OUR CLIENTS
ஆவணி மாத ராசி பலன்கள்
ஆவணி மாத ராசி பலன்கள் Posted on 17-Aug-2016 ஆவணி மாத ராசி பலன்கள்

மேஷம்
உண்மைக்காக உரக்க குரல் கொடுக்கும் நீங்கள், அதர்மத்தை தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள். உடனடி முடிவுகள் எடுக்கும் நீங்கள், மனதிற்கு பிடித்தவர்களை பாதுகாப்பதிலும் வல்லவர்கள். இந்த மாதம் முழுக்க உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 5ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதிலே பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். 5ம் இடத்திலேயே ராகுவும் தொடர்வதால் அவ்வப்போது மனஇறுக்கம் உண்டாகும்.

ராசிக்கு 8ல் சனி அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக நீடிப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும் . 26ம் தேதி முதல் தனாதிபதி சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைவதால் கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 9ம் தேதி முதல் சனியை விட்டு விலகி 9ம் இடத்தில் அமர்வதால் முன்கோபம், டென்ஷன், ரத்த அழுத்தம் குறையும். வி.ஐ.பிகள் அறிமுகமும் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், குரு 6ல் மறைந்திருப்பதால் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

மாணவ, மாணவிகளே!
கணிதம், அறிவியல் பாடத்தில் அக்கறை காட்டுங்கள். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

கன்னிப் பெண்களே!
உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மேல்மட்டத்தில் உதவிகள் கிடைக்கும்.

கேது லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களால் சிறுசிறு பிரச்னைகள் வெடிக்கும். அனுசரித்துப் போவது நல்லது. ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், கன்ஸ்ட்ரக்சன் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைபார்க்க வேண்டியது வரும். உயரதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை வேறு நிறுவனம் வாங்க வாய்ப்பிருக்கிறது.

கலைத்துறையினரே!
உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

விவசாயிகளே!
விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையாலும், யதார்த்தமான பேச்சாலும் இழந்ததை எட்டிப்பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 18, 19, 26, 27, 28, செப்டம்பர் 3, 4, 5, 6, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 7ம் தேதி மாலை மணி 6.15 முதல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் எதிலும் அவசரம் வேண்டாம்.

பரிகாரம்:
திருவையாறு ஐயாறப்பரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

ரிஷபம்
எதிலும் வித்தியாசத்தை விரும்பும் நீங்கள், புள்ளி விவரங்களுடன் பேசுவதில் வல்லவர்கள். கலைநயம் கொண்ட நீங்கள், கற்பூர புத்தி உள்ளவர்கள். காசு பணத்தை விட, நேசத்தையும், நிஜத்தையும் காதலிப்பவர்கள். உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. கொஞ்சம் வசதி, வாய்ப்புகள் கூடும். வருமானமும் உயரும்.

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சூழ்ச்சியாலும், பிரச்னையாலும் வேலையை இழந்தவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலும் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் ராசிநாதனான சுக்கிரன் 25ந் தேதி வரை ராகுவுடன் நிற்பதால் சளித் தொந்தரவு, கணுக்கால் வலி, இன்ஃபெக்சன் போன்றவை ஏற்படக்கூடும்.

ஆனால் 26ம் தேதி முதல் ராகுவை விட்டு சுக்கிரன் விலகுவதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். 4ம் வீட்டில் ராகு தொடர்வதால் வீடு பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். தாயாருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். தாய்வழி உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உங்களின் யோகாதிபதிகளான சூரியனும், புதனும் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும்.

ஷேர் மூலம் பணம் வரும். திடீர் பணவரவு உண்டு. பெற்றோரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களும், ரத்தினங்களும் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய காலி மனையை விற்று உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள். சிலர் கிரகப்பிரவேசமும் செய்வீர்கள். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கங்கள் நீங்கும். 9ம் தேதி முதல் செவ்வாய் 8ம் வீட்டில் மறைவதால் மனஉளைச்சல், சிறுசிறு நெருப்புக் காயங்கள், உடன்பிறந்தவர்களுடன் சச்சரவு, வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து நீங்கும்.

மாணவ, மாணவிகளே! உங்களுடைய திறமைக்கு பாராட்டு கிடைக்கும். பேச்சு, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். திருமணமும் கூடி வரும்.

அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். போட்டிகளை முறியடித்து கூடுதல் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, ஆடை வடிவமைப்பு, ஜுவல்லரி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகைமை நீங்கும். பெரிய பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், கேது 10ல் நிற்பதால் பணிகளை முடிப்பதில் தோய்வு ஏற்படக்கூடும்.

கலைத்துறையினரே! நீண்ட நாட்களாக தள்ளிப் போன நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும்.

விவசாயிகளே! மரப்பயிர்கள், கரும்பு மூலமாக லாபம் அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 18, 21, 22, 29, 3,0 செப்டம்பர் 6, 7, 8, 9, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 10, 11 மற்றும் 12ம் தேதி மதியம் 2.30 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.


மிதுனம்
மரம், செடி, கொடிகளை நேசிக்கும் நீங்கள், மனித நேயம் அதிகமுள்ளவர்கள். சபை நாகரீகம் அறிந்த நீங்கள், மற்றவர்களை மரியாதையாக நடத்துவதில் வல்லவர்கள். இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டிலேயே சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும்.

சனியும், ராகுவும் வலுவாக தொடர்வதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சளைக்காமல் போராடும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். ஷேர் பணம் வரும். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் மதிப்பு கூடும். குரு 4ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் உடல் அசதி, சோர்வு, மறைமுக விமர்சனங்கள், தாயாருடன் விவாதங்கள், 9ம் தேதி முதல் செவ்வாய் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கயிருப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வந்து நீங்கும். கணவன், மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பை வலி வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.

மாணவ, மாணவிகளே!
வகுப்பாசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

வியாபாரத்தில் ஏற்கனவே செய்து கொண்டிருந்த தொழிலை விட்டு விட்டு புது தொழில் தொடங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கடையை மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கட்டிட உதிரி பாகங்கள், லாட்ஜிங், போர்டிங் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும்.

கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

விவசாயிகளே!
பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த நிலத்தை மீதிப் பணம் தந்து கிரயம் செய்வீர்கள். அதிரடி முடிவுகளால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24, 31, செப்டம்பர் 1, 8, 9, 10, 11, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17, 18ம் தேதி மதியம் மணி 1.15 வரை மற்றும் செப்டம்பர் 12ம் தேதி மதியம் மணி 2.30 முதல் 13 மற்றும் 14ம் தேதி இரவு 9.00 மணி வரை உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: கும்பகோணம், ஆடுதுறையிலுள்ள ஆபத்சகாயேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.

கடகம்
எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட நீங்கள், மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணம் கொண்டவர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு உங்களைப் பாடாய்படுத்திய சூரியன் இப்போது ராசியை விட்டு விலகி தனஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பணத்தட்டுப்பாடு ஓரளவு குறையும். 9ம் தேதி முதல் பிரபல யோகாதிபதியான செவ்வாய் பகவான் சனியை விட்டு விலகி 6ம் வீட்டில் அமர்வதால் வீண் விரயங்கள் நீங்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். மனைவிக்கு ஏற்பட்ட கர்ப்பச்சிதைவு நீங்கும்.

குழந்தை தங்கும். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். ஆனால், சனிபகவான் 5ம் இடத்திலேயே தொடர்வதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். அவர்களின் நட்பு வட்டத்தைக் கண் காணிப்பது நல்லது. 3ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் வி.ஐ.பிகளுடன் கவனமாகப் பழகுங்கள். வரம்பு மீறிப் பேச வேண்டாம். எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.

மாணவ மாணவிகளே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது. சக மாணவர்களின் ஆதரவுகிட்டும்.

கன்னிப் பெண்களே!
மேற்கல்வி நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் அமையும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களுடைய பேச்சிற்கு மரியாதை கூடும். எதிர்க்கட்சியினரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கட்சிக்காரர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்து சிக்கல்கள் நீங்கும். துரித உணவகம், பெட்ரோகெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கூடும். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.

உத்யோகத்தில் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களைப் பற்றி குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களுடைய கலைத்திறன் வளரும்.

விவசாயிகளே! புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். பக்கத்து நிலத்துக்காரருடனான மோதல்கள் குறையும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 23, 24, 25, 26, செப்டம்பர் 1, 4, 6, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 18ம் தேதி மதியம் மணி 1.15 முதல் 19, 20ம் தேதி மாலை மணி 5.30 வரை மற்றும் செப்டம்பர் 14ம் தேதி இரவு மணி 9.00 முதல் 15, 16ம் தேதி வரை மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.

பரிகாரம்:
சென்னை, திருவொற்றியூரிலுள்ள பட்டினத்தார் சமாதிக்கு சென்று வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.


சிம்மம்
நல்ல நிர்வாகத் திறமையும், பரந்த அறிவுத் திறனும் கொண்ட நீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றுவதில் வல்லவர்கள். ராஜ கிரகமான குருபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். எதிர்ப்புகள் விலகும். வழக்கு சாதகமாகும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு முன்னேறுவீர்கள்.

வருமானமும் கணிசமாக உயரும். வசதி, வாய்ப்புகள் கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிநாதன் சூரியன் 12ல் மறைந்திருந்ததால் அலைச்சலும், காரியத் தடைகளும், எதிர்மறை எண்ணங்களும், எதிர்ப்புகளும் இருந்ததே! ஆனால், தற்சமயம் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சிபெற்று உங்கள் ராசியிலேயே வலுவாக அமர்வதால் எளிதாக எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

அரசியலில் செல்வாக்கு கூடும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். கோபங்கள் குறையும். புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் பயணிப்பதால் நண்பர்கள் மதிப்பார்கள். உறவினர்களும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு, மனை அமையும். ஆனால், 9ம் தேதி முதல் உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 5ம் வீட்டில் அமர்வதால் மனக்குழப்பம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சகோதரங்கள் தன்னை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் அநாவசியமாக மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சமூக தீர்வு காண்பது நல்லது. அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். சிலர் வீடு மாறுவீர்கள்.

மாணவ, மாணவிகளே!
சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். ஆசிரியர்கள் பாராட்டும்படி அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! நேர்முகத் தேர்வு முடிந்து அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும். புது வேலையில் சேர்வீர்கள். காதல் இனிக்கும்.

அரசியல்வாதிகளே! அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். போட்டிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

வியாபாரத்தில் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதுடன் சந்தை நிலவரத்தையும் அறிந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடையை மாற்றுவது, விரிவுபடுத்துவது உங்கள் ஆசைப்படி நிறைவேறும். வேலையாட்கள் பொறுப்பாக செயல்படுவார்கள். ஸ்பெக்குலேஷன், கன்சல்டன்சி, மூலிகை வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்யோகத்தில் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். இடமாற்றமும் சாதகமாகும். உயரதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கலைத்துறையினரே!
யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். திரையிடாமல் தடைபட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும்.

விவசாயிகளே!
பூச்சித் தொல்லை குறையும். வற்றிய கிணறில் நீர் சுரக்கும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 18, 19, 26, 27, 28, செப்டம்பர் 4, 5, 6, 8, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 20ம் தேதி மாலை மணி 5.30 முதல் 21 மற்றும் 22ம் தேதி இரவு 8.30 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னி
எறும்பைப்போல் அயராது உழைத்து, தேனி போல் சேமிக்கும் இயல்பும் உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். ராஜ தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வீடு, மனை விற்க வேண்டுமென்று நினைத்தீர்களே! வந்து வந்துப் போனார்களே! முன் பணம் தந்து திருப்பி வாங்கிக் கொண்டார்களே! அந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வீடு, மனை போகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். உங்கள் ராசிநாதனான புதனும், தனாதிபதி சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். தள்ளிப்போன காரியங்களும் நல்ல விதத்தில் முடியும். நட்பால் ஆதாயமடைவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ஜென்மகுரு தொடர்வதால் சில நேரங்களில் வெறுமையை உணருவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.

மாணவ, மாணவிகளே!
விளையாடும் போது கவனம் தேவை. கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

கன்னிப் பெண்களே!
பரபரப்பாக காணப்படுவீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

அரசியல்வாதிகளே!
தொகுதி மக்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். கேது 6ல் நிற்பதால் வியாபாரம் சூடுபிடிக்கும். லாபம் ரெட்டிப்பாகும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்களின் ஆதரவு பெருகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கடையை சிலர் விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். இரும்பு, அழகு சாதனப் பொருட்கள், கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையென அடிக்கடி ஆதங்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். மூத்த கலைஞர்களும் உங்களுடைய பெயரை பரிந்துரை செய்வார்கள்.

விவசாயிகளே
! மகசூல் அதிகரிக்கும். அடகிலிருந்த பத்திரங்கள், நகைகளை மீட்க வழி பிறக்கும். சவால்களையும், நெருக்கடிகளையும் சமாளித்து முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20, 21, 28, 29, 30, 31, செப்டம்பர் 6, 8, 9, 10, 11, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்
: ஆகஸ்ட் 22ம் தேதி இரவு மணி 8.30 முதல் 23, 24ம் தேதி வரை பேச்சால் பிரச்னைகள் வந்து போகும்.

பரிகாரம்: திருச்சிக்கு அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதியை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

துலாம்
எல்லையில்லா அன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நீங்கள், மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயம் உண்டு. தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய எதிரிகள் நண்பர்களாவார்கள். புதுபதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ராசிநாதன் சுக்கிரன், பாக்யாதிபதி புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 9ம் தேதி முதல் செவ்வாய் சனியை விட்டு விலகி 3ம் வீட்டில் அமர்வதால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். எதிர்பார்த்த விலைக்கு உங்கள் வீட்டு, மனையை விற்று விட்டு வேறு இடத்தில் வீடு அல்லது மனை வாங்கும் அமைப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பாதச் சனி தொடர்வதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. பார்வைக் கோளாறு, கண் எரிச்சல், பல் மற்றும் காது வலி வந்து நீங்கும். குரு 12ம் இடத்தில் மறைந்திருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது தூக்கத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

மாணவ, மாணவிகளே!
உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள்.

ராகு லாப வீட்டில் தொடர்வதால் வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தை அறிந்து் கொள்வீர்கள். வங்கிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

கலைத்துறையினரே
! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே!
அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். தொலைநோக்குச் சிந்தனையாலும், புதிய அணுகுமுறையாலும் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 21, 22, 23, 24, 30, 31, செப்டம்பர் 1, 2, 3, 8, 9, 10, 11, 15.

சந்திராஷ்டம தினங்கள்:
ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:
வேலூர் அருகேயுள்ள சேண்பாக்கம் விநாயகரை தரிசித்து வாருங்கள், முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.


விருச்சிகம்
மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் உங்களுடைய பிரச்னைகள் பாதியாக குறையும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்தை அழகுபடுத்தி, விரிவுபடுத்துவீர்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அக்கம், பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். ஆனால், ஜென்மச் சனி தொடர்வதால் நெஞ்சு வலி, நரம்புக் கோளாறு, தலைச்சுற்றல், கால் சுளுக்கு வந்துபோகும்.

இதுவரை உங்கள் ராசியில் நிற்கும் சனியுடன் சேர்ந்திருந்த ராசிநாதன் செவ்வாய் 9ம் தேதி முதல் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் போராட்டங்கள், முன்கோபம் குறையும். என்றாலும் கறாராகவும், காரசாரமாகவும் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு, கண் எரிச்சல், காது வலி, பல் வலி, சகோதர வகையில் சங்கடங்கள், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து நீங்கும்.

மாணவ, மாணவிகளே!
விளையாட்டு, கலைப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னிப் பெண்களே!
காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். சிலருக்கு வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே!
பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பகைமை பாராட்டி வந்தவர்கள் நண்பர்களாவார்கள். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரம் தழைக்கும். புதிதாக முதலீடு செய்வீர்கள். போட்டிகள், எதிர்ப்புகளையும் தாண்டி இந்த மாதத்தில் லாபம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் மதிப்பார்கள். வேலையாட்களிடம் கோபப்படாதீர்கள். கமிஷன், ஏற்றுமதி, துணி, லாட்ஜிங் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு புது வேலையும் அமையும். சூரியன் வலுவாக இருப்பதால் மூத்த அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். என்றாலும் ராகுவும் 10ல் நிற்பதால் வேலைச்சுமை இருக்கும்.

கலைத்துறையினரே!
சம்பள பாக்கி கைக்கு வரும். பழைய கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விவசாயிகளே!
எண்ணெய் வித்துக்களால் லாபமடைவீர்கள். அக்கம்பக்கம் நிலத்தாருடன் இருந்து வந்த பகை உணர்வு மாறும். ஆளுமைத் திறனும், அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடி வரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 18, 19, 23, 24, செப்டம்பர் 1, 2, 3, 4, 11, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:
ஆகஸ்ட் 27, 28 ஆகிய தேதிகளில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்:
மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

தனுசு
ஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தரும் என்பதை நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்படாதவர்கள். கேது உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் வலுவாக இருப்பதால் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். உங்களின் நிர்வாகத் திறனும் கூடும். தள்ளிப் போடாமல் உடனடி முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். கடந்த ஒரு மாதகாலமாக 8ல் மறைந்திருந்த சூரியன் இப்போது 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. தந்தையார் உறுதுணையாக இருப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை, பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தந்தைவழி உறவினர்கள் வீட்டு திருமணம், புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி ஆதரவாகப் பேசுவார்.

உங்களின் புது திட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பார். கௌரவப் பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். ஆனால் உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 9ம் தேதி முதல் ராசியிலேயே அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவினங்கள் உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கப்பாருங்கள். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படக்கூடும். வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக பிரேக், எரிபொருள் எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வழக்குகளிலும் கவனம் தேவை.

மாணவ, மாணவிகளே! படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள். வகுப்பாசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்களில் கலந்துகொண்டு முக்கிய நிர்வாகிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. 10ல் குரு நிற்பதால் புதியவர்களை நம்பி கடன் தர வேண்டாம். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். புதியவர்களின் ஆலோசனைப்படி முதலீடுகளும் செய்ய வேண்டாம். புரோக்கரேஜ், மளிகை, ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மூத்த அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொருசாரார் உங்களுக்கு எதிராகவும் செயல்பட வாய்ப்பிருக்கிறது. புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள்.

விவசாயிகளே! டிராக்டர், களப்பையெல்லாம் புதிதாக வாங்குவீர்கள். கரும்பு மற்றும் மரப்பயிர்கள் லாபம் தரும். கடின உழைப்பால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்
: ஆகஸ்ட் 17, 18, 19, 20, 25, 26, 27, 28, செப்டம்பர் 4, 5, 6, 7, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31ம் தேதி காலை 11.30 மணி வரை மறைமுகப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

பரிகாரம்:
திருச்சி, உறையூர் வெக்காளி அம்மனை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியரை சென்று சந்தித்து உதவி செய்யுங்கள்.

மகரம்
ஊராரின் தூற்றல் களுக்கு செவி சாய்க்காது வாழ்வின் உயரத்தை நோக்கி செல்லும் குணமுடைய நீங்கள், தடைகளையும் படிக்கட்டுகளாக நினைத்து பயணிப்பவர்கள். குருபகவான் ராசிக்கு 9ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். 8ல் சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பண வரவு அதிகரிக்கும். வீடு, வாகன வசதி பெருகும். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும். வங்கி லோன் கிடைக்கும். உறவினர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

9ந் தேதி முதல் செவ்வாய் 12ல் மறைவதால் தூக்கமின்மை, திடீர் பயணங்கள், அவ்வப்போது மனஇறுக்கம், மனைவிக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். மலையாளம், தெலுங்குப் பேசுபவர்கள் உதவுவார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். ஆனால், ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். மற்றவர்கள் விஷயத்தில் நியாயம் பேசப்போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்கள் சிலர் உங்களை தவறானப் போக்கிற்குதூண்டுவார்கள்.

மாணவ, மாணவிகளே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

கன்னிப் பெண்களே!
உங்களின் நீண்டநாள் கனவுகள் நனவாகும். ஆடை, ஆபரணம் சேரும்.

அரசியல்வாதிகளே!
எதிர்க் கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்பை ஒப்படைக்கும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். செல்வாக்குள்ள நபரை பங்குதாரராக சேர்த்துக் கொள்வீர்கள். ஏஜென்சி, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், பதிப்பகம் வகை களால் லாபமடைவீர்கள்.

கலைத்துறையினரே!
மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் குறைந்து ஆக்கப்பூர்வமான பாதையில் பயணிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
ஆகஸ்ட் 19, 20, 21, 22, 27, 28, 29, செப்டம்பர் 6, 7, 8, 9, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 31ம் தேதி காலை மணி 11.30 முதல் மற்றும் செப்டம்பர் 1, 2ம் தேதி இரவு 8 மணி வரை வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள்.

பரிகாரம்: செங்கல்பட்டு, வேடந்தாங்கலுக்கு அருகேயுள்ள திருமலைவையாவூர் வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு வாருங்கள். முதியோர்களுக்கு செருப்பும், கம்பளியும் வாங்கிக் கொடுங்கள்.

கும்பம்
மற்றவர்கள் பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து செய்யும் ஆற்றலுடைய நீங்கள், தன்னை மதியாதவர் களுக்கும் மறுக்காமல் உதவும் மனசு கொண்டவர்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் கடினமான காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகளுண்டு. சப்தமாதிபதி சூரியன் 7ம் இடத்திலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.

மனைவி நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். யோகாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் வீட்டில் நிற்பதால் எதையும் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள்.

ஆனால், குரு ராசிக்கு 8ல் மறைந்திருப்பதால் பழைய கடன் பிரச்னைகளை நினைத்து கலங்குவீர்கள். இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் இருக்கும். ராகு, கேதுவும் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

மாணவ, மாணவிகளே!
சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றேபடியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே!
காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.

அரசியல்வாதிகளே!
கோஷ்டி பூசலிலிருந்து விடுபடுவீர்கள். சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். கடன் தர வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கடையை இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. பங்குதாரர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கட்டிடம், வாகனம், உணவு வகைகளால் லாபமடைவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்யோகத்தில் எல்லோரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். மூத்த அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி சில சலுகைகளை அவர்களுக்கு பெற்றுத் தருவீர்கள். சம்பளப்பாக்கி கைக்கு வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

விவசாயிகளே!
விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். நெல், வாழை வகைகளால் ஆதாயமடைவீர்கள். மனநிம்மதியும், பணவரவும் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24, 29, 30, 31, செப்டம்பர் 1, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 2ம் தேதி இரவு 8.00 மணி முதல் 3, 4, மற்றும் 5ம் தேதி காலை மணி 6.45 வரை அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:
உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஷீர்டி பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு ஆடைகளை வாங்கிக் கொடுங்கள்.


மீனம்
எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வரை முறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளையுள்ளமும், வெளிப்படையான பேச்சும் கொண்டவர்கள். ராசிநாதன் குருபகவானும், நிழல் கிரகமான ராகுவும் சாதகமாக இருப்பதால் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சி களால் வீடு களைக்கட்டும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பங்குச்சந்தை மூலமாக பணம் வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். வேற்றுமதம், மாற்றுமொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். கடந்த ஒரு மாத காலமாக 5ல் அமர்ந்து உங்களைப் பாடாய்படுத்தி, எதிலும் ஒரு தெளிவில்லாமல் செய்த சூரியன் இப்போது 6ம் வீட்டில் அமர்ந்ததால் குழப்பம், கோபம் நீங்கும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க புது வழி பிறக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 26ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் நுழைந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் பணவரவு உண்டு. வாகனம் சிலர் புதிதாக வாங்குவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். புதன் 6ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை, அலைச்சல், கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு வந்து போகும். உறவினர், நண்பர்களுடன் விவாதம் வேண்டாம். அவ்வப்போது உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும்.

மாணவ, மாணவிகளே! உற்சாகமாக படிப்பீர்கள். மதிப்பெண் உயரும். சக மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! ஆரோக்யம் சீராகும். பள்ளிக் கல்லூரி கால தோழியை சந்தித்து மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளே!
ராஜதந்திரத்தால் முன்னேறுவீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களின் ஆதரவால் சில முக்கிய வேலைகளை முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்களின் குறை, நிறைகளை அன்பாக சுட்டிக் காட்டி திருத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

உத்யோகத்தில் தொல்லை தந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். சக ஊழியர்கள் உங்களின் திடீர் வளர்ச்சியைக் கண்டு மதிக்கத் தொடங்குவார்கள். சிலருக்கு புது உத்யோக வாய்ப்புகளும், அயல்நாடு தொடர்புடைய வாய்ப்புகளும் வந்து சேரும்.

கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்கள் உங்களின் புது முயற்சியை ஆதரிப்பார்கள்.

விவசாயிகளே!
பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். பம்பு செட் பழுதாகி சரியாகும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பழைய நண்பர்களாலும், பிரபலங்களின் ஆதரவாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 19, 24, செப்டம்பர் 1, 2, 3, 4, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 5ம் தேதி காலை மணி 6.45 முதல் 6 மற்றும் 7ம் தேதி மாலை மணி 6.15 வரை யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசித்து வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்ற வரை உதவுங்கள்.

Label