OUR CLIENTS
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த நடவடிக்கை பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த நடவடிக்கை பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு! Posted on 09-Jan-2018 உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த நடவடிக்கை பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு!

சென்னை, ஜன.9
போக்குவரத்து ஊழியர்களுக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது..  அதனை உணர்ந்து அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். வேலைக்கு வராவிட்டால் ஐகோர்ட் உத்தரவின்படி  அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 2.44 மடங்கு  ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு பற்றி தொழிலாளர்களுக்கு சரியாக தெரியாத நிலை இருக்கிறது. அவர்களுக்கு உண்மை தெரிந்தால் எல்லோரும் பணிக்கு திரும்பி விடுவார்கள், ஆனால் சிஐடியூ தலைவர்கள், நிச்சயம் இந்த ஊதிய உயர்வு கிடைக்காது என்று சொல்கிறார்கள், நான் சொல்கிறேன் நிச்சயம் இந்த ஊதிய உயர்வு கிடைக்கும் அதை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும்,.

சி.ஐ.டி.யூ மற்றும் எல்பிஎப் தொழிற்சங்கங்கள் கடந்த முறை பேச்சுவார்த்தை நடத்திய போது ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத்தொகை பற்றி தான் பேசினார்கள், அப்போது நிலுவைத்தொகை 1500 கோடி இருந்தது. அதை ஓரே தவணையாக ரூ 1250 கோடியாக முதல்வர் கொடுத்தார், கடந்த 8 மாதத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ 2, 175 கோடி வழங்கப்பட்டு விட்டது. 6 ஆண்டுகளில்  ஓய்வூதியர்களுக்கும் தற்போதைய தொழிலாளர்களுக்கும்  8 ஆயிரத்து 988 கோடி ரூபாய், வழங்கியிருக்கிறோம், ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றிருந்த திமுக ஆட்சியின்போது  ரூ. 3,685 கோடி தான் வழங்கப்பட்டது. 11 ம்தேதி ரூ 205 கோடி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை நிச்சயம் நிறைவேற்றுவோம்,  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இது 15 ஆண்டுகளாக இல்லாத ஊதிய உயர்வு, போக்குவரத்து துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு   வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. ஆனால்  போக்குவரத்து ஊழியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கியிருக்கிறோம்,  நாங்கள் பொய் சொல்வதாக சட்டபேரவையில் மூத்த உறுப்பினராக இருந்த சவுந்திர ராஜன் கூறியிருக்கிறார், நாங்கள் பொய் சொல்லவில்லை. அவர் தான் பொய் சொல்கிறார், 15 ஆண்டுகால பிரச்னைகளை ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்று கேட்டு பிடிவாதமாக போராட்டம் நடத்துகிறார்கள், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகை 7 ஆயிரம் கோடி என்று சவுந்தரராஜன் கூறுகிறார், 5 ஆயிரம் கோடி தான் வழங்க வேண்டியிருக்கிறது.   

அதுவும் கூட ஓய்வு பெறும் போது வழங்கவேண்டிய தொகை தான்  திமுக ஆட்சியின் போது ரூ 922 கோடி வழங்க வேண்டி இருந்தது. அதை நிர்வாக செலவுக்காக பயன்படுத்தினார்கள், ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை ரூ 1250 கோடியை ஒரே தவணையில் கொடுத்திருக்கிறார், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ 5000 கோடியை ஒரே தவணையில் வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம், மேலும் பயிற்சி இல்லாத தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவதாக தொழிற்சங்கங்கள் சொல்கின்றன,. அப்படி யாரையும் நாங்கள் பணியில் ஈடுபடுத்தவில்லை, பள்ளி வாகனங்கள் ஓட்டுவோர், ஓய்வு பெற்ற ஓட்டுனர்கள் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களை தான் பணியில் ஈடுபடுத்துகிறோம்,  இப்போது உண்மையை உணர்ந்து 80 சதவீத ஊழியர்கள் பணிக்கு திரும்பி விட்டார்கள், என்னுடைய மாவட்டத்தில் ( கரூர்) நூறு சதவீதம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள், மற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்திருக்கிறோம், நீதிமன்றமும் உத்தரவிட்டு இருக்கிறது. 

அவர்களும் பணிக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறோம், இல்லையேல்  நீதிமன்றத்தில் என்ன உத்தரவிடப்படுகிறதோ அதன்படி நடவடிக்கை எடுப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார், முன்னதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.

Label