OUR CLIENTS
ரசாயன ஆலைகளால் குடிநீருக்கே அல்லாடும் பரிதாபம்: கடலூர் பகுதிவாழ் மக்கள் செய்வதறியாது திகைப்பு!
ரசாயன ஆலைகளால் குடிநீருக்கே அல்லாடும் பரிதாபம்: கடலூர் பகுதிவாழ் மக்கள் செய்வதறியாது திகைப்பு! Posted on 12-Jan-2018 ரசாயன ஆலைகளால் குடிநீருக்கே அல்லாடும் பரிதாபம்: கடலூர் பகுதிவாழ் மக்கள் செய்வதறியாது திகைப்பு!

கடலூர், ஜன.12-
இந்தியாவின் பல மாநிலங்களிலும் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனத்தை வெளியேற்றியது போல் கடலூர் சிப்காட்டிலும் மூடப்பட்ட ஸ்பிக் பார்மா விக்டரி வெடிமருந்து தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாடு வாரியம் உத்தரவு போட்டது. ஆனால் அந்தந்த நிறுவனங்கள் பூமிக்கடியில் புதைத்துவிட்டுச் சென்றுவிட்டன. மேலும் தற்போது இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகளிலும் சட்டவிரோதமாக கழிவுகளை வெளியேற்றி வருகிறார்கள். இதனால் பல ஆண்டுகளாக குடிக்காடு ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடு பகுதிகளில் உள்ள  பல்வேறு கிராமங்களிலும் துர்நாற்றம் வீசியும் மழைநீரில் கரைந்த பைசிலியா ரசாயனம் கலந்த தண்ணீர் ஊற்று போல் பீரிடுகிறது.

இந்த தண்ணீர் ஈச்சங்காடு வாய்க்கால் மூலம் உப்பனாறு வழியாக கடலுக்கு செல்கிறது. இதனால் இப்பகுதி நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளது. கேப்பர்மலையில் இருந்து குடிகாடு பஞ்சாயத்துக்கு வரும் தண்ணீரை மட்டுமே மக்கள் அனைத்து பணன்பாட்டுக்கும் நம்பியுள்ளனர். நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளது என்ற ஆய்வறிக்கைகள் உறுதிபடுத்தப்பட்ட பின்னரும் சிப்காட் பகுதியில் புதிய மற்றும் இயங்கி கொண்டிருக்கிறது தொழிற்சாலைகளின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்து வருவது பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற நிலையைத்தான் உணர்த்துகிறது.

Êசமீபத்தில் ஆய்வுக்கு வந்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சில தொழிற்சாலைகளின் பராமரிப்பு சரியில்லை என்று ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அபாயகரமான கழிவுகளை சேமித்து அறிவியல்பூர்வமான முறையில் செயல்படும் கும்மிடிப்பூண்டி நிறுவனத்துக்கு குறைந்த அளவில் மட்டுமே கழிவுகளை அனுப்புகின்றனர். இதுபற்றி புகார் செய்தால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவிற்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுப்பதோடு சரி. ரசாயன கழிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமலே டெஸ்ட் எடுத்து குறிப்பிட்ட வரையறைக்குள் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இது எப்படி சாத்தியப்படும் என்று ஆவேசப்படுகிறார்கள்.
சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு உறுப்பினர் புகழேந்தி, கடலூர் சமூக ஆர்வலர் நிஜாமுதீன், குடிக்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பற்ற முறையில் ரசாயனங்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப் பகுதியில் வசிப்பவர்களை தலைவலி, வாந்தி, மூச்சுத்திணறலுக்கும், மயக்க நிலைக்கும் ஆளாக்குகிறது. தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் கலந்த நீரை பருகுவதால் ஆடு, மாடுகள் இறந்து போகின்றன. இதுதொடர்பாக தாசில்தாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. அந்த நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு மக்கள் விரோத போக்கை தாசில்தார் கடைப்பிடிப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஈச்சங்காட்டிலிருந்து உப்பனாறு செல்லும் ஓடை வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரி கான்கிரீட் சுவர் அமைத்து மூடித்தர வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தபகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதை மட்டும் இதுநாள் வரை எந்த அரசோ, அரசு அதிகாரிகளோ நிறைவேற்றித் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் என்றால் விஷமாகி வரும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. மனிதர்கள் வாழத்தகுதியற்ற பூமியாக கடலூர் மெல்ல மெல்ல மாறி வருகிறது. சிப்காட் தொழிற்சாலைகளால் ஈச்சங்காடு அருகேயுள்ள குடிக்காடு , சோனஞ்சாவடி, தைக்கால் தோணித்துறை, சங்கிலிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இங்கிருந்து செல்லும் ரசாயன கழிவுநீர் உப்பனாற்றில் கலக்கிறது. 

அங்கிருந்து அது கடலில் கலக்கிறது. இதனால் மீன்வளம் முற்றிலும் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சிப்காட் தொழிற்சாலைகளின் மாசு குறித்து மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஐந்தாண்டுகளாக ஆய்வு கூட்டமே நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இனிமேலாவது நடத்தப்பட வேண்டும் என்று இந்தப்பகுதிவாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபம் மாவட்டத்தில் பணியாற்றியபோது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நிலத்தடி நீருக்காக ஆறு வாய்க்கால்களை மண்வெட்டி கொண்டு தானே வெட்டி தூர்வாரியவர். இப்போது கடலூர் பகுதியில் நிலத்தையும், காற்றையும் மாசுவிடம் இருந்து காப்பாற்றாமல் விட்டுவிடுவாரா என்ன?. பிரசாந்த் மு.வடநேரே மற்ற ஆட்சியர்களில் இருந்து சற்று வித்தியாசமாக சிந்தித்து நடவடிக்கை எடுப்பதில் திறமையானவர். இவரது பணிக்காலத்தில் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படுகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label