OUR CLIENTS
ஜிஎஸ்டி வரியால் மாறாத சிமெண்ட், இரும்பு கம்பி விலை!
ஜிஎஸ்டி வரியால் மாறாத சிமெண்ட், இரும்பு கம்பி விலை! Posted on 10-Jan-2018 ஜிஎஸ்டி வரியால் மாறாத சிமெண்ட், இரும்பு கம்பி விலை!

வேலூர், ஜன.10-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அசாமில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு திருத்தியமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட  சிமெண்ட் மீதான வரி விதிப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் சிமெண்ட் தொடர்ந்து கூடுதல் விலையில் விற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. சிமெண்டும் ஸ்டீலும் இல்லாமல் எந்த கட்டுமானத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எப்போதுமே ஸ்டீலைவிட  சிமெண்டுக்குச் சற்றுக் கூடுதல் வரி விதிக்கப்படுவது வாடிக்கை. 

கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போதும் அது எதிரொலித்தது. சிமெண்டுக்கு 26 சதவீதமும், இரும்புக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்புக்கு எதிராக கட்டுமானத் துறையினரும் சிமெண்ட் உற்பத்தியாளர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். ஸ்டீல் அளவுக்கு சிமெண்ட் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிமெண்ட் மீதான வரி விதிப்பில் சற்று மாற்றம் செய்யப்படும என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிமெண்ட் மீதான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை.

இதனால் வழக்கம்போல ஸ்டீலுக்கும், சிமெண்டுக்குமான வரி வித்தியாசங்கள் தொடருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பின்படி சிமெண்ட் விலை குறைவதற்கான வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை. எனவே, பில்டர்களுக்கான செலவுகள் குறையவும் வாய்ப்பில்லை. புதிதாகத் திருத்தியமைக்கப்பட்ட வரிவிதிப்பின்படி ஏசி, வாஷிங்மெஷின் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைந்துள்ள நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான வீடு கட்ட உதவும் சிமெண்டுக்கு வரி குறைக்கப்டாதது ஏமாற்றமளிக்கிறது. அனைவருக்கும் வீடு, உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வரும் நிலையில் சிமெண்ட் மீதான வரியை குறைத்திருக்க வேண்டும் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

சிமெண்ட் மீதான வரி விதிப்பு குறைக்கப்படாவிட்டாலும் ஃபிளை ஆஷ் எனப்படும் நிலக்கரி சாம்பலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. 90 சதவீதத்துக்கும் மேலான ஃபிளை ஆஷை பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதன்படி ஃபிளை ஆஷ் பயன்படுத்தி தயாரிக்கப்படும் போர்ட்லாண்ட் போஸோலனா சிமெண்ட் வகைக்கு வரி விதிப்பு குறைந்திருக்கிறது. இந்த வகை சிமெண்டுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்கனவே அதிகமாக இருந்தது. தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலப்பொருட்களின் விலையை ஈடு செய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

ஆனால் ஃபிளை ஆஷ் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்காகச் செலவிடப்படும் தொகைக்கும் கிடைக்கும் வருவாய்க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இவை தவிர பெயிண்ட் மற்றும் ஸ்டீல் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதமாகவே தொடர்கிறது. எனவே, வீடு கட்டும் போதும் சிமெண்ட், ஸ்டீல், பெயிண்ட் போன்ற பொருட்களை வாங்கும்போது கூடுதல் தொகையைச் செலவிடும் நிலையில் மக்கள் உள்ளனர். இதேபோல பில்டர்களும் இந்த பொருட்களை வாங்க கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த கூடுதல் செலவு மக்கள் தலையில் கட்டப்படும்  என்பதால் வீடு வாங்குபவர்களுக்கான சுமையும் அதிகரிக்கவே செய்யும்.

வேலூரில் மார்க்கெட்டில் விற்பனையாகும் சில சிமெண்ட்டுகள் பேப்பர் மூட்டை பிரியா ரூ.330 முதல் அதிகபட்சமாக சில்லரை விலையில் ரூ.350 வரையும், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஒரு மூட்டை பேப்பர் பேக் ரூ.385க்கும், செட்டிநாடு அஞ்ஞனி பேப்பர் பேக் சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.340க்கும், ராம்கோ சிமெண்ட் பேப்பர் பேக் ஒரு மூட்டை ரூ.385க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அம்மா சிமெண்ட் பொதுமக்களுக்கு கிடைப்பதே இல்லை. ஆனால் விலை மலிவாக விற்பனை செய்யப்படுகிறது. இதை பலர் திருட்டுத்தனமாக வாங்கி கூடுதலாக ரூ.240க்கு விற்பனை செய்கின்றனர். இப்படி சிமெண்ட் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். 50 மூட்டைகள் வாங்கினால் மட்டுமே வண்டி வாடகை இலவசமாம். ஆனால் ஒரு மூட்டையை ஏற்றி இறக்கும் கூலி என்று ரூ.3 ஒரு மூட்டைக்கு கறந்துவிடுகின்றனர். 50 மூட்டைக்கு கீழ் வாங்கினால் ஒரு மூட்டைக்கு ரூ.5 ஏற்று இறக்கு கூலியாகவும், வண்டி வாடகையும் வீடு கட்டும் உரிமையாளரிடம் கறந்து விடுகின்றனர். ஆனால் உரிய ரசீது வழங்குவதே இல்லை. எல்லாமே துண்டு ரசீதுதான் வழங்கப்படுகிறது. 

இரும்பு கம்பிகள் வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் வித்தியாசமாக விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் எடை போட்டும், சில கடைகளில் எண்ணிக்கை அடிப்படையிலும் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். ஆனால் யாரும் உரிய பில் தருவதே இல்லை. மாறாக வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதை கணக்கு பார்க்க வேண்டியவர்கள் கைகட்டி மண்டியிட்டு வணிகர்களிடம் கையூட்டு பெற்றுச்செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இரும்பு கம்பி, சிமெண்டில் கொள்ளையோ கொள்ளையடிக்கின்றனர். இதன் விலையை ரூ.5 கூட மூட்டைக்கு குறைக்காமல் கொள்ளையடிக்கின்றனர் வியாபாரிகள். இதை கேட்பார் யாரும் இல்லை. வீடு கட்டுவோர் சிமெண்ட், இரும்பு கம்பிகள் வாங்கியே ஓட்டாண்டி ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. இதுஒருபுறம் இருக்க போலி சிமெண்ட் விற்பனையும் ஜரூராக நடந்து வருகிறது. இதனால் கடையை தேர்வு செய்து கலப்பட சிமெண்ட் விற்பனை செய்யாத கடையா? என்று ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளது நுகர்வோர். ஒரு வீடு கட்ட செங்கல், மணல், ஜல்லி, இரும்பு கம்பிகள், சிமெண்ட், ஜன்னல் கதவு செய்ய மரங்கள், பெயிண்ட், எலக்ட்ரிகல் பொருட்கள் என பல வகையான பொருட்கள் தேவைப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக அந்த கட்டடத்தை வடிவமைக்கும் கொத்தனார் நன்கு வேலை தெரிந்தவராக அமைய வேண்டும். இதை கவனத்தில் கொண்டுதான் வீட்டை கட்டிப்பார் என்று முன்னோர்கள் பழமொழி சொல்லி வைத்துவிட்டு சென்றுள்ளனர். ஆக மொத்தம் இத்தனை தொழிலாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறார் வீடு கட்டும் வீட்டின் உரிமையாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. எது எப்படியோஇதுபோன்ற தில்லுமுல்லுகள் அரங்கேறாத வகையில் மத்திய அரசும், மாநில அரசும் நுகர்வோரை காப்பாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள சூட்சுமங்களை சரியாக பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label