OUR CLIENTS
அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும்படி ரங்கசாமி உத்தரவு - தொண்டர்கள் உற்சாகம்!
அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும்படி ரங்கசாமி உத்தரவு - தொண்டர்கள் உற்சாகம்! Posted on 09-Jan-2018 அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும்படி  ரங்கசாமி உத்தரவு - தொண்டர்கள் உற்சாகம்!

புதுச்சேரி, ஜன.9&-
புதுவை மக்களின் கோரிக்கைக்காகவும், நலனுக்காகவும், அடிப்படை வசதிக்காகவும் குரல் கொடுங்கள், எதிர்ப்பு தெரிவியுங்கள், போராட்டங்களை நடத்துங்கள் என்று தொண்டர்களுக்கு ரங்கசாமி திடீரென உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலுக்கு பின் அமைதியாக இருந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ரங்கசாமி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தபோதும் மவுனமாகவே இருந்து வருகிறார். இலவச அரிசி வழங்காதது, பண்டிகைக்கு இலவச துணி, சர்க்கரை வழங்காதது, வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் வரி, மின் கட்டணம், பஸ் கட்டணம் உயர்த்தியபோதும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் எந்த எதிர்ப்பும் வரவில்லை. 

இதனால் புதுவை அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் தீவிரமாக இறங்குமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சனி பெயர்ச்சிக்கு பிறகு ரங்கசாமி தீவிர அரசியலில் இறங்குவார் என என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தது. அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டிருந்த ரங்கசாமிக்கு தற்போது சனி பலன் தரும் வகையில் பெயர்ச்சி அடைந்துள்ளது.

இதனால் ரங்கசாமி உற்சாக மடைந்துள்ளார். 2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதால் அரசியலில் தீவிரம் காட்ட ரங்கசாமி முடிவெடுத்துள்ளார். தன் கட்சிக்காரர்களை அழைத்து புதுவை பொதுமக்களின் கோரிக்கைக்காகவும், நலனுக்காகவும், அடிப்படை வசதிக்காகவும் குரல் கொடுங்கள், எதிர்ப்பு தெரிவியுங்கள், போராட்டங்களை நடத்துங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தொகுதிதோறும் கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதி பிரச்னைகளை முன்வைத்து போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். முதல் கட்டமாக முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் என்.ஆர் டிரேட் யூனியன் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கனமழையினால் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்க தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தேவநாதன், அமைப்பு செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். என்.ஆர் ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், கந்தவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

Label