OUR CLIENTS
50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! Posted on 11-Jan-2018 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

வேலூர், ஜன.11-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பற்றி விளக்கம் அதிகம் சொல்லத் தேவையில்லை. நடத்துநராக  பணியாற்றி திரைப்படத்துறையில் புகுந்து இன்று கொடிகட்டி பறப்பவர்தான் ரஜினிகாந்த். ணூடந்த 20 ஆண்டுகளாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவரது அரசியல் பிரவேசம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி தற்போது பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இதே கேள்வி அரசியல்வாதிகளுடமும் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த மராட்டியரான ரஜினிகாந்த் தமிழ்த்திரையுலகில் தனக்கென ஓர் தனி இடத்தைப் பிடித்தவர். திரையுலகில் மட்டுமன்றி அரசியலிலும் சாதித்து காட்டிய எம்ஜிஆருக்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அதனால் எம்ஜிஆரைப் போலவே ரஜினியும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 1991 முதல் 1996ம் ஆண்டு வரை நடந்த ஜெயலலிதா ஆட்சி மீது மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1996 சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி ஆதரவுடன் தேர்தலை சந்திக்கலாம். தமிழகத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கலாம் என அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆலோசனை கூறினார். இதற்காக நரசிம்மராவ் ரஜினி சந்திப்புக்கும் அவர் ஏற்பாடு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி என நரசிம்ம ராவ் அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மூப்பனார் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) என்ற தனிக் கட்சி தொடங்கினார். ப.சிதம்பரம் உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரசார் மூப்பனாருடன் சென்றனர். திமுகவுடன் தமாகா கூட்டணி அமைத்தது. இத்ற்கு ரஜினியும், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமியும் பெரிதும் காரணமாக இருந்தனர்.

1996 பேரவைத் தேர்தலில் திமுக&தமாகா கூட்டணியை ஆதரிப்பதாக ரஜினி அறிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக அவர் ஈடுபடவில்லை என்றாலும் தேர்தலுக்கு முன்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என தெரிவித்தார். அவரது இந்த ஒற்றைவரி விமர்சனம் தமிழகத்தையே உலுக்கியது. திமுக தமாகா கூட்டணி சட்டப்பேரவை மக்களவை தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெற்றது. அதன்பிறகு ரஜினி அரசியலுக்கு வருவார். 2001 சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குவார் என பரபரப்பாக பேசப்பட்டது. சோ.ராமசாமியும், ஜி.கே.மூப்பனாரும் அதற்கான முயற்சியில் இறங்கினர். ஆனால் ரஜினி எந்த முடிவையும் உறுதியாக தெரிவிக்கவில்லை. அதன்பிறகு ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு எழுவது வழக்கமாகிவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்காத ரஜினி. தனது அரசியல் ஆர்வத்தை திரைப்பட வசனங்கள், மேடைப் பேச்சுகள். நண்பர்கள் உடனான சந்திப்புகளில் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்.

1996ல் படுதோல்வி அடைந்தாலும் 1998 மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து கணிசமான இடங்களை வென்று தமிழக அரசியலில் ஜெயலலிதா தன்னை நிலைநிறுத்தி கொண்டார். அதன் பிறகு திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தமிழகத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கினர். இதனால் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக யாராலும் வர முடியவில்லை. ஒரு கட்டத்தில் கருணாநிதி இருக்கும் வரை அரசியலுக்கு வர மாட்டேன் என ரஜினி தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். அதே காலகட்டத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அரசியல் பணிகளில் இருந்து கருணாநிதியும் முழுமையாக ஒதுங்கினார். ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ரஜினியால்தான் நிரப்ப முடியும். அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 

ஏற்கனவே, ரஜினியின் அரசியல் வருகை பற்றி கருத்துக் கணிப்பு நடத்திய சோ அதன் முடிவுகளை தெரிவித்து அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சோ மறைவுக்கு பிறகு துக்ளக் ஆசிரியரான எஸ்.குருமூர்த்தியும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வெளிப்படையாகவே பேசி வந்தார். இந்நிலையில் அண்மையில் ரஜினி 6 நாட்கள் ரசிகர்களை சந்தித்து தனிக்கட்சி தொடங்கி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1967ல் காங்கிரசிடம் இருந்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பிறகு கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. திமுக, அதிமுக ஆட்சியை வீழ்த்த இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி என பெரும் தலைவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின்னர் அவர்களும் இந்த இரு கட்சிகளில் ஒன்றிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினி, அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவாரா? என்பது போன்று கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. இதுபற்றி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் கேட்டபோது, ரஜினியின் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது. அவருக்கு வாழ்த்துகள், பல ஆண்டு திட்டத்தை இப்போது செயல்படுத்த முன்வந்துள்ளனர். தமிழக அரசியலில் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் பல கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது எந்தக் கட்சி என்பதை இப்போது கூற முடியாது என்றார். ஆனால் பாஜ மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமியோ, ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆன்மிக அரசியலுக்கு பலர் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். சிலர் பாஜவுடன் கூட்டணி சேருவார் என்று ரஜினி முடிவு பற்றி கருத்து வெளியிட்டுள்ளனர். 

அரசியலுக்கு வருவேன்  என அறிவிப்பு மட்டுமே ரஜினி வெளியிட்டுள்ளார். வேறு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. ஊடகங்கள்தான் அவரை பெரிதாக காட்டுகின்றன. ரஜினிக்கு தமிழகத்தை பற்றிய எந்த விவரமும் தெரியாது. தமிழக மக்கள் புத்திசாலிகள். ரஜினியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அவர் வந்தாலும் வராவிட்டாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜ முயன்றால் கட்சியில் இருந்து நான் விலகி விடுவேன் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் ரஜினியின் பின்னணியில் பாஜ இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதிமுக அரசை எதிர்ப்பது போல மத்திய பாஜ அரசையும் அவர் எதிர்க்க வேண்டும். ரஜினியின் அடுத்தடுத்த நகர்வுகளை வைத்தே இனி கருத்து கூற முடியும் என்றார். தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தமிழகத்தில் 60 ஆண்டுகளாக உரைந்து கிடக்கும் திராவிட அரசியலில் ரஜினியின் வருகை பூகம்ப மாறுதல்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன். தமிழகத்தில் அல்லது வெளிமாநிலங்களில் உள்ள வேறு எவரைவிடவும் ரஜினியின் ஆன்மிக அரசியல் மோடிக்கு நெருக்கமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வென்றார். இதன் வாயிலாக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொண்ட ரஜினி அரசியலில் இறங்க துணிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் ரஜினியின் அரசியல் வருகை தமிழக அரசியலில் அனைத்து கட்சிகளிடமும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை. தமிழகத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் தமிழன் அல்லாதவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் ஆண்ட போது ஏன் இவர்கள் தடுக்க முயற்சிக்கவில்லை. ஏன் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்தனர் என்பது தெரியவில்லை. ஆனால் பொதுமக்கள் கைகளில்தான் பொன்னான ஓட்டு என்ற துருப்பு சீட்டு உள்ளது. அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது. இதை மாற்று கட்சிகள் மனதில் கொள்ள வேண்டும். ரஜினி ஒரு கன்னடன் என்று பிரசாரம் செய்தால் மட்டும் தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் கேட்கப் போகிறார்களா என்ன?. அவர்கள் கண்களை மூடிக் கொண்டு ஓட்டு போட தயாராகிவிட்டனர்.  ஆனால் திராவிட கட்சிகளை ரஜினியின் அரசியல் வியூகம் வீழ்த்திடுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label