OUR CLIENTS
அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள் யார்? யார்?
அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள் யார்? யார்? Posted on 23-Jan-2018 அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள் யார்? யார்?

சென்னை, ஜன.23-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர காரணமானவர்கள் யார்? யார்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆள் இல்லாத நிலை நிலவுகிறது. கடந்த 2001ல் ல் இருந்து 2006 வரை மத்திய காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அந்த நேரம் ஜெயலலிதா தான் பட்ட துன்பத்தை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே நடத்த ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதனால் தமிழக அரசு எழுந்து நடக்கும் அளவுக்கு பொருளாதாரம் குவிந்தது. இந்த வருவாயைக் கொண்டுதான் பல திட்டங்களை தீட்ட முடிவு செய்தார். அந்த காலகட்டத்தில் கேபிள் டிவியை வைத்து கொண்டு கருணாநிதியின் குடும்பம் பெரிய அளவு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருந்தது.

கேபிள் டிவியை வீட்டுக்கு வீடு கொண்டு வரும் திட்டத்தை தயார் செய்து வெற்றி பெற்றவர் சேலம் கல்யாணசுந்தரம். இன்று பாலிமர் டிவியின் அதிபராக இருக்கிறார். கேபிள் டிவியால் தனி ஒரு மனிதனுக்கு அதிக வருவாய் செல்வதை தடுக்க மாற்று ஆளை கொண்டு வருவதைவிட அரசே நடத்தலாம் என்ற முடிவோடு 2005 சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அதை தடுத்தவர்கள் கருணாநிதியும் அவரது பேரன் தயாநிதிமாறனும்தான். அளுநரை இருவரும் நேரில் சந்தித்து பேசிய விஷயம் மீடியாக்களில் வெளியானது. அதிமுக ஆட்சி இருக்கும் வரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. 

அடுத்து 2006 தேர்தல் வரும்போது அதிமுக வெற்றிபெற்றால் ஜெ., சொன்னதுபோல் அரசே கேபிள் நடத்த அனுமதி கிடைத்துவிடும். ஆகவே, அதிமுக தோற்கவேண்டிய வேலைகளை தீவிரமாக நடத்தினார்கள். தென்மாவட்டத்தில் முக்குலத்தோர் சமுதாய மக்கள், பார்வர்டு பிளாக் கட்சிக்கே தொடர்ந்து வாக்களிப்பதை அவர்களது கொள்கையாக வைத்திருந்தார்கள். 2006 தேர்தலில் அதிமுக கூட்டணி வராமல் பார்வர்டு பிளாக் கட்சியை தனிமைப்படுத்தினார்கள். அவர்கள் தனித்து நிற்பதற்கு வேண்டிய உதவிகளை மு.க.அழகிரி களமிறங்கி அவருக்கு தைரியத்தை கொடுத்து, சிங்கம் சின்னத்தில் நிற்பதற்கு வேண்டிய உதவிகளை செய்தவர் என்று மீடியாக்களில் செய்திகள் வெளியானது. தேர்தலில் களமிறங்கிய அதிமுக 30 தொகுதிகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வேண்டிய உதவிகளை சன் டிவி குழுமம் செய்த 2006ல் அதிமுக தோல்வியை தழுவியது. அன்று திமுக 96 இடங்களில் மட்டும்தான் வெற்றி கண்டது. இது நடந்து முடிந்த வரலாறு. 2011ம் ஆண்டு பொதுத்தேர்தல் வருகிறது. திமுக, காங்கிரஸ் உள்பட 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய நேரத்தில் தேமுதிக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பினர். இதனால் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் ஓட்டலில் தேமுதிக நிர்வாகிகளை ம.நடராஜனும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான பன்னீர்செல்வமும் தேமுதிக நிர்வாகிகளுடன் சந்தித்தபோது தேமுதிகவை சேர்ந்த கர்னல், இவர்தான் தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை வாங்கி தந்தவர் என்று பெருமையோடு சந்தித்தார். அதேநேரம் சில மாதங்களுக்கு பின்னால் ஜெயலலிதாவை நேரடியாக சந்திக்க அனுமதி  வாங்கித்தரப்பட்டது. அந்தநேரம் பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிகவின் அவைத்தலைவராக இருந்தார். அவரும் இந்த கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியதால் தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த ஏற்பாட்டை முன்னின்று செய்தவர் ம.நடராசன் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வமும்தான். அடுத்த கட்ட கூட்டணிக்கு பெஸ்ட் ராமசாமியும், கொங்கு ஈஸ்வரனும், ம.நடராசனை பெசன்ட் நகர் இல்லத்தில் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்கள். அதற்கு முன்னால் இவர்கள் திமுக கூட்டணிக்கு அழைத்ததால் அதிகமான இடங்களை திமுக விட்டுத்தருவதுபோல் பேசியதால் ம.நடராசன் சொன்னது, ‘இன்றைக்கு சசிகலா தஞ்சாவூரில் இருக்கிறார், நாளை காலை 10 மணிக்கு இங்கு வந்துவிடுங்கள். நீங்கள் சசிகலா வாயிலாக ஜெயலலிதாவை பார்க்க ஏற்பாடு செய்கிறேன். அவர்களிடம் உங்களுக்கு வேண்டியதை கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு வேண்டியதை பெற்றுத்தருவார்கள் என்றார். இந்த பேச்சுவார்த்தை இரவு 11 மணிவரை பெசன்ட் நகரில் உள்ள நடராசன் வீட்டில் நடந்து கொண்டிருக்கும்போது, வெளியில் உளவுத்துறை அதிகாரிகளும், அழகிரியின் ஆதரவாளர்களும் நின்று கொண்டிருப்பதாக ஒரு தகவல் ம.நடராசனுக்கு வந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் நீங்கள் நாளைக்கு வாருங்கள் என்ற நம்பிக்கையோடு பெஸ்ட் ராமசாமியையும், கொங்கு ஈஸ்வரனையும் வாசல்வரை வந்து வழியனுப்பிய காட்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வெளியே வந்த அந்த கட்சியின் தலைவர்களை அழகிரியின் ஆதரவாளர்கள், கருணாநிதி வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக அன்று இரவே ம.நடராசனுக்கு தெரியவந்தது. மறுநாள் காலையில் பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும் திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டதாக தகவல் வெளியே வந் நடராசன் ஈரோட்டில் இருக்கும் செங்கோட்டையனிடம் தொடர்பு கொண்டு நான் கொங்கு மண்டலத் தலைவருடன் பேசி நாளை காலையில் ஜெயலலிதாவை நேரில் பார்க்க ஏற்பாடு செய்தும், அவர்கள் திமுக கூட்டணியில் போய் சேர்ந்து விட்டார்கள். அதைப்பற்றி கவலையில்லை. கொங்கு கவுண்டர் வகையறா மக்கள் அதிமுக பக்கம்தான் என்றுமே இருக்கிறார்கள். இனி போனவர்களை பற்றி கவலைப்படாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் தனியரசுக்கு தொகுதியை ஒதுக்கித்தந்து தேர்தல் பணியை தொடங்கினார்கள்.

அடுத்த கட்டமாக தேர்தலில் மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்க எதுவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒரு பக்கம் ம.நடராசன், அடுத்த பக்கம் முன்னாள் ஐஏஎஸ் பன்னீர்செல்வம். அடுத்து அப்துல்கலாமின் உதவியாளராக இருந்த பொன்ராஜ் மற்றும் சிலரும் ஒன்றுகூடி மக்களுக்கு வேண்டிய நலத்திட்டங்களை தயார் செய்து அதிமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றனர். இதற்காக ஜெயலலிதாவிடம் முன்அனுமதி பெற செய்தியை கார்டனுக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது நடராசன் வீட்டைச் சுற்றி உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருந்ததால் நாளை கொடுக்கலாம் என்றிருந்தபோது ஜெ, தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். உடனே இந்த திட்டங்களை தயார் செய்து கொண்டு கணினியில் இருந்து எந்த பேப்பரையும் எடுக்கா வண்ணம் கணினியையே கையில் எடுத்து கொண்டு இரவோடு இரவாக காரில் பயணம் செய்தனர். திருச்சிக்கு சென்று ஜெ., பார்வைக்கு ஒருசில மாற்றத்தோடு அதைத்தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்கள்.

2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் ம.நடராசனின் பங்கு அதிகளவு இருந்தது என்பதை உளவுத்துறை அதிகாரியான சந்திரசேகர் எஸ்.எஸ்.பி.க்கும், மு.க.அழகிரிக்கும், பெஸ்ட் ராமசாமிக்கும், ஈஸ்வரனுக்கும் நன்கு தெரியும். தேர்தல் வந்தது அதிமுக வெற்றி கண்டது. அந்த காலகட்டத்தில் எங்கள் திட்டங்களை அதிமுக களவாடி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வெற்றி கண்டார்கள் என்று கருணாநிதி சொன்னதற்கு யாருமே பதில் சொல்லவில்லை. « தர்தல் முதல் அறிக்கையை அதிமுகதான் வெளியிட்டது. அடுத்து திமுக வெளியிட்டது. தமிழக அரசியலில் இதுவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து எதிர்கட்சியாக செயலாற்றி வந்த வரலாற்றில் புதிய கட்சியான அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக வந்த வரலாறு புதியதாக அமைந்தது. 29 இடங்களில் தேமுதிகவும், 23 இடங்களில் திமுகவும் வெற்றிகண்டு திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய பெருமை விஜயகாந்த்துக்கு சேரும். ஆனால் ம.நடராசன் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் 2015க்கு முன்னாலேயே உங்களை நீக்கி விட்டார்களே நீங்கள் எப்படி தேர்தல் பணியாற்றியிருக்க முடியும் என்று கேட்டனர். இப்படி ஒரு விரிவான வரலாறு திரைமறைவில் நிகழ்ந்துள்ளது பலருக்கும் தெரியாது. அதிமுகவை பின்னால் இருந்து இயக்கியதே சாட்சாத் ம.நடராசன்தான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இப்படி தேர்தல் பணியாற்றி அதிமுக வெற்றிக்கு வித்திட்டுள்ளார் நடராசன் என்று சொன்னால் அது மிகையாகாது.

Label