவித ஆர்வமும் அவர் காட்டவில்லையாம். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா மணல் கொள்ளையை தடுக்க  தனி மொபைல் எண் வெளியிட்டுள்ளார். நாமக்கல் ஆட்சியரோ  ஆதாரத்தோடும், இடத்தை காண்பித்தாலும் நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் கழுவும் மீனில் நழுவும் மீன் போன்று கழற்றி கொண்டாராம். ஆட்சியர்கள் பலவிதம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். மணல் கொள்ளை என்பது நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் மற்றும் அதிமுக அமைச்சர் ஒருவர் ஆசியுடன் துணிச்சலோடு நடப்பது வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயமாகும். தமிழக அரசு மணல் கொள்ளை விஷயத்தில் கடத்தல் மணலை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் நாட்டின் கனிமவளம் குறைவதோடு நீர்வளம் அதலபாதாளத்துக்கு சென்று விடும் அபாயமும் ஏற்படும். 

இதை நினைவில் கொண்டாவது ஆற்றில் குவாரிகள் இல்லாத இடங்க ளில் திருடப்படும் மணல் குறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை யாவது எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இனியாவது பல ரகங்களாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் திருந்துவார்களா? மௌனம் கலைப்பார்களா?. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label