OUR CLIENTS
ரஜினி, கமல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்!
ரஜினி, கமல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்! Posted on 23-Jan-2018 ரஜினி, கமல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்!

புதுச்சேரி, ஜன.23-
 ரஜினி, கமல் கட்சி தொடங்க மாட்டார்கள் என்று டிடிவி அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். புதுச்சேரியில் டிடிவி அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பஸ் கட்டண உயர்வை தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் செயல்படுத்தினால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும் நிலைதான் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் ஏற்படும். இது சேவைத்துறை. இதில் லாபத்தை நோக்கமாகப் பார்க்கக்கூடாது.

எங்கள் கட்சி அதிமுகதான். விரைவில் தேர்தல் வந்தால் ஒரு அமைப்பு தேவை என்ற அடிப்படையில்தான் டிடிவி தினகரன் பேசியுள்ளாரே தவிர, தனிக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இதில் எங்களுக்குள் குழப்பமில்லை. நாங்கள் ஒரு காலத்திலும் எடப்பாடி, ஓபிஎஸ்ஸை எப்போதும் ஆதரிக்கமாட்டோம். அதற்காக கையெழுத்து போட்டுத் தரவும் தயார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், எடப்பாடி பழனிசாமியையும், ஓ. பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க சம்மன் அனுப்பவில்லை. மேலும் அங்கிருந்த பல அமைச்சர்களையும் விசாரிக்கவில்லை. அதனால் இது ஒரு தலைப்பட்சமானது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும்.

தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு இந்த மோதல் அதிகரித்துள்ளது. விரைவில் ஒவ்வொருவரும் மாறி மாறி நீக்குவதாக அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து காரை ஏன் ஒப்படைத்தீர்கள் என்று நாஞ்சில் சம்பத்திடம் கேட்டதற்கு, “ ஓபிஎஸ் பெயரில் கார் இருந்தது. அதனால் அதைப் பயன்படுத்த உடன்பாடு இல்லை. அதனால் ஒப்படைத்து விட்டேன்” என்று குறிப்பிட்டார். பாஜகவும், ரஜினியும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேச்சு எழுந்துள்ளதே என்று சம்பத்திடம் கேட்டதற்கு,  “பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் ஆர்.கே. நகரில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும். இருவரும் இணைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது” என்று தெரிவித்தார். ஆர்.கே. நகர் முடிவு தொடர்பாக நடிகர் கமல் கடுமையாக விமர்சித்துள்ளாரே, விரைவில் பல நடிகர்கள் கட்சி தொடங்க உள்ளார்களே .அது உங்களுக்கு பாதிப்பா என்று கேட்டதற்கு, “உண்மையில் ரஜினி, கமல் கட்சி தொடங்க மாட்டார்கள்” என்று நாஞ்சில் சம்பத் பதிலளித்தார்.

Label