OUR CLIENTS
அரசாணையை மீறி நுகர்வோர்களை ஏமாற்றும் ஜவுளி நிறுவனங்கள்!
அரசாணையை மீறி நுகர்வோர்களை ஏமாற்றும் ஜவுளி நிறுவனங்கள்! Posted on 09-Jan-2018 அரசாணையை மீறி நுகர்வோர்களை ஏமாற்றும் ஜவுளி நிறுவனங்கள்!

வேலூர், ஜன.9-
வேலூர் மாவட்டத்தில் வாலாஜாவில் பரிசுகள் வழங்குவதாக கூறி நுகர்வோர் தலையில் விற்பனையாகாமல் உள்ள பழைய துணிகளை கட்டும் வாலாஜா கமல் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் நிறுவனம் என்று நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் என்றாலே கல்வியறிவு குறைந்த மாவட்டமாகும். இதனால்தான் இந்த மாவட்டத்தை குறி வைத்து பலதரப்பட்ட தொழில்கள் தொடங்கப்படுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜவுளி ரகங்கள் மற்றும் ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்ய நூதன விளம்பரம் செய்து ஏமாற்றி வருகின்றனர். இதற்கு உதாரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் மெயின் ரோடு, இந்தியன் வங்கி எதிரில் கமல் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மற்றொரு கிளை நிறுவனம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மண்டி வீதியில் செயல்படுகிறது. இப்படி கிளைகளை வைத்து இயக்கி வருகின்றனர். 

அத்துடன் இணைப்பு நிறுவனமாக வாலாஜாவில் தொப்பை செட்டி வீதியில் கேஆர்பி ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனம் செயல்படுகிறது. இப்படி நுகர்வோர்களை குறிவைத்தே இதுபோன்ற நிறுவனங்களை இந்த கமல் குரூப்ஸ் நடத்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த கமல் சில்க்ஸ் நிறுவனத்தில் ஜவுளி வாங்கினால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துணிகள் கிழிந்து விடுகின்றன. தரமற்ற, பழைய மக்கிய துணிகளை விலை மலிவாக வாங்கி வந்து சூரத் போன்ற மில்களில் ஓரங்கட்டப்பட்டவைகளை இங்கு கொண்டு வந்து நுகர்வோர்களை ஏமாற்றி விற்பனை செய்து இந்த கமல் சில்க்ஸ் நிறுவனம் கொழித்து வருகிறது. வாங்கிய 2 மாதங்களுக்குள்ளாகவே துணி சாயம் போய் பழைய துணி மாதிரி தெரிவதும் வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து யாராவது நுகர்வோர் புகார் சொல்லவோ தட்டிக் கேட்கவோ கடைக்குச் சென்றால் போதும் அங்குள்ள பணியாளர்கள் ரௌடிகளை போல வாடிக்கையாளர்களை மிரட்டி வெளியில் அனுப்பி விடுகின்றனர். வியாபார நேரத்தில் இதுபோன்ற புகார்களை தவிர்க்க வேண்டும். இரவு கடை மூடும் போது வந்தால் பேசி கொள்ளலாம் என்று பேசி அனுப்பி வைத்து விடுகிறார்களாம். 

இதனால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று இந்த கடையில் துணி எடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் சொல்லி அனுப்பி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. நுகர்வோர்களை கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறார்கள். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குலுக்கல் முறையை வைத்து கொண்டு நுகர்வோருக்கு கவர்ச்சிகரமான விளம்பரம் அறிவித்து விட்டு ஏகபோகமாக விற்பனை செய்து கல்லா கட்டி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த இதுநாள் வரை மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை. 

ஒவ்வொரு பண்டிகையின் போதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக பல குலுக்கல்களை அறிவித்து நுகர்வோர் தலையில் பழைய துணிகளை சாமர்த்தியமாக கட்டி இவர் கொழிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே உள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, இப்போது பொங்கல் என்று பரிசு மழையில் நனைய வாரீர் என்று வாடிக்கையாளர்களை அழைத்து அவர்கள் தலையில் மிளகாய் அரைக்க தயாராகி விட்டது வாலாஜா கமல் சில்க்ஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போது பொங்கலுக்கு ரூ.700க்கு மேல் ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் வாங்கினால் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்படும் என்றும், மெர்சல் லைக்ரா வித் பிளவுஸ் சேலை ரூ.83க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரேமெண்ட் மேக்கர் சூட்டிங்ஸ் (1.30 மீ பிட்) (1+1) ரூ.450 என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த நிச்சய பரிசு என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை முன்நிறுத்தி வியாபாரம் கனகச்சிதமாக நடத்துகிறது வாலாஜா கமல் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் நிறுவனம். வேலூர் மாவட்ட மக்களை ஏமாற்றுவதோடு மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் உள்ள மக்களையும் ஏமாற்ற அங்கேயும் அதே போன்று கடையை திறந்து கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு நுகர்வோர் தலையில் பொருட்களை கட்டி பண மழையில் நனைந்து வருகிறது கமல் சில்க்ஸ். ஆதலால் ஆட்சியர்கள் இதுபோன்ற கவர்ச்சிகரமான குலுக்கல்களை நிரந்தரமாக நிறுத்தவும், சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள உத்தரவை பின்பற்றி நடக்கவும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். 

இதுபோன்று பல நிறுவனங்கள் குலுக்கல் முறையில் பரிசு திட்டம் என அரசாணையை மீறி செயல்படுகின்றன. நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  நுகர்வோர் பாதுகாப்பு அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் வேலூர் ராமன், திருவண்ணாமலை கந்தசாமி ஆகியோர் களம் இறங்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடைப்பிடிக்கபடுகிறதா இல்லை காற்றிலே பறக்க விடப்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label