OUR CLIENTS
மானிய விலை ஸ்கூட்டர் அறிவிப்பு டிரைவிங் கற்க பெண்கள் ஆர்வம்!
மானிய விலை ஸ்கூட்டர் அறிவிப்பு டிரைவிங் கற்க பெண்கள் ஆர்வம்! Posted on 26-Jan-2018 மானிய விலை ஸ்கூட்டர் அறிவிப்பு  டிரைவிங் கற்க பெண்கள் ஆர்வம்!

கன்னியாகுமரி, ஜன.26-
 தமிழக அரசு சார்பில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அதன்படி இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் குமரி மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. தனியார் நிறுவனங்கள், கடைகள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுயதொழில், வியாபாரம், இதர பணிகள் மேற்கொள்வோர், அரசு திட்டங்கள் செயல்படுத்துவோர், சமுதாய நல அமைப்பாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள், மாவட்ட மக்கள் கற்றல் மையங்களில் பணிபுரியும் பெண்கள், வங்கி தொடர்புடைய பணிகளில் உள்ள பெண்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பெண்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் ஆவர். இத்துடன் இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வேண்டும். விண்ணப்ப வினியோகம் தொடங்கியது முதல் இதுவரை பெண்கள் மிகவும் ஆர்வமாக படிவங்களை வாங்கி விண்ணப்பித்து வருகின்றனர். பிப்ரவரி 5ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும். பிப்ரவரி 5ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மகளிர் வாங்கும் வாகன தொகையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீத மானிய தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும். மீதி தொகையை பயனாளி முழுவதுமாக வழங்கியோ அல்லது வங்கி கடனாகவோ செலுத்தலாம். 

மானிய விலையில் கிடைப்பதால் வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படியாவது ஒரு ஸ்கூட்டரை வாங்கிவிட வேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் டிரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும் என்னும் விதிமுறை இவர்களில் பலரது ஆர்வத்துக்கு தடையை ஏற்படுத்தி உள்ளது. பல பெண்களுக்கு ஸ்கூட்டர் ஓட்ட தெரிந்தும் அவர்களிடம் லைசென்ஸ் இல்லை. இன்னும் பலருக்கோ ஸ்கூட்டர் ஓட்டவே தெரியாது. இதுவரை அரசு பஸ்சையே நம்பியே இருந்த இவர்கள், தற்போது கட்டண உயர்வால் ஸ்கூட்டருக்கு மாற விரும்புகின்றனர். கூடுதலாக, அரசு மானியம் வேறு இவர்களை ஸ்கூட்டர் பக்கம் ஈர்த்து வருகிறது. இதனால் ஸ்கூட்டர் ஓட்ட தெரிந்து லைசென்ஸ் இல்லாத பெண்கள் உடனடியாக லைசென்ஸ் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். 

அதுபோல ஸ்கூட்டர் ஓட்ட தெரியாத பெண்கள் வேகமாக டிரைவிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிலர் பயிற்சி பள்ளி மூலமும், வேறு சிலர் சக நண்பர்களின் உதவியுடனும் டிரைவிங் பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் பல இடங்களிலும் காலியாக கிடக்கும் மைதானங்களில் தற்போது பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டி பயிற்சி பெறும் காட்சியை காண முடிகிறது. இதுபோல வருமான சான்றிதழ் பெற கூட்டுறவு வங்கிகள் மற்றும் இ&சேவை மையங்களில் காத்து கிடக்கும் பெண்களையும் பார்க்க முடிகிறது.

Label