OUR CLIENTS
காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் ஒருபுறம் மண் திருட்டு! மற்றொருபுறம் ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம்! சமூகவிரோதிகள் பிடியில் இருந்து ஏரி மீட்கப்படுமா?
காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் ஒருபுறம் மண் திருட்டு! மற்றொருபுறம் ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம்! சமூகவிரோதிகள் பிடியில் இருந்து ஏரி மீட்கப்படுமா? Posted on 12-Jan-2018 காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் ஒருபுறம் மண் திருட்டு! மற்றொருபுறம் ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம்! சமூகவிரோதிகள் பிடியில் இருந்து ஏரி மீட்கப்படுமா?

வேலூர், ஜன.12-
வேலூர் மாவட்டம் என்றாலே மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். ஆனால் பணம் புரளும் மாவட்டமாகும். இங்கு பணப்புழக்கத்துக்கு பஞ்சமே இல்லை. இந்நிலையில் காட்பாடி தாலுகா, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 2&வது வார்டு பள்ளிக்குப்பத்தில் உள்ள ஏரியில் இருந்து எவ்வித முன்அனுமதியும் பெறாமல் டிராக்டர்கள், இருசக்கர வானங்கள் மற்றும் டிப்பர் லாரிகளில் மண் லோடு லோடாக திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், காட்பாடி வட்டாட்சியர் என்று பலருக்கும் தொலைபேசி வாயிலாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக விட்டுவிடுகிறார்களாம். 

தினமும் மண் திருடப்பட்டு கடத்தப்படுகிறது. பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் கடத்தல் கனகச்சிதமாக நடக்கிறது. கனிமவளத்துறையினரும் இந்தப்பகுதிக்கு வருவதே இல்லை. காட்பாடி வருவாய் வட்டாட்சியர் பாஸ்கரன் எதைப்பற்றியும் கண்டுகொள்வதே இல்லை. அவர் செல்போனில் பேசுவதற்கே நேரம் போதவில்லை போலிருக்கிறது. வரும் ‘ப’ வைட்டமின்களை கணக்கிட்டு பெற்றுக் கொள்வது, வராத கணக்குகளை தேடிச் சென்று பெறுவது என்று வசூல் வேட்டையில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். யாரையும் எந்த வேலையும் பார்க்க விடாமல் இவர் மட்டுமே கல்லா கட்டுவதில் குறியாக உள்ளார். பள்ளிக்குப்பம் ஏரியை காப்பாற்றுவது எப்படி என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளிக்குப்பம் கிராமத்தில் வாழும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. ஒருபுறம் ஏரி அருகில் விவசாயம் செய்வோர் மெல்ல மெல்ல ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வரத் தொடங்கியுள்ளனர். 

ஆதலால் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் ஆகியோர் இந்த ஏரியின் பரப்பளவை அளந்து அரசு இடத்தை போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும். ஏரியில் எலக்ட்ரீஷியன் ஒருவர் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அருகில் விவசாயம் செய்பவர்களையும் மிரட்டி ஏரி புறம்போக்கு பகுதிகளை வளைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் பள்ளிக்குப்பம் ஏரியை போர்க்கால அடிப்படையில் அளவீடு செய்து அரசுக்குச் சொந்தமான இடத்தை வருவாய்த்துறையினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இயற்கை வளங்களை சுரண்டி ஏகபோகமாக வாழும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயக்கம் காண்பிக்க கூடாது. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளபடி நீர்நிலைகளை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டாது என்றும் தெள்ளத்தெளிவாக நீதியரசர் அறிவித்துள்ளார். இந்த உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடக்க காட்பாடி வருவாய்த்துறையினர் முன்வர வேண்டும் என்பது மட்டுமே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு அலுத்துப்போன சமூக ஆர்வலர்கள் தற்போது பத்திரிகைகளை நாட ஆரம்பித்துள்ளனர். ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை முன்வர வேண்டும். பள்ளிக்குப்பம் ஏரி மீட்கப்படுகிறதா? அல்லது அப்படியே கேட்பாரற்று விடப்போகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர் ராமன் விடும் அம்பில்தான் முடிவு உள்ளது. அரசும், அரசு அதிகாரிகளும் மனது வைத்தால் மட்டுமே ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் சமூகவிரோதிகளின் முகத்திரையை கிழித்தெரிய முடியும். அவர்களை வளர்த்துவிடும் முயற்சியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் மறைமுகமாக கூட ஈடுபடக் கூடாது என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label